சனி, 12 மே, 2012

கவிதை 23 - காவியக்காதல்


தாமரையை கையில் ஏந்தி , கண்ணீரை விழிகளில் சிந்தி,
காதலனுக்காக காத்திருந்தாள் அபூர்வ அழகி !
அம்புகளை வில்லால் ஏவி, எதிரிகள் கண்ணில் மண்ணை தூவி,
போர்க்களத்தில் வீரனாக திகழ்ந்தான் இளவரசனான காதலன் !
சூரியன் மறைந்து விடும் இன்னும் சில நிமிடங்களில் ....
தோல்வியைத்தழுவினர் எதிரிகள் நொடிகளில் ....
வெற்றியின் உச்சியை தொட்டு விட்டு,
காதலன் சிட்டாக பறந்தான் குதிரையில்;
பின்தொடர்ந்த எதிரி நாட்டு ஒற்றன் ஒருவன்,
குறிபார்த்தடித்தான் காதலன் முதுகில்;
முறைப்பெண்கள் பலர் இருக்க, காதலியை மட்டும் மணப்பதற்கு,
போர் தொடுக்க,வென்ற பின்னும் காதலனுக்கு
இந்த அகோர கதி ஏற்ப்பட்டதோ ....
அல்லது காதலர்களை பிரிக்க வில்லன்கள் பலர்
தீட்டிய சதி திட்டத்தால் காதலுக்குத்தான் களங்கம் நேரிட்டதோ ....
மலர் மாலையுடன் வருவான் என்று எதிர்பார்த்த காதலி
அதிர்ச்சியுடன் சிலையானாள் - இரத்த வெள்ளத்தில்
காதலனை கண்டபோது ......!
ஆனால் மங்கல வாத்தியம் முழங்கியது அகிலமெங்கும்
இரு ஆன்மாக்கள் ஒரு சேர கலந்து,
தெய்வீகக்காதலை மேம்படுத்தி,
புனிதக்காதலை சீராட்டி,
அமரக்காதலை நிலை நிறுத்தி,
சொர்க்கத்தை நோக்கி பயணம் தொடரும் போது .....!

வணக்கம்,
சிவசுப்பிரமணியன் ***

கவிதை 22 - கலியுக கிருஷ்ணா

புல்லாங்குழல் பிடித்து மூச்சுக்காற்றை ஸ்வரமாக வாசித்து
கோபியர் மனதை திருடும் ஆனந்தக்கண்ணா ***
வெண்ணைக்கு பதில் மண்ணைத்தின்று பூலோகத்தையே
தன் திருவாயில் மலரச்செய்த கோகுலக்கண்ணா ***
ஆலகால விஷம் நிறைந்த ஆதிசேஷனை தலையணையாக
கொண்டு ஆரவாரம் செய்யும் கோபாலக்கிருஷ்ணா ***
மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கு துணையாக இருந்து
அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்த அவதாரக்கிருஷ்ணா ***
பாலிய நண்பனான ஏழை குசெலனக்கு எழில் மாளிகை
அமைத்து கொடுத்த கொஞ்சும் ரமணா ***
ஆபத்திலிருந்து ஒரு கிராமத்தை காப்பாற்ற மாபெரும் அசுர மலையை
குடையாக தன் சுண்டு விரலில் தாங்கிப்பிடித்த பாலக்கிருஷ்ணா ***
எதிரிகளை துவம்சம் செய்ய தன் கையில் சுழலும்
சுதர்ஷன சக்கரத்தை ஏவிவிடும் ஹரிமுரளி ***
ரோகினி நட்சத்திரத்தில் பிறந்து அண்ணன் பலராமனோடு
சேர்ந்து வளர்ந்து தாய்மாமன் கம்சனை அழித்த மாயக்கண்ணா ***
லீலைகள் பல தொடர்ந்து செய்தாலும் உன் பெருமைகளை
சொல்ல ஆயிரம் கோடி நாவுகள் வேண்டும் ஸ்ரீ கிருஷ்ணா ***
மனக்கண்ணால் ஆராதனை செய்யும் பக்தர்களுக்கு அருள் புரியும்
கருணை கொண்ட கருமை நிறக்கண்ணா ***

கோபியர் கொஞ்சும் ரமணா ,
கோபால கிருஷ்ணா,
எப்போதெல்லாம் அதர்மம் தலை தூக்குகிறதோ அப்போதெல்லாம்
தர்மத்தை காக்கவும், தர்மத்தை நிலை நாட்டவும் வருவாய் கலியுக கிருஷ்ணா ******

ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா,
சிவசுப்பிரமணியன்

சனி, 5 மே, 2012

கவிதை 21 - சினிமா தோழன்

தோழா, நீ ஒரு உயர்ந்த மனிதன் என்றேன்,
உருவத்தில் அல்ல ,உள்ளத்தில் ...
தோழா, நீ ஒரு பண்புள்ள காவல்காரன் என்றேன்,
வீட்டுக்கு அல்ல , நாட்டுக்கு ...
தோழா, நீ ஒரு கடுமையான உழைப்பாளி என்றேன்,
சொல்லில் அல்ல , செயலில் ...
தோழா, நீ ஒரு சகலகலா வல்லவன் என்றேன்,
நடிப்பில் அல்ல , நிஜத்தில் ...
தோழா, நீ ஒரு மாண்புமிகு மாணவன் என்றேன்,
பள்ளியில் அல்ல , சமூகத்தில் ...
தோழா, நீ ஒரு காதல் மன்னன் என்றேன்,
அரண்மனையில் அல்ல , இதயத்தில் ...
தோழா, நீ ஒரு தில்லான தூளான இளைஞன் என்றேன்,
கோபத்தில் அல்ல, வீரத்தில் ...
தோழா, நீ ஒரு இரக்கமுள்ள பேரழகன் என்றேன்,
தோற்றத்தில் அல்ல, குணத்தில் ...
தோழா, நீ ஒரு அன்புள்ள எதிரி என்றேன்,
நல்லவனக்கு அல்ல, கெட்டவனுக்கு ...
தோழா, நீ ஒரு ஜீன்ஸ் போட்ட நாயகன் என்றேன்,
சினிமாவுக்கு அல்ல, மக்களுக்கு ...
தோழா, நீ ஒரு சூர்யவம்ச தலைமகன் என்றேன்,
கம்பீரதுக்காக அல்ல, நட்புக்காக ..


