சனி, 7 ஜூன், 2014

கனவு 16 - கனவுக்குள் கனவு - முதல் கனவு

கண்ணுக்குள் நிலவு என்று கேள்வி பட்டிருப்பீர்கள். ஆனால் இது கனவுக்குள் கனவு. பொதுவாக பல கனவுகள் மாறி மாறி வரும். ஆனால் இந்த முறை ஒரு கனவுக்குள் வேறு கனவு வந்தது. 'Inception' படம் போல் பல நிலைகள் நான் கனவு கண்டேன் என்று தான் சொல்லலாம். ஆச்சரியமாகத்தான் இருந்தது நான் விழித்த பிறகு.

நானும் எனது நண்பனும் திக்கு தெரியாத காட்டில் ஏதோ இடம் தெரியாத பாதை வழியாக நள்ளிரவில் கும்மிருட்டில் நடந்து செல்கிறோம்.பிறகு ஒரு மலைச்சரிவில் மாட்டிக்கொண்டு தடுமாறி உருண்டு விழுகின்றோம்.வெகு நேரம் உருண்டு திரண்டு ஆங்காங்கே உடம்பெல்லாம் காயம் பெற்று ஒரு மழைச்சாரலும் சில்லருவியின் தீண்டலுடன் தொலைவில் தெரியும் ஒரு குக்கிராமம் ஒன்றில் சென்று சாய்ந்து விடுகிறோம்.



நான் ஒரு மாட்டு தொழுவின் அருகே தூக்கி வீசப்பட்டு சுய நினைவில்லாமல் சிதறி கிடப்பதை உணர்கிறேன்.என் நண்பன் அதே குடிசை வீட்டின் முன் வாசலில் உள்ள முள்செடிகள் நிறைந்த தோட்டத்தில் பலத்த காயங்களுடன் படுத்திருக்கிறான்.பிறகு அந்த குடிசையில் வாழும் பாட்டி எங்கள் காயங்களுக்கு மருந்திட்டு திரும்பி ஊர் செல்ல வழியும் சொன்னார்கள்.எப்படியோ வீடு வந்து சேர்ந்த பிறகு நல்ல தூக்கத்தில் ஆழ்ந்து விட்டேன். இங்கே தான் எனது இரண்டாம் கனவு ஆரம்பித்திருக்க வேண்டும்..

--- தொடரும் ....

ஞாயிறு, 20 ஏப்ரல், 2014

கவிதை 43 - அங்கம் சொல்லும் புது அர்த்தம்

கண்கள்...
 கானாக்கரை தேடுதோ
 மனத்திரை காட்டுதோ 


கால்கள்...
  அறியா திக்குக்கு நடை போடுதோ
   புரியா பாட்டுக்கு நடனம் ஆடுதோ 


கைகள்...
   சிந்தனை சிற்பம் செதுக்குதோ
   கவிதையும் ஓவியமும் தீட்டுதோ


கை விரல்கள்...
   வீணை இசைப்பலகை மீட்டுதோ
   கணினி விசைப்பலகை பயிலுதோ 


செவிகள்...
  கேட்கா சொற்கள் கேட்குதோ
  கேட்கும் திறனை மறந்ததோ


மூக்கு...
   மாசு படிந்து மூச்சு வாங்க திணறுதோ
   இயற்க்கை வாசனை மறந்ததோ


நாக்கு...
   தாய் மொழி விட்டு கலப்பு மொழி பேசுதோ
    வீண் வம்புக்கு இழுக்குதோ 


மூளை...
  பயனற்ற தகவல் சேகரிக்கிறதோ
  செயற்கை நுண்ணறிவு படைக்குதோ


இதயம்...
  பிரிவா அன்பை நாடுதோ
   எதையும் தாங்கும் சக்தி பெற்றதோ

மற்ற அங்கங்களும் புது புது அர்த்தங்கள் சொல்லும்
-- சிவசுப்பிரமணியன் .....

ஞாயிறு, 13 அக்டோபர், 2013

கனவு 15 - இரட்டை நிலா

சில கனவுகள் நம்மை தூக்கத்திலிருந்து உடனே கண் முழித்து பார்க்க செய்து விடும். அது பயத்தினாலோ அல்லது கனவின் பயங்கரத்தினாலோ கூட இருக்கலாம். ஆனால் என்னை பயம், பயங்கரம், அதிசயம், நகைச்சுவை என்று அனைத்தும் ஒரு சேர காட்டிய கனவு இது.

நானும் எனது நண்பர்களும் தெருமுனையில் ஒரு உணவு விடுதியின் முன் அரட்டையடித்து கொண்டிருந்தோம்.திடீர் என்று எதிரே அமைந்திருக்கும் வீடுகள்,கடைகள், கட்டிடங்கள் யாவும் லேசாக குலுங்குகிறது.முதல் முறை வெகு சிலர் மட்டும் தான் அதை கவனித்திருக்க கூடும்.

பிறகு நாங்கள் நின்று கொண்டிருந்த இடமும், விடுதியும், வேகமாக குலுங்க துவங்கியது.பயங்கர நில நடுக்கம் ஒன்று விரைவாக வருகிறது என்று தெரிந்து நாங்களும் சுற்றியிருந்த மக்களும் பயத்தோடு ஓடுகின்றோம்.பிறகு பார்த்தால் ஆங்காங்கே நட்டு வைத்த தென்னை மரங்கள் வேரோடு வீடுகளின் கூரைகளை பதம் பார்க்கிறது. சிலரின் மேலேயே மரங்கள் சாய்கிறது. எங்கும் கூச்சல், சோகம், அழுகை நிரம்பிய காட்சிகள். இரவு நேரம் நெருங்கி விட்டதால் நில நடுக்கத்திலிருந்து பாதிக்கப்படுபவர்களை காப்பாற்றுவது என்று ஒரு பெரும் படை முயற்சி செய்கிறது.

நான் எனது குடும்பத்தார் இருக்கும் வீடு நோக்கி ஓடுகிறேன்.வழியில் ஒரு கூட்டம் அதிர்ச்சியில் வானத்தை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது.நானும் சற்றே நிமிர்ந்து பார்த்தேன்.ஆகா என்ன அதிசய காட்சி. வானில் இரட்டை முழு நிலவு தொலை நோக்கி இல்லாமலே தெள்ள தெளிவாக காட்சியளிக்கிறது. நாம் வேற்று கிரகம் வந்து விட்டோமோ என்று நினைப்பதற்குள் அந்த இடத்தில சிலர் அதை அலைபேசியில் புகைப்படம் எடுத்து கொண்டிருப்பது கிரகம் மாறவில்லை என்பதை ஊர்ஜித படுத்தியது.



உலகமே நில நடுக்கத்தாலும், எரிமலையாலும் அழிந்து கொண்டிருக்கையில் இரட்டை நிலாக்காட்சியை படமெடுக்க நினைக்கும் மனித உள்ளதை நினைத்து சிரிப்பதா, சிந்திப்பதா என்பதுக்குள் கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டேன்.

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

கட்டுரை 1- தமிழ் மொழி - தொண்மையான மொழி

சங்க கால தமிழ், பண்டைய தமிழ், செந்தமிழ் / தூயதமிழ், நவீன தமிழ் என்று மாறி வரும் தமிழ் மொழியை பற்றி முதலில் எனது கட்டுரையை இந்த கவிதை மழை வலைப்பூவில் எழுதலாம் என்று முடிவு செய்தேன்.

