சனி, 7 ஏப்ரல், 2012

கவிதை 15 - இயற்க்கை உரையாடல்

மாமரத்தில் அசைந்தாடும் மாங்கனியே,
நாவில் தாண்டவமாடும் தமிழிசையே,
என் மனதிற்கு நிம்மதி தாருங்கள் **

வெள்ளை மழையாய் பொழியும் பனித்துளியே,
வளைந்து நெளிந்து வரும் வற்றாத நதியே,
என் மௌனத்திற்கு அர்த்தம் கூறுங்கள் **

சேவலை கொக்கரக்கோ என்று கூவச்செய்யும் சூரிய ஒளியே,
கார்த்திகை மாதத்தை ஞாபகப்படுத்தும் தீபச்சுடரே,
என் வாழ்வின் வெளிச்சமாக திகழுங்கள் **

அசைக்க முடியாத வல்லமை படைத்த அசுர மலையே,
திமிங்கலங்களை சுமக்கும் பரந்த உள்ளம் கொண்ட கடல் அலையே,
என் இதயத்திற்கு சுமை தாங்கும் பலம் கொடுங்கள் **

வேங்கையின் வீரத்தோடு வேட்டையாடும் புலிக்குட்டியே,
காட்டின் அரசனாகபோகும் சூரக்கோட்டை சிங்கக்குட்டியே,
என் வேகத்திற்கு ஒரு வழி காட்டுங்கள் **

அழகு பதுமை போல் காட்சியளிக்கும் வண்ண ரோஜாவே,
கல்வித்தாய் சரஸ்வதி வீற்றிருக்க உதவும் செந்தாமரையே,
என் நேர்மையை நிலை நிறுத்துங்கள் **

இன்னிசை ராகத்தோடு பாட்டு பாடிடும் பூங்குயிலே,
கச்சேரி தாளத்தோடு நடனம் ஆடிடும் பொன்மயிலே,
என் உடலுக்கு உற்சாகம் ஊட்டுங்கள் **

வறண்ட பூமியின் தாகத்தை தீர்க்கும் மழைத்துளியே,
மகாபாரத போரில் முழங்கிய சங்கு ஒலியே,
என் நம்பிக்கைக்கு ஆதரவுக்கரம் நீட்டுங்கள் **

அம்புலி மாமா என்றழைக்க படும் வெள்ளிநிற வெண்ணிலவே,
நிலவுக்கு துணையாக வானில் கண் சிமிட்டும் நட்சத்திரங்களே,
என் புத்திக்கு கூர்மை தீட்டுங்கள் **

புல்வேலிகளை கடந்து ஓசையில்லாமல் வரும் தென்றல் காற்றே,
மலைச்சரிவுகளை கடந்து ஓசையோடு விழும் நீர் வீழ்ச்சியே,
என் புதிருக்கு விடை கண்டு பிடியுங்கள் **

ஒட்டகங்களின் வாசஸ்தலமான அடர்ந்த பாலைவனமே,
பறவைகளின் உல்லாச பயணத்திற்கு வழி விடும் நீல மேகமே,
என் கோரிக்கைகளை பொறுமையுடன் கேளுங்கள் **

பார்த்தவுடன் ரசிக்க தோன்றும் பசுமை நிறைந்த பூஞ்சோலையே,
கனவுலகத்திற்கு அழைத்துச்செல்லும் எழில் கொஞ்சும் மாஞ்சோலையே,
என் சோகத்திற்கு முற்றுபுள்ளி வையுங்கள் **

காதலுக்கு தூது போகும் தூய்மையான வெள்ளைப் புறாவே,
கல்யாணத்திற்கு ஜோதிடம் பார்க்கும் பச்சைக்கிளியே,
என் எதிர்கால இலட்சியத்தை நிறைவேற்றுங்கள் **

ஆலயங்களில் பாவங்களை போக்கும் புனித தெப்பக் குளமே,
நெடு-நெடு வென வளர்ந்து நிற்கும் தென்னை மரமே,
என் பிரச்னைகளுக்கு தீர்வு சொல்லுங்கள் **

விவேகமாக துள்ளி ஓடும் புள்ளி மான் குட்டியே,
வண்ணங்கள் தீட்டிய மேனியுடன் தேன் அருந்தும் பட்டாம்பூச்சியே,
என் நிம்மதிக்கு ஓர் இடம் தேடுங்கள் **

எழில் கொஞ்சும் நெஞ்சம் கொண்ட அழகு அன்னமே,
வட்டமிட்டு சிறகடிக்கும் சின்னஞ்சிறு சிட்டுக்குருவியே,
என் சங்கீதத்திற்கு இசை மீட்டுங்கள் **

கர்ஜிக்கும் இடி முழக்கத்தோடு பளிச்சிடும் மின்னலே,
அதிசயங்கள் பல நிறைந்த அற்புத தீவுகளே,
என் ராகத்திற்கு தாளம் போடுங்கள் **

பொன் விளையுற பூமியை கொடுத்த பூமா தேவியே,
பாதுகாப்பும் அரவணைப்பும் தந்தருளும் இயற்க்கை அன்னையே,
என் பிரார்த்தனைக்கு சக்தியை திரட்டுங்கள் ****

**** இயற்க்கை ரசனையுடன்,
**** சிவசுப்பிரமணியன் ***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக