ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

கவிதை 17 - நினைத்துப்பார்

பிடிக்காத உணவை சாப்பிடாமல் சலிப்புடன் ஒதுக்கி வைத்தால்,
பசி-பட்டினியோடு கிடக்கும் அநாதை ஏழைகளை நினைத்துப்பார்,

சின்ன-சின்ன கவலையோ,பிரச்சினையோ,கஷ்டமோ வந்தால்,
எதிர்நீச்சல் போட்டு போராடும் தன்னம்பிக்கையுள்ள
ஊனமுற்றோரை நினைத்துப்பார்,

வாழ்க்கையில் தொடர்ந்து தோல்விகளை மட்டும் சந்தித்தால்,
விடாமுயற்சியுடன் வெற்றிக்கு பாடுபட்டு சிகரம்
தொட்ட பிரபலங்களை நினைத்துப்பார்,

பிறரை குறை சொல்லுவதும், மற்றவர்களை கேலி செய்யும் போதும்,
அறிந்தும் அறியாமலும் செய்த அளவற்ற
தன் தவறுகளை நினைத்துப்பார்,

கையளவு கற்றுக்கொண்டு அதிகாரம் செலுத்தும் கர்வம் வந்தால்,
கடலளவு உலகம் தெரியாத கிணற்றுதவளையை நினைத்துப்பார்,

குற்றத்தை ஒப்புகொள்ளாமல் அடுத்தவர் மீது மழி சுமத்தும் போது,
பிழையான எண்ணத்தால் வரும் கொடூர விளைவுகளை நினைத்துப்பார்,

அடாவடியாக ஊர் சுற்றிக்கொண்டு வீண் செலவு செய்யும் போது,
இரவு பகல் பாராமல் பாடுபடும் பெற்றோர்களை நினைத்துப்பார்,

பணம்,பதவி,பட்டம்,புகழ் என்று அனைத்தும் சூழ்ந்துகொண்டால்,
உயர்ந்த அந்தஸ்தை பெற்றுத்தந்த உழைப்பு எனும்
ஏணிப்படிகளை நினைத்துப்பார்,

மாளிகை போல் வீடு இருந்தும் பேராசை அடங்கவில்லை என்றால்,
குப்பைத்தொட்டியில் பிறந்து வளர்ந்த பிஞ்சுகளை நினைத்துப்பார்,

சோகம்-சோதனை-கஷ்டம்-நஷ்டம் என்று வந்தால்,
உன் வாழ்க்கை உன் கையில் என்று நினைத்துப்பார்,

துன்பங்கள் துரத்தினால் ஆலயங்கள் சென்று கடவுளை தேடாமல்,
இன்பங்களை தந்தருளும் உனுக்குள் இருக்கும்,
இறைவனை மட்டும் நினைத்துப்பார் ******