தமிழ் மொழியின் தொண்மையை பற்றி வெளிநாட்டு பேராசிரியிர்கள் தமிழில் தெள்ள தெளிவாக சொற்ப்பொழிவு நடத்தும் இந்த காலத்தில், தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களுக்கு தமிழில் பேசுவதை விட ஆங்கிலத்தில் பேசுவது சுலபம் என்று கருதுவதே மாபெரும் வெட்கக்கேடு. ஆங்கில மொழியின் தாக்கம் என்னவோ நம் தினசரி வாழ்க்கையில் சகஜமாகிவிட்டது. ஆனால் முடிந்த வரை தமிழ் வார்த்தைகளை தமிழ் தெரிந்த வரிடம் முழுமையாக தமிழில் கலந்துரையாட நாம் ஏன் தயங்க வேண்டும்.

எந்த மொழியை கற்றாலும் நாம் அதை அரை குறையாக தான் கற்றுக்கொண்டிருக்கின்றோம். தினசரி வாங்கும் பொருட்களில் தான் கலப்படம் என்றால் மொழியிலும் கலப்படம். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், எனது பள்ளி பருவத்தில் தமிழ் ஒரு பாடமாக கூட இருந்ததில்லை - இரண்டாம் நிலை பாட மைய குழுவில் நமது தேச மொழி ஹிந்தி தான் எனக்கு இரண்டாம் மொழி. ஆங்கிலம் முதல் மொழி. ஆனால் தமிழை தாய் மொழியாக பெற்றது என் பாக்கியம். எனது அப்பா, அம்மா சொல்லிக்கொடுத்த தமிழ் உயிர்-மெய் எழுத்துக்கள் வைத்து இவள்ளவு தூரம் தமிழில் விசை பலகையில் கட்டுரை எழுதவது வரை தமிழ் மேல் கொண்டுள்ள என் ஆர்வம் குறையவில்லை. 

தமிழ் மொழியின் வரலாற்றை அலசி பார்த்தால் சங்க காலத்தில் தோன்றிய தொல்காப்பியம் தான் முதலில் கிடைத்த பொக்கிஷம் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். கி.மு இரண்டாம் நூற்றாண்டு முதல் தமிழ் மொழியின் படைப்புகள் ஓலை சுவடிகளாக சேகரிக்கப்பட்டு வரலாற்று சான்றாக விளங்குகிறது. சங்க கால தமிழை ஆராய்ச்சி செய்த அத்துணை தமிழ் வல்லுனர்களுக்கு என் இரண்டாவது வணக்கம். சங்க கால தமிழை படைத்த பழம் பெரும் புலவர்களுக்கு என் முதல் வணக்கம்.
பழம் பெருமை வாய்ந்த செம்மொழியாம் தமிழ் மொழி.

வாழ்க தமிழ்,
சிவசுப்பிரமணியன் ...

சனி, 13 ஜூலை, 2013

கனவு 14 - காட்சி 2 - நாடும் காடும்

காட்சி 2 

எங்கோ ஒரு நடுக்காட்டில் வெகு நேரமாக பிரயாணம் செய்து கொண்டிருக்கிறேன். வீட்டுக்கு திரும்ப செல்லும் வழி தொலைந்து போய் இப்படி அலைகிறேன் என்று வருத்தப்படுகிறேன். இரவு நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது.

திடீர் என்று இரு சிங்கங்கள் கர்ஜனையுடன் என் மேல் பாய்ந்தது. நானும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடுகின்றேன்.வேகமாக அங்கு தெரியும் மூங்கில் மரத்தில் எப்படியோ ஏறியும் விட்டேன். பல மரங்கள் அடுக்கு அடுக்காக நிற்கும் அடர்த்தியான காடு என்பதால் மரம் விட்டு மரம் தாவுகிறேன்.எப்படியோ தாவி தாவி நகர எல்லைக்கு வந்து சேருகிறேன்.

நல்ல நேரமாக அங்கு ஒரு ஏரி தெரிகிறது. என் தாகத்தை தனித்து விட்டு ஒற்றையடி பாதையில் நடக்கிறேன். உடனே அங்கு ஒரு பேருந்து வேகமாக செல்வது தெரிகிறது. அதில் எனது இரு நண்பர்கள் என்னை பார்த்து விட்டு பேருந்தை நிறுத்துகிறார்கள். எப்படியோ அதில் ஏறி கடைசியில் விடு வந்து நிம்மதி பெருமூச்சு விடுகிறேன்.