நண்பா,நீ ஒரு ஆணையிடும் ஜென்டில் மேன் என்றேன்,
அகம்பாவமான அல்ல, அமைதியான ...
நண்பா,நீ ஒரு கலக்கும் மகாநடிகன் என்றேன்,
நாடகத்தில் அல்ல, வாழ்க்கையில் ...
நண்பா,நீ ஒரு சொக்கதங்க கேப்டன் என்றேன்,
கப்பலுக்கு அல்ல, ராஜ்ஜியத்துக்கு ...
நண்பா,நீ ஒரு டூயட் பாடும் ராஜகுமாரன் என்றேன்,
வம்சத்தில் அல்ல, குரலில் ...
நண்பா,நீ ஒரு லவ்லி - லக்கி - பிஸ்தா என்றேன்,
மிரட்டுவதில் அல்ல, நேசிப்பதில் ...
நண்பா,நீ ஒரு பாசமுள்ள காதலன் என்றேன்,
காதலிக்கு அல்ல, ஏழைகளுக்கு ...
நண்பா,நீ ஒரு அசத்தல் இம்சை அரசன் என்றேன்,
அடிவாங்குவதில் அல்ல, சிரிக்க வைப்பதில் ...
நண்பா,நீ ஒரு சொல்லி அடிக்கும் காமெடி கிங் என்றேன்,
நக்கல் நகைச்சுவைக்காக அல்ல, சிக்கல் சிந்தனைக்கு ...
நண்பா,நீ ஒரு மயக்கும் மன்மதன் என்றேன்,
ரதி தேவிக்கல்ல,ரசனை மனதிற்கு ...
நண்பா,நீ ஒரு பொல்லாத சுள்ளான் என்றேன்,
எதிரிகளின் சுளுக்கெடுபதற்க்கு அல்ல, பெரிய வீட்டு மாப்பிள்ளை ஆனதற்கு !!!

இந்த கவிதையில் வரும் நடிகர்கள் யார் என்று கண்டு பிடியுங்கள் பார்ப்போம் ?

அன்புடன்,
சிவசுப்பிரமணியன்***

சனி, 28 ஏப்ரல், 2012

கவிதை 20 - கோடீஸ்வரன்

ஊசலாடும் மனதையும் சஞ்சலமூட்டும் சலனங்களையும்
கண்டு அஞ்சாமல் முடிவில் மாற்றமில்லாமல் உறுதியோடு
இருந்தால் நீயும் கோடீஸ்வரன் ஆகலாம் *

அதிருஷ்டம் இருந்தால் பணம் வரும் என்று நினைக்காமல்
சுய உழைப்பில் சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூபாயையும்
ஏற்றுக்கொண்டால் நீயும் கோடீஸ்வரன் ஆகலாம் *

தான் செய்த தவறுக்கு பிறர் மீது பழி சுமத்துவதை விட்டு விட்டு
தோல்விகளை கண்டு துவண்டு விடாமல் அதை 
ஒரு பாடமாக எடுத்துக்கொண்டால் நீயும் கோடீஸ்வரன் ஆகலாம் *

வெற்றி களிப்பில் தலைகனம் ஏறிவிடாமல் உலகில் கற்றுக்கொள்ள
கடலளவு விஷயங்கள் இருப்பதை உணர்ந்து வாழ்க்கை
பயணத்தை தொடர்ந்தால் நீயும் கோடீஸ்வரன் ஆகலாம் *

உச்சியை தொட்டு விட்டோம் என்று எண்ணாமல் வளர்ச்சிக்கு வழி
ஒரு எல்லையில்லா பாதை என்பதை புரிந்து கொண்டு
இலக்குக்கு குறி வைத்தால் நீயும் கோடீஸ்வரன் ஆகலாம் *

என்ன சோதனை வந்தாலும் அதை அமைதியாகவும் பொறுமையாகவும்
சமாளித்து அபாயங்களை எதிர் கொள்ளும்
திறன் இருந்தால் நீயும் கோடீஸ்வரன் ஆகலாம் *

சந்தர்ப்பம் மற்றும் சூழ்நிலை கைதியாக மாறி விடாமல்
தெளிவான மனமும் குணமும் சேர்ந்திருக்க வலுவான
உடல் நலத்தை தக்க வைத்தால் நீயும் கோடீஸ்வரன் ஆகலாம் *

சொல் வேறு செயல் வேறு என்றில்லாமல் கொடுத்த வாக்கை
காப்பாற்றிக்கொண்டு பிறருக்கு நல்ல வழிகாட்டியாக
இருந்தால் நீயும் கோடீஸ்வரன் ஆகலாம் *

அடுத்தவர்களுக்கு கேடு நினைக்காமல் நேர்மையை
கடமை என்று பாவித்து உண்மையை உயிர் மூச்சாக
கடைபிடித்து வந்தால் நீயும் கோடீஸ்வரன் ஆகலாம் *

சமுதாயத்தின் பொது நலனில் அக்கறை செலுத்தவும் நாட்டின் முன்னேற்றத்திற்கு பாடு படவும் ஊக்கமளிக்கும் அத்தனை
வேலைகளையும் விரும்பி செய்தால் நீயும் கோடீஸ்வரன் ஆகலாம் *

விடாமுயற்சி , தொடர் பயிற்சி , இலட்சிய வெறி ,
தன்னம்பிக்கை என்று அடுக்கி கொண்டே போகும் அனைத்து
தீர்க்கமான தீர்மானமான ஆழ்ந்த சிந்தனைகள்
சூழ்ந்து கொண்டு எல்லாம் நன்மைக்கே எனும் நல்ல
கொள்கைகளை வாழ்நாள் முழுதும் நடைமுறையில்
பயன் படுத்தும் யுக்தி தெரிந்தால் உனக்குள் இருக்கும் சக்தி
ஞாபகபடுத்தும் நீயும் கோடீஸ்வரன் ஆகலாம் *

வெல்வோம்,
சிவசுப்பிரமணியன் !!

கவிதை 19 - காலச்சுவடுகள்

மலரும் நினைவுகள் , ஆசை கனவுகள் ;
ஒலிக்கும் ராகங்கள் , நகைக்கும் மேகங்கள் ;
தாலாட்டும் பாடல்கள் , உதவும் கரங்கள் ;
நேசிக்கும் முட்கள் , புன்னகை தரும் பூக்கள் ;
சலங்கை சத்தங்கள் , சங்கு முழங்கும் ஓசைகள் ;
துள்ளும் தாளங்கள் , மயக்கும் நாதஸ்வரங்கள் ;
மேடை கச்சேரிகள் , முடிசூடா மகுடங்கள் ;
இயற்க்கை சோலைகள் , பூங்குயில் பாடல்கள் ;
தேன்சிந்தும் முத்துக்கள் , புல்லாங்குழல் மெட்டுகள் ;
இன்னிசை கீதங்கள் , பளிச்சிடும் விளக்குகள் ;
தத்ரூபமான ஓவியங்கள் , செதுக்கிய கலைச்சிற்பங்கள் ;
அமைதி பூங்காக்கள் , கவர்ந்திழுக்கும் புள்ளிமான்கள் ;
மாயக்கண்ணாடிகள் , உலக அதிசயங்கள் ;
நடனமாடும் மயில்கள் , தொலைதூர நட்சத்திரங்கள் ;
வானளாவிய கோபுரங்கள் , ஆர்பரிக்கும் கல்தூண்கள்;
செந்தமிழ் மொழிகள் , வரலாற்று பொக்கிஷங்கள் ;
அருமை அருங்காட்சியங்கள் , மறந்த அரண்மனைகள் ;
தகவல் நூலகங்கள் , கட்டுக்கடங்காத கோட்டைகள் ;
சிங்கார சித்திரங்கள் , சிலிர்ப்பூட்டும் செங்கதிர்கள் ;

இப்படி அடுக்கி கொண்டே போகலாம் இந்த காலச்சுவடுகளை ,
இவை அனைத்தும் என் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்த காலச்சுவடுகள் !
இந்த காலச்சுவடுகளால் நம்மை நாம் பலமுறை மறந்து விடுகின்றோம் !
காலத்தின் கட்டளைக்கு மனிதன் தான் அடிமை ஆகிவிட்டானோ ,
இல்லை காலத்தின் போக்கில் மனிதன் ஒன்றி பொய் விட்டானோ ..!!!!