அன்புடன்,
*சிவசுப்பிரமணியன்*

கவிதை 16 - இந்தியன்

காதல் வசப்பட்டு கற்பனை கவிதை
எழுதுபவன் நான் அல்ல,
இயற்கையை ரசித்து விட்டு சிந்தனை சித்திரம்
வரைபவன் நான் அல்ல,
அமைதியான இடம் தேடி சின்னஞ்சிறு சிலை
செதுக்குபவன் நான் அல்ல,
மங்கையின் அழகை கண்டு மாணிக்க மாளிகை
கட்டுபவன் நான் அல்ல,
கடற்க்கரை காற்று வாங்கி பாசமலர் பாட்டு
பாடுபவன் நான் அல்ல,
முரட்டு மனிதன் போல் கோபப்பட்டு நடராஜர் நாட்டியம்
ஆடுபவன் நான் அல்ல,
மண்வாசனைக்கு அடிமை என்றாலும் பூஞ்சோலை பூக்கள்
நுகர்பவன் நான் அல்ல,
இசையில் மயங்கி விழுந்தாலும் கல்யாண கெட்டிமேளம்
கொட்டுபவன் நான் அல்ல,
முகம் பார்க்க உதவினாலும் கண்ணாடி கட்டிடத்தில்
வசிப்பவன் நான் அல்ல,
கடவுள் நம்பிக்கை இருந்தாலும் வாஸ்து படி வாசல்
பார்ப்பவன் நான் அல்ல,
ஆதங்கப்படும் ஆசாமி போல் கதிகலங்கும் கவலைகளுக்கு
வருத்தபடுபவன் நான் அல்ல,
ஆஸ்திகள் பல கொட்டி கிடந்தாலும் பேராசை பேர்வழியாக
மாறுபவன் நான் அல்ல,
ஆசைகளை மனதுக்குள் பூட்டி அதற்க்கு மகத்தான மகுடம்
சூட்டுபவன் நான் அல்ல,
காற்கால மழையில் நனைந்து காகித கப்பல்
விடுபவன் நான் அல்ல,
விலைமதிக்க முடியாத முத்து கிடைக்க கட்டுகடங்காத கடலில்
மூழ்குபவன் நான் அல்ல,
அரசியல்வாதி போல் தேர்தல் வெற்றிக்காக வாக்குறுதிகள்
கொடுப்பவன் நான் அல்ல,
காரியம் கை கூட வேண்டி கபட நாடகம் ஆடி கள்ளக்கன்னீர்
விடுபவன் நான் அல்ல,
மேடைகளில் மாமேதை போல் சொதப்பல் சொற்பொழிவு
நிகழ்த்துபவன் நான் அல்ல,
ஜாதி-கலவரம்-தீவிரவாதம் என்ற பெயரில் தேசத்துரோகம்
செய்பவன் நான் அல்ல,
"ஜெய்-ஹிந்த்" என்ற மந்திர சொல்லுக்கு கட்டுப்பட்டு,
தன உயிரை பற்றி கவலைப்படாமல் பல கோடி உயிர்களுக்கு,
போராடும் சமூக சேவகன் மட்டுமல்லாமல் எல்லையிலிருந்து
கொண்டே எதிரிகளிடமிருந்து நாட்டை காப்பாற்றும் தியாக
உள்ளம் கொண்ட இராணுவ வீரன் தான் நான் *****

இவை அனைத்திற்கும் மேலாக தேசிய கோடியை ஏற்றி
வைத்து மரியாதை செலுத்தும் நான் ஒரு சராசரி இந்திய குடிமகன் *****

ஜெய் ஹிந்த்,
சிவசுப்பிரமணியன் ****

சனி, 7 ஏப்ரல், 2012

கவிதை 15 - இயற்க்கை உரையாடல்

மாமரத்தில் அசைந்தாடும் மாங்கனியே,
நாவில் தாண்டவமாடும் தமிழிசையே,
என் மனதிற்கு நிம்மதி தாருங்கள் **

வெள்ளை மழையாய் பொழியும் பனித்துளியே,
வளைந்து நெளிந்து வரும் வற்றாத நதியே,
என் மௌனத்திற்கு அர்த்தம் கூறுங்கள் **

சேவலை கொக்கரக்கோ என்று கூவச்செய்யும் சூரிய ஒளியே,
கார்த்திகை மாதத்தை ஞாபகப்படுத்தும் தீபச்சுடரே,
என் வாழ்வின் வெளிச்சமாக திகழுங்கள் **

அசைக்க முடியாத வல்லமை படைத்த அசுர மலையே,
திமிங்கலங்களை சுமக்கும் பரந்த உள்ளம் கொண்ட கடல் அலையே,
என் இதயத்திற்கு சுமை தாங்கும் பலம் கொடுங்கள் **

வேங்கையின் வீரத்தோடு வேட்டையாடும் புலிக்குட்டியே,
காட்டின் அரசனாகபோகும் சூரக்கோட்டை சிங்கக்குட்டியே,
என் வேகத்திற்கு ஒரு வழி காட்டுங்கள் **

அழகு பதுமை போல் காட்சியளிக்கும் வண்ண ரோஜாவே,
கல்வித்தாய் சரஸ்வதி வீற்றிருக்க உதவும் செந்தாமரையே,
என் நேர்மையை நிலை நிறுத்துங்கள் **

இன்னிசை ராகத்தோடு பாட்டு பாடிடும் பூங்குயிலே,
கச்சேரி தாளத்தோடு நடனம் ஆடிடும் பொன்மயிலே,
என் உடலுக்கு உற்சாகம் ஊட்டுங்கள் **

வறண்ட பூமியின் தாகத்தை தீர்க்கும் மழைத்துளியே,
மகாபாரத போரில் முழங்கிய சங்கு ஒலியே,
என் நம்பிக்கைக்கு ஆதரவுக்கரம் நீட்டுங்கள் **

அம்புலி மாமா என்றழைக்க படும் வெள்ளிநிற வெண்ணிலவே,
நிலவுக்கு துணையாக வானில் கண் சிமிட்டும் நட்சத்திரங்களே,
என் புத்திக்கு கூர்மை தீட்டுங்கள் **