மீண்டும் பல காட்சிகள் தோன்றி மறைந்தது. அனால் ஞாபகம் வைத்த காட்சிகள் இப்படி எழுத்துக்களாக வடிவம் பெற்றது.

கனவு 14 - காட்சி 1 - பாதாள உலகம்

பல கனவுகள்  தொடர்ச்சியாக ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாமல் வருவதுண்டு.அது போல் வரும் காட்சிகள் நாம் கண் விழித்து பார்க்கும் பொழுது ஞாபகம் இருப்பதில்லை. இன்றும் அப்படிதான் இரு மாறுபட்ட காட்சிகள் , இடங்கள் , பயமுறுத்தும் நிகழ்வுகள் நடைபெற்றன.

காட்சி 1 - 

சுரங்க பாதை வழியாக ஒரு இருட்டு குகையை தேடி நான் தீப்பந்தம் ஏந்தி நடந்து செல்கிறேன். ஒரு கதவு என்னை பாதி வழியில் தடுத்து விடுகிறது. திரும்பி நடப்போம் என்று பின் பக்கம் முகத்தை திருப்புகிறேன்.
பேரதிர்ச்சியுடன் ஒரு வயதான மூதாட்டியின் உருவம். 

சூனியம் செய்யும் மாயக்கிழவியின் தோற்றம். கோரமான சிரிப்பொலி சுரங்கம் எங்கும் எதிரொலிக்கிறது. பிறகு என்னை அழைத்து கொண்டு பாதாள உலகம் செல்லும் வழியெங்கும் எலும்பு கூடுகள். இது என்ன விக்கிரமாதித்தன் வேதாளத்தோடு செல்லும் பயணம் போல் அல்லவா இருக்கிறது. 

பின் அந்த இருட்டு குகை சிறை போல் தோற்றம் அளித்தது. பிறகு என்ன  நடந்தது என்று நினைப்பதற்குள் அடுத்த காட்சி .....

                                                                                                            தொடரும் ....

ஞாயிறு, 19 மே, 2013

கனவு 13 - நடு இரவில்

இந்த கனவை திகில் நாவல்களில் சேர்க்க வேண்டுமா என்று நீங்கள் இதை படித்து விட்டு முடிவு செய்யலாம்.

திருவிழா பார்க்க நான்  ஊருக்கு குதூகலமாக புறப்படும் காட்சியுடன் இந்த கனவு ஆரம்பமாகிறது. சில பால்ய கால நண்பர்களை அங்கு சந்தித்து பழைய கதைகள் யாவும் பேசுகின்றோம். எங்கள் உறவினர்கள் மனைகள் யாவும் நான் தங்கியிருக்கும் பாட்டியின் வீட்டுக்கு பக்கத்திலே அமைந்திருந்தது.

கொஞ்ச தூரம் நடந்தால் அங்கு கோவில் பிரகாரம் நம்மை வரவேற்கிறது.
கடல் அலைகள் ஓயாமல் கரை திரும்பும் ஓசை நம் காதுகளில் ஒலிக்கிறது.
இரவு நேரம் எல்லாரும் தூங்கும் பொழுது வேகமாக கதவு தட்டும் சத்தம்.
நான் கண் முழித்து கதவை திறந்து பார்த்தால் ஒரு ஊமை பெண்.

ஏதோ ஒரு காகிதத்தை கையில் கொடுத்து விட்டு செல்கிறாள். அதில் சில சித்திர குறிப்புகள் மட்டும். அவை இரு மனிதர்கள் சடலங்களாக நடமாடும் குறிப்பு. எனது நண்பர்களையும் உறவினர்களையும் எழுப்பி அதை  காண்பிக்கின்றேன். யாவரும் திகைத்து பார்த்து விட்டு - இது வெறும் வேடிக்கை பூசல் - கவலை வேண்டாம் என்று என்னை நன்றாக தூங்கு என்றும் சொல்லி விட்டு அவர்களும் படுத்து விட்டார்கள் .

