திங்கள், 22 பிப்ரவரி, 2016

10 நொடி கதை 8 - சுயம்வரம்

2100 கி.பி பிரம்மாண்டமான மாளிகை முன் ஒரு நீண்ட வரிசையில் இளைஞர்கள் நின்று கொண்டிருந்தார்கள். மாளிகையின் வாசலில் ஒரு எந்திரன் ஒவ்வொரு இளைஞனையும் நிறம், இரத்த பிரிவு, எடை, உயரம், பழக்க வழக்கங்கள் என்று சோதனை செய்து கொண்டிருந்தது. மாளிகையின் உள்ளே மின்திரையில் 50% அறிவாளி, 20% புகை பிடிப்பவன், 30% மது அருந்துபவன் என்று புள்ளி விவரங்களை பார்வையிட்டாள் நல்ல மணமகனை எதிர்பார்க்கும் எந்திர பெண்.

--சிவசுப்பிரமணியன்

சனி, 20 பிப்ரவரி, 2016

10 நொடி கதை 7 - உடற்பயிற்ச்சி

“ஆரோக்கியமாக வாழ்வதற்கு நடப்பது, நீச்சலடிப்பது, படிக்கட்டில் ஏறி இறங்குவது என்ற எளிய உடற்பயிற்ச்சிகளை கடை பிடியுங்கள்.” 

அருமையான சொற்பொழிவை முடித்து விட்டு அந்த இளம் சுகாதார அமைச்சர் மின்தூக்கியை நோக்கி அன்ன நடை நடந்தார்.



-- சிவசுப்பிரமணியன்

சனி, 13 பிப்ரவரி, 2016

கட்டுரை 6 - மறந்து போன தேவதை கற்பனை கதைகள்

டந்த கட்டுரையில் மறந்து போன மாயாஜால கற்பனைக்கதைகள் பற்றி எழுதியிருந்தேன். இந்த கட்டுரையில் தேவதை கதைகள் (Fairy Tales), பறக்கும் நாகங்கள் (Dragons), வேதாளங்கள் அல்லது காட்டேரிகள் (Vampires), ஓநாய் மனிதர்கள் (Werewolves) மந்திரவாத குள்ளர்கள் (Dwarfs), மாயலோக கூளியர்கள் (Elves) என்று வியக்க வைக்கும் கற்பனை கதாபாத்திரங்கள் பற்றி பார்ப்போம்.

தமிழில் தேவதை கதைகள் அந்த காலத்தில் பல வடிவங்களில் இருந்திருக்கலாம். தேவதை கதைகளில் நல்ல தேவதைகள் ஆக தேவதூதர்கள், தெய்வங்கள், தேவர்கள், குறும்பு செய்யும் குட்டி தேவதைகள் ஒரு பக்கம் என்றால் கெட்ட தேவதைகள் என்று பேய், பிசாசு, சூனியம், விசித்திர குள்ளர்கள், பூதங்கள், அரக்கர்கள், அசுரர்கள் மறுப்பக்கம் என்று புராண கதைகளிலே படித்திருப்பீர்கள். ஆங்கில புனைக்கதைகளிலும் மாயாஜால திரைப்படங்களிலும் Elves, Dwarves, Dragons, Vampires, Werewolves, Angels, Unicorns, Centaurs , Mermaids, Ghosts, Demons, Devils, Goblins, Zombies, Witches, Trolls, Genies, Black magic, White magic, Giants, Gnomes, Pixies, Immortals, Sorcery என்று வகைகளோ ஏராளம்.

கிரேக்க புராணங்கள், சீன புராணங்கள், புத்த புராணங்கள் புரட்டி பார்த்தவர்களுக்கு இந்த கற்பனை கதாபாத்திரங்கள் பரிச்சயமானவை தான். Dragons என்ற வார்த்தையை தமிழில் மொழிபெயர்த்தால் வலு சர்ப்பம் அல்லது பறக்கும் நாகம் என்று தான் இணையத்தில் கிடைத்தன. ஆங்கில படத்தை தமிழில் பார்க்கும் உணர்வு தான். ஆனால் தமிழில் நேரடி கட்டுரைகளோ திரைப்படங்களோ மறந்து போன இந்த கற்பனை படைப்புகளை நாம் பார்த்ததும்,படித்ததும், கேட்டதும் அரிது.