புல்வேலிகளை கடந்து ஓசையில்லாமல் வரும் தென்றல் காற்றே,
மலைச்சரிவுகளை கடந்து ஓசையோடு விழும் நீர் வீழ்ச்சியே,
என் புதிருக்கு விடை கண்டு பிடியுங்கள் **

ஒட்டகங்களின் வாசஸ்தலமான அடர்ந்த பாலைவனமே,
பறவைகளின் உல்லாச பயணத்திற்கு வழி விடும் நீல மேகமே,
என் கோரிக்கைகளை பொறுமையுடன் கேளுங்கள் **

பார்த்தவுடன் ரசிக்க தோன்றும் பசுமை நிறைந்த பூஞ்சோலையே,
கனவுலகத்திற்கு அழைத்துச்செல்லும் எழில் கொஞ்சும் மாஞ்சோலையே,
என் சோகத்திற்கு முற்றுபுள்ளி வையுங்கள் **

காதலுக்கு தூது போகும் தூய்மையான வெள்ளைப் புறாவே,
கல்யாணத்திற்கு ஜோதிடம் பார்க்கும் பச்சைக்கிளியே,
என் எதிர்கால இலட்சியத்தை நிறைவேற்றுங்கள் **

ஆலயங்களில் பாவங்களை போக்கும் புனித தெப்பக் குளமே,
நெடு-நெடு வென வளர்ந்து நிற்கும் தென்னை மரமே,
என் பிரச்னைகளுக்கு தீர்வு சொல்லுங்கள் **

விவேகமாக துள்ளி ஓடும் புள்ளி மான் குட்டியே,
வண்ணங்கள் தீட்டிய மேனியுடன் தேன் அருந்தும் பட்டாம்பூச்சியே,
என் நிம்மதிக்கு ஓர் இடம் தேடுங்கள் **

எழில் கொஞ்சும் நெஞ்சம் கொண்ட அழகு அன்னமே,
வட்டமிட்டு சிறகடிக்கும் சின்னஞ்சிறு சிட்டுக்குருவியே,
என் சங்கீதத்திற்கு இசை மீட்டுங்கள் **

கர்ஜிக்கும் இடி முழக்கத்தோடு பளிச்சிடும் மின்னலே,
அதிசயங்கள் பல நிறைந்த அற்புத தீவுகளே,
என் ராகத்திற்கு தாளம் போடுங்கள் **

பொன் விளையுற பூமியை கொடுத்த பூமா தேவியே,
பாதுகாப்பும் அரவணைப்பும் தந்தருளும் இயற்க்கை அன்னையே,
என் பிரார்த்தனைக்கு சக்தியை திரட்டுங்கள் ****

**** இயற்க்கை ரசனையுடன்,
**** சிவசுப்பிரமணியன் ***

ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

கவிதை 14 - கடற்க்கரை காதல்

தூண்டில் போட்டு சிக்காத மீன் 'உண்டு',
தவழ்ந்து செல்லும் கரை ஓரம் ஒரு 'நண்டு',
சூடான சுண்டலுடன் விற்பனை ஆகும் 'வெள்ளைப்பூண்டு',
மெய் சிலிர்க்கும் காற்றோடு காதலர்கள் 'இரண்டு',
வெகு நேரம் காதலி மௌனமாக இருப்பதை 'கண்டு',
காதல் பரிசாக காதலன் கொடுத்தான் 'பூச்செண்டு',
சோகத்தை மறைத்து புன்னகை பூத்தாள் அதை 'ஏற்றுக்கொண்டு',
அவர்களை சுற்றி ரீங்காரம் அடித்தது பொன் 'வண்டு',
அருகே வானில் பட்டம் விட்டு லூட்டியடிக்கும் குட்டி 'வாண்டு',
அடிக்கடி அம்மாவிடமிருந்து வாங்கின திட்டு 'மண்டு',
ஜோடி புறாக்கள் அநேகம் நடத்தியது காதல் 'தொண்டு',
காதல் அபாயம் என எச்சரித்தது சிறை பிடிக்கும் 'கூண்டு',
காதல் அதிசயம் என பதிலடி கொடுத்தனர் காதலை துப்பறியும் 
காதலன்களான ஜேம்ஸ் 'பாண்டு',
புனிதமான காதலை துளி அளவு கூட அசைக்க முடியாது
ஓர் 'அணுகுண்டு',
கடற்க்கரை ஓரம் சங்கமம் ஆகும் காதலர்கள் மறக்கவில்லை 
காதலர்தினத்தை, ஆனால் மறந்து விட்டார்கள் அது எந்த 'ஆண்டு' ....!!!

அன்புடன்,
சிவசுப்பிரமணியன் !

சனி, 31 மார்ச், 2012

ஹைக்கூ 3

பாம்புகளை தலையணைகளாக வைத்துக்கொண்டாலும்,
நம்பிக்கை துரோகம் செய்யும் விஷமிகளின் சகவாசம் வைத்துகொள்ளாதே !

ஹைக்கூ 2

துணிவு கொடுக்கும் உற்சாக வெற்றி,
கோழைத்தனம் கொடுப்பதோ அவமானத்தோல்வி !

ஹைக்கூ 1

உழைப்பு உனக்கு வெற்றிக்கான படிக்கட்டு,
விடாமுயற்சியுடன் செதுக்கு தன்னம்பிக்கை எனும் கல்வெட்டு !

கவிதை 13 - அன்றும் இன்றும்

இருள் சூழ்ந்த உலகில் பிறந்தான் ஆதி மனிதன் அன்று,
மின்சாரம் பாயும் பிரகாசமான உலகில் வாழும் நவீன மனிதன் இன்று !

மொழிகள் ஏதும் இல்லாமல் ஊமை விழிகள் 
மூலம் தொடர்பு இருந்தது அன்று,
விழிகளுடன் சேர்த்து தனி மனிதருக்கே தெரியாத பல,
ஆயிரகணக்கான மொழிகள் இன்று !

செய்திகள் தெரிவிக்க மனிதர்களையும் புறாக்களையும் 
தூது அனுப்பினார்கள் அன்று,
தொலைபேசி,தொலைக்காட்சி, இணையதளத்துடன் கணினி என்று
முன்னேறி கொண்டிருக்கும் விஞ்ஞான உலகம் இன்று !

வெவ்வேறு இடங்களுக்கு பயணம் செல்ல நடைபாதைகளை
பின்பற்றிய பாத சாரிகள் அன்று,
பல சக்கர வாகனங்கள், ரயில்-விமானங்கள்-கப்பல்கள் என்று
தொடரும் பயண முறைகள் இன்று !

இயற்க்கை மாற்றங்களை மட்டும் வைத்து தேதிகள் மற்றும்
நேரத்தை குறித்த காலம் அன்று,
சிறியது முதல் பெரியது வரை விதம் விதமான கடிகாரங்களிலும்
மின்னணு சாதனங்களிலும் மணி பார்க்கும் காலம் இன்று !

செடி கொடி மரங்களிலிருந்து கிடைக்கும் பழங்கள் மற்றும் காட்டு
மிருகங்களை வேட்டையாடி சாப்பிட்டார்கள் அன்று,
சைவ-அசைவ உணவு மட்டுமின்றி விவசாயத்தில் விளைந்த நெல்-கோதுமை தானியங்களோடு சேர்த்து புது புது உணவு வகைகள் இன்று !

யானைகளிலும் குதிரைகளிலும் கூட ஒரு காலம் சவாரி செய்ய
கற்றுக்கொண்டே வில்லும் அம்பும் ஏவி போர் நடந்தது அன்று,
நாட்டையே அழிக்கும் அணுகுண்டுகள், வெடி குண்டுகள்,வினோத 
ஆயுதங்கள் மற்றும் விகார ஏவுகணைகளால் தாக்குதல் இன்று !

காடு மலைகளுக்கு நடுவே விலங்குகளை தோழர்களாக கருதிய 
ஆதிவாசிகள் குடிசை போட்டார்கள் அன்று,
வானத்தை தொடும் அளவுக்கு கோபுரங்கள்,மாளிகைகள்,சிகரங்கள்,
கண்ணை பறிக்கும் கட்டிட வீடுகள் இன்று !

வித்தியாசங்கள் பல அடுக்கி விடலாம் அன்றும் இன்றும்,
மனிதனின் பிறப்பும் இறப்பும் மாறாமல் அரங்கேற்றம் ஆகிறது என்றும் !!!