காலம் பதில் சொல்லட்டும்,
சிவசுப்பிரமணியன் ***

சனி, 21 ஏப்ரல், 2012

கவிதை 18 - நிழலும் நிஜமும்

கடைபிடித்து போற்றுங்கள் உங்கள் வெற்றியை,
நன்றி சொல்லுங்கள் அந்த வெற்றிக்கு காரணமான தோல்வியிடம் ***

நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் சந்தோஷத்தை,
பாராட்டு தெரிவிக்கவும் அந்த சந்தோஷத்திற்கு காரணமான எதிரிகளிடம் ***

நிலை நிறுத்துங்கள் உங்கள் தைரியத்தை,
சவால் விடுங்கள் அந்த தைரியத்தை கொடுத்த பயத்திடம் ***

தக்க வைத்து கொள்ளுங்கள் கிடைத்த பதவியை,
வாழ்த்து அனுப்புங்கள் அந்த பதவிக்கு ஆசைப்பட்ட போட்டியாளர்களிடம்***

செலுத்துங்கள் குடும்பத்திடம் உங்கள் பாசத்தை,
அசை போடுங்கள் அந்த பாசத்திற்கு தடையான கர்வத்திடம் ***

உடும்பு பிடி போல் பிடித்து கொள்ளுங்கள் விடாமுயற்சியை,
விடை பெறுங்கள் முயற்சியை தூண்டி விடும் வீழ்ச்சியிடம் ***

புன்னகை சிந்தி பறிமாறி கொள்ளுங்கள் இன்பத்தை,
எதிர்த்திடுங்கள் சோகங்களை பொட்டலமாக கொண்ட துன்பத்திடம் ***

நல்ல முறையில் பயன் படுத்துங்கள் நமக்கு கிடைத்த சுதந்திரத்தை,
தலை வணங்குங்கள் அன்று போராட்டம் நடத்திய மகான்களிடம் ***

பத்திரப்படுத்துங்கள் பெற்றோர்கள் சூட்டும் புகழாரத்தை,
மன்றியிடுங்கள் புகழை தேடி தந்த பெற்றோர்களின் கடின உழைப்பிடம் ***

பின்பற்றுங்கள் சரியான வழியில் நாடி வரும் பொறுப்புள்ள குணங்களை,
விலகியிருங்கள் தவறுகளை தொகுப்பாக கொண்ட அலட்சியத்திடம் ***

நம்புங்கள் எல்லாம் நன்மைக்கே என்று நினைக்கும் நல்லவனை,
உஷாரயிருங்கள் எல்லாம் தீமைக்கே என்று கேடு செய்யும் கெட்டவனிடம்***

மறந்து விடாதீர்கள் வாழ்க்கை பாடத்தை கற்பித்த அனுபவங்களை,
மதிப்பு கொடுங்கள் அனுபவங்களை ஏற்படுத்திய வாய்ப்புகளிடம்***

தொலைத்து விடாதீர்கள் உங்கள் சாதனைக்கு கிடைத்த தங்கப்பதக்கத்தை,
ஆச்சர்யப்படுங்கள் அந்த பரிசுக்கு விதைபோட்ட ஆசைகளிடம்***

பாலம் கட்டுவது போல் விரிவு படுத்துங்கள் நட்பு வட்டாரத்தை,
ஜாக்கிரதையாக இருங்கள் நட்புக்கு
பிரிவுண்டாக்கும் சுவர் போல் உள்ள தடைகளிடம்***

ஆனந்தமாய் கொண்டாடுங்கள் உங்கள் நேர்மைக்கு கிடைத்த நாணயத்தை,
முழுக்கு போடுங்கள் அந்த நாணயத்திற்கு
முற்றுப்புள்ளி வைக்கும் சோம்பலிடம்***

தட்டி எழுப்புங்கள் உங்களுக்குள் தூங்கிக்கொண்டிருக்கும் மாவீரனை,
அஞ்சாமால் போராடுங்கள் உங்களை அடக்கி வைத்த கோழையிடம்***

வளர்த்துக்கொள்ளுங்கள் கற்பனையை மேம்படுத்தும் கனவுகளை,
துவண்டு விடாதீர்கள் கனவுகளை
நினைவக்காமல் சிதைக்கும் ஏமாற்றத்திடம்***

தோண்டி எடுங்கள் உள்ளுக்குள் மறைந்து கிடக்கும் திறமைகளை,
நழுவ விடாதீர்கள் திறமைக்கு தோள்
கொடுக்கும் பொன்னான நிமிடங்களிடம்***

அடையாளம் காணுங்கள் உங்களை சூழ்ந்துள்ள
நிஜங்கள் மற்றும் நிழல்களை
பிறகு தேர்ந்தெடுங்கள் உங்களுக்கு வெற்றி வழி காட்டும் முறையான- சரியான பாதையிடம் *****

இப்படிக்கு,
சிவசுப்பிரமணியன் !!!!

ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

கவிதை 17 - நினைத்துப்பார்

பிடிக்காத உணவை சாப்பிடாமல் சலிப்புடன் ஒதுக்கி வைத்தால்,
பசி-பட்டினியோடு கிடக்கும் அநாதை ஏழைகளை நினைத்துப்பார்,

சின்ன-சின்ன கவலையோ,பிரச்சினையோ,கஷ்டமோ வந்தால்,
எதிர்நீச்சல் போட்டு போராடும் தன்னம்பிக்கையுள்ள
ஊனமுற்றோரை நினைத்துப்பார்,

வாழ்க்கையில் தொடர்ந்து தோல்விகளை மட்டும் சந்தித்தால்,
விடாமுயற்சியுடன் வெற்றிக்கு பாடுபட்டு சிகரம்
தொட்ட பிரபலங்களை நினைத்துப்பார்,

பிறரை குறை சொல்லுவதும், மற்றவர்களை கேலி செய்யும் போதும்,
அறிந்தும் அறியாமலும் செய்த அளவற்ற
தன் தவறுகளை நினைத்துப்பார்,

கையளவு கற்றுக்கொண்டு அதிகாரம் செலுத்தும் கர்வம் வந்தால்,
கடலளவு உலகம் தெரியாத கிணற்றுதவளையை நினைத்துப்பார்,

குற்றத்தை ஒப்புகொள்ளாமல் அடுத்தவர் மீது மழி சுமத்தும் போது,
பிழையான எண்ணத்தால் வரும் கொடூர விளைவுகளை நினைத்துப்பார்,

அடாவடியாக ஊர் சுற்றிக்கொண்டு வீண் செலவு செய்யும் போது,
இரவு பகல் பாராமல் பாடுபடும் பெற்றோர்களை நினைத்துப்பார்,

பணம்,பதவி,பட்டம்,புகழ் என்று அனைத்தும் சூழ்ந்துகொண்டால்,
உயர்ந்த அந்தஸ்தை பெற்றுத்தந்த உழைப்பு எனும்
ஏணிப்படிகளை நினைத்துப்பார்,

மாளிகை போல் வீடு இருந்தும் பேராசை அடங்கவில்லை என்றால்,
குப்பைத்தொட்டியில் பிறந்து வளர்ந்த பிஞ்சுகளை நினைத்துப்பார்,

சோகம்-சோதனை-கஷ்டம்-நஷ்டம் என்று வந்தால்,
உன் வாழ்க்கை உன் கையில் என்று நினைத்துப்பார்,

துன்பங்கள் துரத்தினால் ஆலயங்கள் சென்று கடவுளை தேடாமல்,
இன்பங்களை தந்தருளும் உனுக்குள் இருக்கும்,
இறைவனை மட்டும் நினைத்துப்பார் ******

அன்புடன்,
*சிவசுப்பிரமணியன்*

கவிதை 16 - இந்தியன்

காதல் வசப்பட்டு கற்பனை கவிதை
எழுதுபவன் நான் அல்ல,
இயற்கையை ரசித்து விட்டு சிந்தனை சித்திரம்
வரைபவன் நான் அல்ல,
அமைதியான இடம் தேடி சின்னஞ்சிறு சிலை
செதுக்குபவன் நான் அல்ல,
மங்கையின் அழகை கண்டு மாணிக்க மாளிகை
கட்டுபவன் நான் அல்ல,
கடற்க்கரை காற்று வாங்கி பாசமலர் பாட்டு
பாடுபவன் நான் அல்ல,
முரட்டு மனிதன் போல் கோபப்பட்டு நடராஜர் நாட்டியம்
ஆடுபவன் நான் அல்ல,
மண்வாசனைக்கு அடிமை என்றாலும் பூஞ்சோலை பூக்கள்
நுகர்பவன் நான் அல்ல,
இசையில் மயங்கி விழுந்தாலும் கல்யாண கெட்டிமேளம்
கொட்டுபவன் நான் அல்ல,
முகம் பார்க்க உதவினாலும் கண்ணாடி கட்டிடத்தில்
வசிப்பவன் நான் அல்ல,
கடவுள் நம்பிக்கை இருந்தாலும் வாஸ்து படி வாசல்
பார்ப்பவன் நான் அல்ல,
ஆதங்கப்படும் ஆசாமி போல் கதிகலங்கும் கவலைகளுக்கு
வருத்தபடுபவன் நான் அல்ல,
ஆஸ்திகள் பல கொட்டி கிடந்தாலும் பேராசை பேர்வழியாக
மாறுபவன் நான் அல்ல,
ஆசைகளை மனதுக்குள் பூட்டி அதற்க்கு மகத்தான மகுடம்
சூட்டுபவன் நான் அல்ல,
காற்கால மழையில் நனைந்து காகித கப்பல்
விடுபவன் நான் அல்ல,
விலைமதிக்க முடியாத முத்து கிடைக்க கட்டுகடங்காத கடலில்
மூழ்குபவன் நான் அல்ல,
அரசியல்வாதி போல் தேர்தல் வெற்றிக்காக வாக்குறுதிகள்
கொடுப்பவன் நான் அல்ல,
காரியம் கை கூட வேண்டி கபட நாடகம் ஆடி கள்ளக்கன்னீர்
விடுபவன் நான் அல்ல,
மேடைகளில் மாமேதை போல் சொதப்பல் சொற்பொழிவு
நிகழ்த்துபவன் நான் அல்ல,
ஜாதி-கலவரம்-தீவிரவாதம் என்ற பெயரில் தேசத்துரோகம்
செய்பவன் நான் அல்ல,
"ஜெய்-ஹிந்த்" என்ற மந்திர சொல்லுக்கு கட்டுப்பட்டு,
தன உயிரை பற்றி கவலைப்படாமல் பல கோடி உயிர்களுக்கு,
போராடும் சமூக சேவகன் மட்டுமல்லாமல் எல்லையிலிருந்து
கொண்டே எதிரிகளிடமிருந்து நாட்டை காப்பாற்றும் தியாக
உள்ளம் கொண்ட இராணுவ வீரன் தான் நான் *****

இவை அனைத்திற்கும் மேலாக தேசிய கோடியை ஏற்றி
வைத்து மரியாதை செலுத்தும் நான் ஒரு சராசரி இந்திய குடிமகன் *****

ஜெய் ஹிந்த்,
சிவசுப்பிரமணியன் ****

சனி, 7 ஏப்ரல், 2012

கவிதை 15 - இயற்க்கை உரையாடல்

மாமரத்தில் அசைந்தாடும் மாங்கனியே,
நாவில் தாண்டவமாடும் தமிழிசையே,
என் மனதிற்கு நிம்மதி தாருங்கள் **

வெள்ளை மழையாய் பொழியும் பனித்துளியே,
வளைந்து நெளிந்து வரும் வற்றாத நதியே,
என் மௌனத்திற்கு அர்த்தம் கூறுங்கள் **

சேவலை கொக்கரக்கோ என்று கூவச்செய்யும் சூரிய ஒளியே,
கார்த்திகை மாதத்தை ஞாபகப்படுத்தும் தீபச்சுடரே,
என் வாழ்வின் வெளிச்சமாக திகழுங்கள் **

அசைக்க முடியாத வல்லமை படைத்த அசுர மலையே,
திமிங்கலங்களை சுமக்கும் பரந்த உள்ளம் கொண்ட கடல் அலையே,
என் இதயத்திற்கு சுமை தாங்கும் பலம் கொடுங்கள் **

வேங்கையின் வீரத்தோடு வேட்டையாடும் புலிக்குட்டியே,
காட்டின் அரசனாகபோகும் சூரக்கோட்டை சிங்கக்குட்டியே,
என் வேகத்திற்கு ஒரு வழி காட்டுங்கள் **

அழகு பதுமை போல் காட்சியளிக்கும் வண்ண ரோஜாவே,
கல்வித்தாய் சரஸ்வதி வீற்றிருக்க உதவும் செந்தாமரையே,
என் நேர்மையை நிலை நிறுத்துங்கள் **

இன்னிசை ராகத்தோடு பாட்டு பாடிடும் பூங்குயிலே,
கச்சேரி தாளத்தோடு நடனம் ஆடிடும் பொன்மயிலே,
என் உடலுக்கு உற்சாகம் ஊட்டுங்கள் **

வறண்ட பூமியின் தாகத்தை தீர்க்கும் மழைத்துளியே,
மகாபாரத போரில் முழங்கிய சங்கு ஒலியே,
என் நம்பிக்கைக்கு ஆதரவுக்கரம் நீட்டுங்கள் **

அம்புலி மாமா என்றழைக்க படும் வெள்ளிநிற வெண்ணிலவே,
நிலவுக்கு துணையாக வானில் கண் சிமிட்டும் நட்சத்திரங்களே,
என் புத்திக்கு கூர்மை தீட்டுங்கள் **

புல்வேலிகளை கடந்து ஓசையில்லாமல் வரும் தென்றல் காற்றே,
மலைச்சரிவுகளை கடந்து ஓசையோடு விழும் நீர் வீழ்ச்சியே,
என் புதிருக்கு விடை கண்டு பிடியுங்கள் **

ஒட்டகங்களின் வாசஸ்தலமான அடர்ந்த பாலைவனமே,
பறவைகளின் உல்லாச பயணத்திற்கு வழி விடும் நீல மேகமே,
என் கோரிக்கைகளை பொறுமையுடன் கேளுங்கள் **

பார்த்தவுடன் ரசிக்க தோன்றும் பசுமை நிறைந்த பூஞ்சோலையே,
கனவுலகத்திற்கு அழைத்துச்செல்லும் எழில் கொஞ்சும் மாஞ்சோலையே,
என் சோகத்திற்கு முற்றுபுள்ளி வையுங்கள் **

காதலுக்கு தூது போகும் தூய்மையான வெள்ளைப் புறாவே,
கல்யாணத்திற்கு ஜோதிடம் பார்க்கும் பச்சைக்கிளியே,
என் எதிர்கால இலட்சியத்தை நிறைவேற்றுங்கள் **

ஆலயங்களில் பாவங்களை போக்கும் புனித தெப்பக் குளமே,
நெடு-நெடு வென வளர்ந்து நிற்கும் தென்னை மரமே,
என் பிரச்னைகளுக்கு தீர்வு சொல்லுங்கள் **

விவேகமாக துள்ளி ஓடும் புள்ளி மான் குட்டியே,
வண்ணங்கள் தீட்டிய மேனியுடன் தேன் அருந்தும் பட்டாம்பூச்சியே,
என் நிம்மதிக்கு ஓர் இடம் தேடுங்கள் **

எழில் கொஞ்சும் நெஞ்சம் கொண்ட அழகு அன்னமே,
வட்டமிட்டு சிறகடிக்கும் சின்னஞ்சிறு சிட்டுக்குருவியே,
என் சங்கீதத்திற்கு இசை மீட்டுங்கள் **

கர்ஜிக்கும் இடி முழக்கத்தோடு பளிச்சிடும் மின்னலே,
அதிசயங்கள் பல நிறைந்த அற்புத தீவுகளே,
என் ராகத்திற்கு தாளம் போடுங்கள் **

பொன் விளையுற பூமியை கொடுத்த பூமா தேவியே,
பாதுகாப்பும் அரவணைப்பும் தந்தருளும் இயற்க்கை அன்னையே,
என் பிரார்த்தனைக்கு சக்தியை திரட்டுங்கள் ****

**** இயற்க்கை ரசனையுடன்,
**** சிவசுப்பிரமணியன் ***

ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

கவிதை 14 - கடற்க்கரை காதல்

தூண்டில் போட்டு சிக்காத மீன் 'உண்டு',
தவழ்ந்து செல்லும் கரை ஓரம் ஒரு 'நண்டு',
சூடான சுண்டலுடன் விற்பனை ஆகும் 'வெள்ளைப்பூண்டு',
மெய் சிலிர்க்கும் காற்றோடு காதலர்கள் 'இரண்டு',
வெகு நேரம் காதலி மௌனமாக இருப்பதை 'கண்டு',
காதல் பரிசாக காதலன் கொடுத்தான் 'பூச்செண்டு',
சோகத்தை மறைத்து புன்னகை பூத்தாள் அதை 'ஏற்றுக்கொண்டு',
அவர்களை சுற்றி ரீங்காரம் அடித்தது பொன் 'வண்டு',
அருகே வானில் பட்டம் விட்டு லூட்டியடிக்கும் குட்டி 'வாண்டு',
அடிக்கடி அம்மாவிடமிருந்து வாங்கின திட்டு 'மண்டு',
ஜோடி புறாக்கள் அநேகம் நடத்தியது காதல் 'தொண்டு',
காதல் அபாயம் என எச்சரித்தது சிறை பிடிக்கும் 'கூண்டு',
காதல் அதிசயம் என பதிலடி கொடுத்தனர் காதலை துப்பறியும் 
காதலன்களான ஜேம்ஸ் 'பாண்டு',
புனிதமான காதலை துளி அளவு கூட அசைக்க முடியாது
ஓர் 'அணுகுண்டு',
கடற்க்கரை ஓரம் சங்கமம் ஆகும் காதலர்கள் மறக்கவில்லை 
காதலர்தினத்தை, ஆனால் மறந்து விட்டார்கள் அது எந்த 'ஆண்டு' ....!!!

அன்புடன்,
சிவசுப்பிரமணியன் !

சனி, 31 மார்ச், 2012

ஹைக்கூ 3

பாம்புகளை தலையணைகளாக வைத்துக்கொண்டாலும்,
நம்பிக்கை துரோகம் செய்யும் விஷமிகளின் சகவாசம் வைத்துகொள்ளாதே !

ஹைக்கூ 2

துணிவு கொடுக்கும் உற்சாக வெற்றி,
கோழைத்தனம் கொடுப்பதோ அவமானத்தோல்வி !

ஹைக்கூ 1

உழைப்பு உனக்கு வெற்றிக்கான படிக்கட்டு,
விடாமுயற்சியுடன் செதுக்கு தன்னம்பிக்கை எனும் கல்வெட்டு !

கவிதை 13 - அன்றும் இன்றும்

இருள் சூழ்ந்த உலகில் பிறந்தான் ஆதி மனிதன் அன்று,
மின்சாரம் பாயும் பிரகாசமான உலகில் வாழும் நவீன மனிதன் இன்று !

மொழிகள் ஏதும் இல்லாமல் ஊமை விழிகள் 
மூலம் தொடர்பு இருந்தது அன்று,
விழிகளுடன் சேர்த்து தனி மனிதருக்கே தெரியாத பல,
ஆயிரகணக்கான மொழிகள் இன்று !

செய்திகள் தெரிவிக்க மனிதர்களையும் புறாக்களையும் 
தூது அனுப்பினார்கள் அன்று,
தொலைபேசி,தொலைக்காட்சி, இணையதளத்துடன் கணினி என்று
முன்னேறி கொண்டிருக்கும் விஞ்ஞான உலகம் இன்று !

வெவ்வேறு இடங்களுக்கு பயணம் செல்ல நடைபாதைகளை
பின்பற்றிய பாத சாரிகள் அன்று,
பல சக்கர வாகனங்கள், ரயில்-விமானங்கள்-கப்பல்கள் என்று
தொடரும் பயண முறைகள் இன்று !

இயற்க்கை மாற்றங்களை மட்டும் வைத்து தேதிகள் மற்றும்
நேரத்தை குறித்த காலம் அன்று,
சிறியது முதல் பெரியது வரை விதம் விதமான கடிகாரங்களிலும்
மின்னணு சாதனங்களிலும் மணி பார்க்கும் காலம் இன்று !

செடி கொடி மரங்களிலிருந்து கிடைக்கும் பழங்கள் மற்றும் காட்டு
மிருகங்களை வேட்டையாடி சாப்பிட்டார்கள் அன்று,
சைவ-அசைவ உணவு மட்டுமின்றி விவசாயத்தில் விளைந்த நெல்-கோதுமை தானியங்களோடு சேர்த்து புது புது உணவு வகைகள் இன்று !