அம்புலி, மிருதன், புலி என்ற தமிழ் திரைப்படங்களில் ஓநாய் மனிதன் (Werewolf), மிருதன் (Zombie), காட்டேரி (Vampire) கதைக்களமாக இருப்பதை கவனித்திருப்பீர்கள். ஆனால் ஆங்கில திரையுலகில் Vampire வகையில் Dracula, Twilight series, Van Helsing, Hotel Transylvania, Underworld என்று எண்ணிக்கையில் அடங்காத திரைப்படங்கள் சொல்லிவிடலாம். காட்டேரிகள் சாகாவரம் பெற்று மனித ரத்தம் சுவைக்கும் இனமாக காலம் காலமாக காட்டியிருப்பார்கள். ஓநாய் மனிதர்களை முழு நிலவில் மட்டும் ஓநாய், மற்ற நாட்களில் மனிதனாக சித்தரிப்பார்கள்.இப்படி ஒவ்வொரு தேவதை கதைகளும் அற்புதமான கற்பனை களஞ்சியம்.

Elves என்ற வார்த்தைக்கு தமிழில் அர்த்தம் என்ன என்று கூகுளை சொடுக்கிய போது கிடைத்த தமிழ் வார்த்தைகள் கூளி, தெய்வம். ஆனால் அது சரியான மொழிபெயர்ப்பு என்று என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கூளி என்றால் ஆண் பேய், தெய்வம் என்றால் கடவுள் என்று தான் நேரடி அர்த்தங்கள். இந்த ஒரு கதாபாத்திரத்தை ஜெர்மானிய புராணங்களிலிருந்து எடுக்கப்பட்டதாக விக்கிபீடியா சொல்கிறது. Lord of the Rings, Eragon ஆகிய திரைப்படங்களை பார்த்தவர்களுக்கு Elves, Dragons  எப்படி இருப்பார்கள் என்பது தெரிந்திருக்கும். The Chronicles Of Narnia என்ற நாவலை படித்தவர்களோ அல்லது திரைப்படத்தை பார்த்தவர்களோ இந்த கட்டுரையில்  குறிப்பிட்ட பெரும்பாலான கற்பனை வடிவங்கள்  உலா வருவதை கவனித்திருப்பீர்கள்.

சமஸ்க்ருத புராணங்கள் மற்றும் தமிழ் புராணங்களில் கூட வியக்க வைக்கும் கதைகள் உள்ளன. அதை இன்னொரு கட்டுரையில் பார்க்கலாம்.

--சிவசுப்பிரமணியன்.

செவ்வாய், 15 டிசம்பர், 2015

10 நொடி கதை 6 - சிங்க நடை


“எழுந்து நட என் செல்லம்... அப்படி தான் என் சிங்க குட்டி”, தவழ்ந்து வந்த குழந்தைக்கு நடை பயிற்சி சொல்லிக்கொடுத்து விட்டு மிக அருகிலிருக்கும்  மளிகைக்கடைக்கு தனது இரு சக்கர வாகனத்தை கிளப்பினார் அந்த குழந்தையின் தந்தை.
-- சிவசுப்பிரமணியன்

திங்கள், 14 டிசம்பர், 2015

10 நொடி கதை 5 - நேர்முக தேர்வு


ரமேஷ் பதற்றத்துடன் காத்திருந்தான். அருகிலிருந்த பட்டதாரி ஒருவன் அவனிடம் பல விஷயங்களை கேட்டு நச்சரித்து கொண்டிருந்தான். நேர்முக தேர்வு அறைக்குள் நுழைந்தவனுக்கு அதிர்ச்சி. "நீங்கள் தேர்வாகிவிட்டீர்கள். மற்ற விவரங்கள் பேசுவோமா?" அவனுடன் பேசிய பட்டதாரி எதிரே நின்று கொண்டிருந்தார்.

--சிவசுப்பிரமணியன்

சனி, 12 டிசம்பர், 2015

10 நொடி கதை 4 - அக்கறை


“அலாரம் அடிச்சது கூட தெரியாம அப்படி என்ன தூக்கம் வேண்டி கிடக்கு. சீக்கிரம் கிளம்பி ஸ்கூலுக்கு போடா!” 50 வயதை தாண்டிய பள்ளி முதல்வரை அக்கறையோடு எழுப்புகிற 70 வயது தாய்.

--சிவசுப்பிரமணியன்

வெள்ளி, 11 டிசம்பர், 2015

10 நொடி கதை 3 - பாசம்


பாட்டியை  பார்த்தவுடன்  அழுகையை  நிறுத்தி புன்னகை  பூத்தது மடிக்கணினியின் ஒளித்திரையில் மழலை முகம்.

--சிவசுப்பிரமணியன்

செவ்வாய், 8 டிசம்பர், 2015

10 நொடி கதை 2 - தரிசனம்

“இன்னைக்குள்ள கடவுள பார்த்திருலாமா?” வரிசையின் கடைசியில் நின்ன பக்தன் ஒருவன் கேட்டான். “உடல் முடியாம கூலி வேலை செய்யும் உன்னை பெற்ற தாயை முதலில் பார்.” என்றது ஒரு குரல். திரும்பி பார்த்தால் யாரும் இல்லை.

--சிவசுப்பிரமணியன்

ஞாயிறு, 6 டிசம்பர், 2015

10 நொடி கதை 1 - பசி

அடுக்கு மாடி வீட்டின் உப்பரிகையிலிருந்து பனிக்கூழ் சுவைக்கும் பாப்பா வேடிக்கை பார்த்துகொண்டிருந்தது குடிசை திண்ணையில் தாய்ப்பாலுக்காக அழுதுகொண்டிருக்கும் பாப்பாவை !


-- சிவசுப்பிரமணியன்.

ஞாயிறு, 25 அக்டோபர், 2015

கவிதை 46 - இயற்க்கை பாசம்

தந்தை சிங்கத்தின் தாடி பிடித்து,
சுட்டியாக விளையாடும் சிங்கக்குட்டிகள் !
தாய் யானையின் தும்பிக்கையை பிடித்து, 
குட்டி நடை போடும் யானைக்குட்டிகள் !

தாய் புலியின் நாவு வருடலை அன்போடு,
ஏற்றுக்கொள்ளும் புலிக்குட்டி !
தனது நெற்றியை தாய் நெற்றியோடு அழகாக,
ஒட்டிக்கொள்ளும் குட்டி ஒட்டகச்சிவங்கி !


அன்னை சிறுத்தையின் அரவணைப்போடு,
குறும்புகள் பல செய்யும் சிறுத்தைக்குட்டிகள் !
தாய் கங்காரு மடியிலிருந்து ஆர்வத்தோடு,
வெளியே எட்டிப்பார்க்கும் கங்காருக்குட்டிகள் !

தாயின் சமிக்ஞை அறிந்து சுறுசுறுப்போடு,
வேகமாக தாய்ப்பால் அருந்தும் புள்ளிமான் குட்டிகள் !
தாயின் பிடியிலிருந்து கீழே விழாமல் இருக்க,
இறுக்கமாக பிடித்து தொங்கும் குரங்குக்குட்டிகள் !

இரையை சமமாக பிரித்து பிஞ்சு வாய்க்குள் 
அக்கறையோடு உணவூட்டும் சிட்டுக்குருவிகள் !
கூட்டு குடும்பமாக வானில் சிறகை விரித்து,
சுதந்திரமாக பறக்கும் எத்தனையோ பறவைகள் !

விலங்குகள் வேட்டையாடும் காட்டுக்குள்,
கொட்டிக்கிடப்பது இயற்க்கை பாசமும் தான் ....

--சிவசுப்பிரமணியன்