அன்புடன்,
சிவசுப்பிரமணியன் ***

சனி, 17 மார்ச், 2012

கவிதை 12 - ஆத்ம யுத்தம்

கலைஞனின் ஞான ஒளியில் எரிந்தன அறிவுச்சுடர்;
இளைஞனின் காந்த விழியில் விரிந்தன காலை மலர்;
இறைவனின் நிசப்த மொழியில் படிந்தன ஆலமர வேர்;

எதிரிகளின் ஆக்ரோஷ வலையில் சிக்கின படைச்சுவர்;
பகைவனின் அம்பு மழையில் கசிந்தன குருதி நீர்;
தலைவனின் ஆயுதங்கள் நொடியில் மோதின நேருக்கு நேர்;

மைந்தனின் அகோர வீழ்ச்சியில் சரிந்தன வெற்றி தேர்;
துஷ்டர்களின் கத்தி முனையில் நெருங்கின யமனின் பாசக்கயிற்;
தளபதியின் மின்னல்வேக செயலில் கிழிந்தன எதிரியின் நார்;

கொடியவனின் மாய சூழ்ச்சியில் மடிந்தன ஓர் ஆயிரம் உயிர்;
கள்வனின் வஞ்சனையால் யுத்தபூமியில் புதைந்தன தருமத்தின் பயிர்;
கதிரவனின் அச்தம வேலையில் தரைமட்டமாகின தலைநகர்;

வேந்தனின் சாந்த வழியில் சிதைந்தன இளந்தளிர்;
தீயவர்களின் சங்கு ஒலியில் முடிந்தன இறுதி போர்;
வீரர்களின் மரண வேதனையில் எங்கும் பொழிந்தன சோகக் கண்ணீர்;

மாண்டவர்களின் அன்பு சமாதியில் மேகம் தெளித்தன தூயப் பன்னீர்;
உலகின் காலச்சுவடியில் வீழ்ந்தன வரலாற்று புதிர் ;
மண்ணின் மரியாதை பெட்டகத்தில் இன்னொரு ஆத்ம யுத்தம் தயார் !!!

வேல் முழக்கத்துடன்,
சிவசுப்பிரமணியன்.

கவிதை 11 - வாழ்க்கை

 வாழ்க்கை என்பது ஓர் அழகான பாட்டு ,
அதில் உள்ள வார்த்தைகள் யாவும் வரிகளாக மாற்றியது கடவுள்,
அதை தொகுத்து வழங்கியது தான் மனிதன், அந்த
பாட்டை ராகத்தோடு பாடுவது இதயம், அதை 
தாளத்தோடு ரசிப்பது மூளை, ஆனால் குரல் கேட்காமல் போய்
விட்டால் - பாடகருக்கும் கேட்பவருக்கும் தான் வலி அதிகம்,
கடைசியில் பழி எல்லாம் சேர்வது கவிஞருக்கு தான் !!!

வாழ்க்கை என்பது ஓர் நடமாடும் நூலகம்
அதை பொக்கிஷமாக கண்கானிப்பது கடவுள் ,
அதில் உள்ள புத்தகங்கள் யாவும் மனிதர்கள்,
ஒவ்வொரு புத்தகத்தை புரட்டி பார்த்தாலும் பிரச்னைகள் ,
புதிதாக வந்து செல்லரித்து போகும் பழைய புத்தகங்கள்,
விலை உயர்ந்தும் தாழ்ந்தும் உள்ள புத்தகங்கள்,
இப்படி பல வகையான புத்தகங்கள் இருந்தாலும்,
மாறாமல் இருப்பது அந்த ஒரே ஒரு கண்கானிப்பாளர் !!!

வாழ்க்கை ஒரு அழகான பூந்தோட்டம்;
வாழ்க்கை  ஒரு அற்புதமான கலைக்கூடம்;
வாழ்க்கை ஒரு விளங்கமுடியா அதிசயம்;
வாழ்க்கை ஒரு மாபெரும் சிற்பமண்டபம்;
வாழ்க்கை ஒரு மாறுபட்ட சித்திரச்சோலை;
வாழ்க்கை ஒரு வசந்தமான பளிங்கு மாளிகை;
வாழ்க்கை ஒரு எதிரொலிக்கும் கண்ணாடி;
வாழ்க்கை ஒரு விசித்திரமான கண்கட்டு மாயை;
வாழ்க்கை ஒரு வித்தக விளையாட்டு;

ஆதியும் அந்தமும் / ஆரம்பவும் முடிவும் புரியாத
இந்த வாழ்க்கைக்கு எத்தனை ஆயிரம் அர்த்தங்கள் !!!!

அன்புடன்,
சிவசுப்பிரமணியன்.