யானைகளிலும் குதிரைகளிலும் கூட ஒரு காலம் சவாரி செய்ய
கற்றுக்கொண்டே வில்லும் அம்பும் ஏவி போர் நடந்தது அன்று,
நாட்டையே அழிக்கும் அணுகுண்டுகள், வெடி குண்டுகள்,வினோத 
ஆயுதங்கள் மற்றும் விகார ஏவுகணைகளால் தாக்குதல் இன்று !

காடு மலைகளுக்கு நடுவே விலங்குகளை தோழர்களாக கருதிய 
ஆதிவாசிகள் குடிசை போட்டார்கள் அன்று,
வானத்தை தொடும் அளவுக்கு கோபுரங்கள்,மாளிகைகள்,சிகரங்கள்,
கண்ணை பறிக்கும் கட்டிட வீடுகள் இன்று !

வித்தியாசங்கள் பல அடுக்கி விடலாம் அன்றும் இன்றும்,
மனிதனின் பிறப்பும் இறப்பும் மாறாமல் அரங்கேற்றம் ஆகிறது என்றும் !!!

அன்புடன்,
சிவசுப்பிரமணியன் ***

சனி, 17 மார்ச், 2012

கவிதை 12 - ஆத்ம யுத்தம்

கலைஞனின் ஞான ஒளியில் எரிந்தன அறிவுச்சுடர்;
இளைஞனின் காந்த விழியில் விரிந்தன காலை மலர்;
இறைவனின் நிசப்த மொழியில் படிந்தன ஆலமர வேர்;

எதிரிகளின் ஆக்ரோஷ வலையில் சிக்கின படைச்சுவர்;
பகைவனின் அம்பு மழையில் கசிந்தன குருதி நீர்;
தலைவனின் ஆயுதங்கள் நொடியில் மோதின நேருக்கு நேர்;

மைந்தனின் அகோர வீழ்ச்சியில் சரிந்தன வெற்றி தேர்;
துஷ்டர்களின் கத்தி முனையில் நெருங்கின யமனின் பாசக்கயிற்;
தளபதியின் மின்னல்வேக செயலில் கிழிந்தன எதிரியின் நார்;

கொடியவனின் மாய சூழ்ச்சியில் மடிந்தன ஓர் ஆயிரம் உயிர்;
கள்வனின் வஞ்சனையால் யுத்தபூமியில் புதைந்தன தருமத்தின் பயிர்;
கதிரவனின் அச்தம வேலையில் தரைமட்டமாகின தலைநகர்;

வேந்தனின் சாந்த வழியில் சிதைந்தன இளந்தளிர்;
தீயவர்களின் சங்கு ஒலியில் முடிந்தன இறுதி போர்;
வீரர்களின் மரண வேதனையில் எங்கும் பொழிந்தன சோகக் கண்ணீர்;

மாண்டவர்களின் அன்பு சமாதியில் மேகம் தெளித்தன தூயப் பன்னீர்;
உலகின் காலச்சுவடியில் வீழ்ந்தன வரலாற்று புதிர் ;
மண்ணின் மரியாதை பெட்டகத்தில் இன்னொரு ஆத்ம யுத்தம் தயார் !!!

வேல் முழக்கத்துடன்,
சிவசுப்பிரமணியன்.

கவிதை 11 - வாழ்க்கை

 வாழ்க்கை என்பது ஓர் அழகான பாட்டு ,
அதில் உள்ள வார்த்தைகள் யாவும் வரிகளாக மாற்றியது கடவுள்,
அதை தொகுத்து வழங்கியது தான் மனிதன், அந்த
பாட்டை ராகத்தோடு பாடுவது இதயம், அதை 
தாளத்தோடு ரசிப்பது மூளை, ஆனால் குரல் கேட்காமல் போய்
விட்டால் - பாடகருக்கும் கேட்பவருக்கும் தான் வலி அதிகம்,
கடைசியில் பழி எல்லாம் சேர்வது கவிஞருக்கு தான் !!!

வாழ்க்கை என்பது ஓர் நடமாடும் நூலகம்
அதை பொக்கிஷமாக கண்கானிப்பது கடவுள் ,
அதில் உள்ள புத்தகங்கள் யாவும் மனிதர்கள்,
ஒவ்வொரு புத்தகத்தை புரட்டி பார்த்தாலும் பிரச்னைகள் ,
புதிதாக வந்து செல்லரித்து போகும் பழைய புத்தகங்கள்,
விலை உயர்ந்தும் தாழ்ந்தும் உள்ள புத்தகங்கள்,
இப்படி பல வகையான புத்தகங்கள் இருந்தாலும்,
மாறாமல் இருப்பது அந்த ஒரே ஒரு கண்கானிப்பாளர் !!!

வாழ்க்கை ஒரு அழகான பூந்தோட்டம்;
வாழ்க்கை  ஒரு அற்புதமான கலைக்கூடம்;
வாழ்க்கை ஒரு விளங்கமுடியா அதிசயம்;
வாழ்க்கை ஒரு மாபெரும் சிற்பமண்டபம்;
வாழ்க்கை ஒரு மாறுபட்ட சித்திரச்சோலை;
வாழ்க்கை ஒரு வசந்தமான பளிங்கு மாளிகை;
வாழ்க்கை ஒரு எதிரொலிக்கும் கண்ணாடி;
வாழ்க்கை ஒரு விசித்திரமான கண்கட்டு மாயை;
வாழ்க்கை ஒரு வித்தக விளையாட்டு;

ஆதியும் அந்தமும் / ஆரம்பவும் முடிவும் புரியாத
இந்த வாழ்க்கைக்கு எத்தனை ஆயிரம் அர்த்தங்கள் !!!!

அன்புடன்,
சிவசுப்பிரமணியன்.


ஞாயிறு, 11 மார்ச், 2012

கவிதை 10 - அவர்கள்

தனிமையில் வாழும் காலம் தான் வந்தார்கள் அவர்கள்,
சிறு புன்னகையால் தன் பக்கம் இழுத்துக்கொண்டார்கள் ...
கஷ்டப்படும் காலம் உற்சாகமாய் கை கொடுத்தார்கள்,
வருத்தங்கள் யாவும் நொடியில் மறக்க செய்தார்கள் ...
மன ஒற்றுமையை புரிய வைத்தார்கள் எனக்கு,
சுக-துக்கங்களை சமமாக பகிர்ந்து கொண்டு,
இருள் சூழ்ந்த வாழ்வின் வெளிச்சமாக திகழ்ந்தார்கள் !!!

தோழமை தேடி திரியும் போது வாழ்வின் வசந்தமாக,
வானத்தில் மின்னும் நட்சத்திரம் போல் ஜொலித்தார்கள் ...
பாசத்திற்கும் நேசத்திற்கும் பாலம் அமைத்தார்கள்,
அன்புக்கும் பண்புக்கும் புது இலக்கணம் படைத்தார்கள் ...
சோதனை வரும் போதெல்லாம் சோகங்களை கூட மூட்டை 
கட்டி தன் முதுகில் சந்தோஷமாக சுமப்பார்கள் !!!

சுமைகள் எல்லாம் சுகமானது என்று ஆதரவு தந்தார்கள்,
ஆபத்து வந்தால் சலிக்காமல் உதவிக்கரம் நீட்டினார்கள் ...
அமைதியில் கூட உணர்ச்சிகளை புரிந்து கொள்வார்கள் ,
வாழ்நாள் முழுதும் என் நிம்மதிக்கு பாடு பட்டவர்கள் !!!

கல்தூண் போல் என்றும் பாதுகாப்பளித்தார்கள்...
நட்புக்கு எல்லை இல்லை என்று தொடர்ந்து சரித்திரம் 
உருவாக்கியவர்கள் வேறு யாரும் அல்ல ,
என் உள்ளம் கவர்ந்த உண்மை நண்பர்கள் ....!!!


நட்புடன்,
சிவசுப்பிரமணியன் !

கவிதை 9 - இயற்க்கை ராணி

குளிர்காலத்தில் பூத்திருக்கும் சின்ன ரோஜாவே,
நீ நாள்தோறும் காட்சி அளிக்கும் அழகிய பதுமை !
அன்புடன் கூடிய நறுமணம் வீசும் பொழுது,
நீ தோன்றுவதோ சிரிக்கும் சிகப்பு பொம்மை !

பூந்தோட்டத்தின் நடுவிலே மாமரத்தின் நிழலிலே,
தென்றல் தொடும் போது தலை அசைக்கும் பூவே !
முத்துக்கள் போல் பனித்துளி விழும் நேரம்,
நீ துள்ளலோடு ஆட்டம் போடும் குட்டித்தீவே !

ஜன்னல் வழியே உன்னை விழி வைத்து பார்க்கும் போது,
கவர்ந்திழுக்கும் உன் சிலிர்ப்பூட்டும் மகிழ்ச்சி !
உன்னை தொட வந்தால் முள் குத்தி இரத்தம் வடிந்தாலும்,
யாவராலும் பாராட்ட படும் உன் மாபெரும் எழுச்சி !

ஒவ்வொரு இதழ் ஸ்பரிசிக்கும் போதும் ஒலித்திடும் பாடல்,
உன் வாசனையால் பரவசம் அடையும் புத்துணர்ச்சி !
உனக்கு இயற்க்கை ராணி மகுடம் சூட்டினால்,
காதலர்களுக்கு உண்டாகும் புது கிளர்ச்சி !

கனவு கண்டேன் - தோட்டம் முழுதும் ரோஜாக்கூட்டம்,
காதல் பரிசாக உன்னை தேர்ந்தெடுத்தாலும் பூக்கள் மத்தியில்
உனக்கில்லை இனி வீழ்ச்சி ***

இப்படிக்கு,
சிவசுப்பிரமணியன் !

கவிதை 8 - கோலங்கள்

உள்ளம் எனும் கடிதத்தில் உள்ள எழுத்துக்கள் யாவும்
சிதறி கிடக்கும் எண்ணங்கள் .....
உறவு எனும் கடலில் உள்ள முத்துக்கள் யாவும் 
நாள் தோறும் வண்ணங்கள் .....


புன்னகை எனும் பூக்களில் உள்ள வண்டுகள் யாவும்
தேன் ஊறும் கன்னங்கள் .....
சமயம் எனும் சமுத்திரத்தில் உள்ள அலைகள் யாவும்
நொடியில் மறையும் தருணங்கள் .....


நரகம் எனும் பாதாளத்தில் உள்ள குழிகள் யாவும்
துன்பம் தரும் சகுனங்கள் .....
வாழ்க்கை எனும் புத்தகத்தில் உள்ள அர்த்தங்கள் யாவும்
இன்பம் தரும் லக்ஷணங்கள் .....


குடும்பம் எனும் சொர்க்கத்தில் உள்ள உணர்ச்சிகள் யாவும்
வாசனை கொடுக்கும் சந்தனங்கள் .....
பரதம் எனும் கலையில் உள்ள நாட்டியங்கள் யாவும்
ரசிக்க தூண்டும் நடனங்கள் .....


சுனாமி எனும் போர்க்களத்தில் உள்ள விபத்துகள் யாவும்
சோகம் தரும் மரணங்கள் .....
இசை எனும் பாடலில் உள்ள ராகங்கள் யாவும் 
சப்தஸ்வரங்கள் சேர்ந்த சரணங்கள் .....


எவனோ ஒருவன் எக்கேடு கெட்டு போனால் நமக்கென்ன 
என்று உலவும் மனித கோலங்கள் ......!!!!


நேசமுடன்,
சிவசுப்பிரமணியன்.

ஞாயிறு, 4 மார்ச், 2012

நகைச்சுவை துணுக்கு

ஊட்டியில் சுட்டிகள் அடிக்கும் லூட்டி தாங்காமல் அனைவரையும்
வீட்டினுள் பூட்டி வேட்டி மடிச்ச தாத்தாவையும் கூட்டி கிட்டு
பாட்டி உசிலம்பட்டிக்கு புறப்பிடும் போது, தொட்டி மேல வட்டி
கட்டி வாங்கி வச்ச பானைச்சட்டி, பாட்டி கை தட்டி 
தாத்தா முட்டியை பேத்திடுச்சு ...!
பொட்டிய எடுத்து கிட்டு பாட்டி மட்டும் கிளம்ப,
போட்டி போட்டு பேட்டி காண கூட்டம் கூடுச்சு ....!

கவிதை 7 - கேட்டீங்களா ?

திகில் நாவல்களில் மூழ்கியிருந்த கலைஞனின் கவனத்தை
   சிதற வைத்தது யாரோ ...?


சமையலறையில் பம்பரமாக வேலை பார்த்துக்கொண்டிருந்த 
வீட்டுகாரியின் கவனம் போனது எங்கோ ...?


அலுவலகத்திற்கு செல்ல தயாராக இருந்த குடும்பத்தலைவரை
திசை திருப்பியது யாரோ ...?


வாசலில் அரட்டையடித்து கொண்டிருந்த பாட்டிகள் கூட்டணியை 
சற்று எட்டிப்பார்க்க தூண்டியது யாரோ ...?


குட்டிச்சுவரில் வெட்டி கதை பேசிய இளைஞர்கூட்டத்தை 
திரும்பி பார்க்க சொன்னது யாரோ ...?


அந்த யாரோ வேறு யாரும் அல்ல - 
தெரு முனையில் பள்ளிக்கு போகாமல் அடம்பிடிக்கும்
ஒரு சுட்டிக்குட்டியின் மழலை கீச்சுக்குரல் ...!

அன்புடன்,
சிவசுப்பிரமணியன் !

கவிதை 6 - உலகம் புதுசு

உலகில் வாழும் அத்தனை உயிரினங்களுக்கும் 
விதம் விதமாக தோற்றங்கள் ....;
காலம் மாறுவது உண்மை என்று நிரூபிக்க 
தினம் தினம் மாற்றங்கள் ....;
மனித வாழ்க்கையில் மேடு பள்ளம் போல்
சற்று தடுமாறும் ஏற்றங்கள் ....;
மனிதனின் பாவச் செயல்களுக்கு பதிலடி கொடுக்கும்
இயற்கையின் சீற்றங்கள் ....;
தீர்ப்பு வழங்க சட்டம் இருந்தாலும் நரகத்தில்
தண்டிக்க வேண்டிய குற்றங்கள் ....;
வாழ்க்கை பாதையில் தடம் மாறாமல் இருக்க
தவிர்க்க வேண்டும் ஏமாற்ற்றங்கள் ....;
புரியாத புதிருக்கு விடை கிடைக்கும் வரை
உலகம் முழுதும் சுற்றுங்கள் ....;
உலகமே அழிந்து போகும் அந்த நாள் வரும் வரை
மனித குலத்தை காப்பாற்றுங்கள் ....;
எத்தனை யுகங்கள் தோன்றி மறைந்தாலும் ஒவ்வொரு
யுகத்தின் வரலாற்றை போற்றுங்கள் ....;
எத்தனை பிறவிகள் மண்ணில் பிறந்தாலும் இறந்தாலும்
மாறாது காலத்தின் அரங்கேற்றங்கள் ....!!!

அன்புடன்
சிவசுப்பிரமணியன் !

கவிதை 5 - பருவம்

*உள்ளம் தெளிவாகவும் அழுகை அழகாகவும் 
ஆரம்பிக்கும் குழந்தை பருவம் !
தோற்றம் கனிவாகவும் துணிச்சல் துள்ளலோடு 
முன்னேறும் பள்ளிப்பருவம் !
ஆற்றல் அறிவாகவும் மனம் காதலோடு கலந்து
வருடும் கல்லூரிப்பருவம் !

*ஆசை கனவுகளும் லட்சிய வெறியோடு வெற்றியை எட்ட
நினைக்கும் இளமை பருவம் !
தேடல் முயற்சிகளும் நம்பிக்கை உணர்வுகளோடு கஷ்டப்பட்டு
கிடைக்கும் வேலைப்பருவம் !
தித்திக்கும் இன்பமும் புரிதலும் வாழ்க்கைத்துணையோடு 
பயணமாகும் கல்யானப்பருவம் !

* குடும்பச்சுமைகளையும் எதிர்பார்ப்புகளையும் எதிர் நீச்சல் 
போட்டுக்கொண்டு அன்போடும் பாசத்தோடும் பரிவோடும்
நேசத்தோடும் நிறைந்த பக்குவத்துடன் முதுமை பருவம் !

நீங்கள் இப்போது எந்த பருவம் ???

அன்புடன்,
சிவசுப்பிரமணியன் !

சனி, 21 ஜனவரி, 2012

கவிதை 4 - வாழ்க்கை வரலாறு

கனவுகள் நிறைவேறுமா என்று கண்களில் ஏக்கம்,
லட்ச்சியத்தை அடைந்து விடுவோமா என்று மனதினில் தேக்கம்,

நம்பிக்கையை வர வழைக்க ஏன் இன்னும் தயக்கம்,
சோர்ந்து போய் விடுவோமா என்று சற்று மயக்கம்,

வின்னை எட்டி பிடிக்க பெற்றோர்கள் தருவது ஊக்கம்,
வெற்றி படியை தொட்டு விட்டால் உன் ஆயுள் தீர்க்கம்,
மகிழ்ச்சியின் உச்சியை அடைந்தால் காண்போம் சொர்க்கம்,

நேர்மையை வெளிப்படுத்த உறவுகள் காட்டுவது பாசம்,
ஆபத்திலும் உதவி செய்வது நண்பர்களின் நேசம்,

ஆசைகள் நிறைவேற வேண்டும் என்பது யாவர் விருப்பம்,
வாழ்க்கையின் அர்த்தத்தை தெரிந்து கொண்டால் அதுவே திருப்பம்,
சோகமான நினைவுகள் திரும்பவும் ஞாபகம் வந்தால் துயரம்,
எண்ணங்கள் வளர்த்துக்கொண்டால் புது விதமான அனுபவம்,
சிந்தித்து செயல்பட மாற்ற வேண்டும் உன் சுபாவம்,

உன்மையை மறைக்க ஏன் போட வேண்டும் வீன் வேஷம்,
நிம்மதி இருக்கும் இடத்தை நெருங்கினால் சந்தோஷம்,
மூட நம்பிக்கையை ஒழித்தால் அகன்று விடும் தோஷம்,
சுதந்திரம் பாதுகாக்க வேண்டிய நம் நாட்டின் பொக்கிஷம்,

பிரச்னை என்பது நமக்கு கிடைத்த வாய்ப்புக்களின் ஊர்வளம்,
மகிழ்ச்சிக்கு தேவையான புன்னகை தான் வாழ்வின் சொக்கத்தங்கம்,
 உழைத்து வாழும் போது கூடாது வீன் கர்வம்,

போட்டி என்று வந்து விட்டால் பயமின்றி வேண்டும் வீரம்,
பொறுமயை கடைபிடிக்கும் காலத்தில் எதற்க்கு கோபம்,
சாதனை படைக்க முழு கவனத்துடன் காட்டு ஆர்வம்,

முக்தி கிடைக்க நிதானத்துடன் தேவை கடுந்த்தவம்,
பெருமை தேடி கொடுத்தால் பெற்றோர்கள் படுவது ஆனந்தம்,
தவழும் குழந்தை தள்ளாடும்போது தாங்கி பிடிப்பது சொந்தம்,

ஊழலும், வறுமையும்,ஜாதிவேறுபாடும் தான் நாட்டின் சாபம்,
விடாமுயற்ச்சி தான் மனிதனின் பாதைக்கு முன்னேற்றம்,
அழிவில்லாத துனையாக புகழையும் செல்வத்தையும் கொடுப்பது அறம்,

இன்பமும் உயர்வும் தரும் அறிவு ஒளி தான் கல்விச்செல்வம்,
தோல்வியும் ஜெயமும் இரு பக்கங்கள் கொண்ட ஒரே நாணயம்,

சோதனைகளை முறியடிக்க உதவுவது முடியும் எனும் மந்திரம்,
வலிமை இல்லாத போது நம்க்கு தேவைப்படும் ஆயுதம் தந்திரம்,

பகை இல்லாமல் இருக்க வளர்த்து கொள்ள வேண்டும் அன்புக்குணம்,
புகழ் கிடைப்பதற்க்கு தீய செயல்களில் ஈடுபடுவது மாபெரும் குற்றம்,

உண்ர்ச்சிகளின் புத்தகத்தை புரட்டினால் கிடைக்கும் தத்துவம்,
அறிவுறைகளை நடைமுறையில் பயன்படுத்தினால் தான் மகத்துவம்,

கற்பனைகள் கொண்டு படைக்க இயலும் ஒரு சித்திரம்,
உலகம் உனக்கென எழுதட்டும் புது சரித்திரம்,

ஒரு நாடு வல்லரசாக மாறுவதற்க்கு இளைஞர்களின் வேகமும்,
ஒவ்வோரு குடிமகனது கடமையும், இன்றைய மொட்டுக்களான
மழலைகளின் ஞானமும், விவேகமும்,பகுத்தறிவும்,
 உருதுணையாக கலந்திருப்பது அவசியம் !!