வெகு நேரம் சென்ற பின் நடு இரவில் மீண்டும் கதவு தட்டும் ஓசை.யாவரும் பயத்தோடு ஜன்னல் வழியாக எட்டி பார்க்கிறோம்.அங்கு கோரமாக இரு பிரேத உடல்கள் அலங்கோல உடையுடன் நிற்பது தெரிகிறது.கண்களில் ரத்தம் வடிகிறது. அதில் ஒருவனுக்கு இரு கைகளும் பாதி வெட்டப்பட்ட நிலையில் தொங்குகிறது.மீண்டும் அவர்கள் கதவை வேகமாக தட்டவும், அதை உடைத்துக்கொண்டு உள்ளே நுழையவும் எத்தனிக்கிறார்கள். கதவை திறந்து விட்டால் நாங்கள் யாவரும் காலி.. அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிப்பதற்குள் கனவு காற்றோடு கலைந்து விட்டது.

செவ்வாய், 30 ஏப்ரல், 2013

கனவு 12 - ஆவியின் மொழி

ஆவிகளோடு பேசும் பல முறைகளை நான் கேட்டதுண்டு, சில திரைப்படங்களில் பார்த்ததும் உண்டு. ஆனால் இந்த கனவில் நான் கண்டது மிகவும் புதுமையானது.

நான் ஒரு வீட்டு வாசலில் அமர்ந்திருக்கிறேன். வீட்டு முற்றம் தெள்ள தெளிவாக காட்சியளிக்கிறது. அங்கிருந்த கோலப்பொடி எடுத்து நான் ஏதோ எழுத முயற்சிக்கிறேன். "யார் ?" என்று கோலம் போடுகிறேன். மறுபுறத்தில் "உன் ஆச்சி" என்று பதில் வருகிறது. எனக்கோ திக்கென்றது. திடீர் என்று ஆவிகள் சூழ்ந்த உலகத்தில் அமர்ந்திருப்பது போல் உணருகிறேன்.

பிறகு கொஞ்சம் தைரியத்தை வரவழைத்து கொண்டு "நீங்கள் எந்த ஆச்சி ?" என்று கோலத்தால் கேட்கிறேன்.  சற்று தாமதமானாலும் பதில் வந்தது - "கனகம்மா".

நான் அசந்துபோய் அதிர்ச்சியில் சிலையானேன். ஏனென்றால் அந்த பெயர் எனது இறந்து போன ஒரு பாட்டியின் உண்மையான பெயர்.அடுத்து பல கேள்விகள் நான் கேட்பதற்குள் கனவு கலைந்து விட்டது .....

ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

கனவு 11 - எகிப்து மம்மி

கனவுகள் சில நல்ல நினைவுகளாக மனதில் பதிந்து விடும். மற்று பல அச்சுறுத்தும் பயங்கரமாகவும் பயமுறுத்தவும் செய்து விடும்.  சிலருக்கு கனவில் கண்டது அடுத்த நாளோ, பிறகு எப்பவாவதோ அதன் படியே நடந்து விடும்.சிலருக்கு முன் எப்பொழுதோ நடந்த சம்பவம் ஆழ் மனதில் பதிந்து கனவுலகில் வந்து நிழல் காட்சி தரும். இது போல் நான் கண்ட ஒரு கனவு மூன்று வருடங்கள் முன் நடந்து முடிந்த என் தாத்தாவின் இறுதி அஞ்சலி யுடன் துவங்கியது.

நானும் எனது சொந்த பந்தங்களும் - எனது தாத்தா  இறந்த பிறகு, அவரது உடலை தகனம் செய்ய கடற்கரைக்கு எடுத்து செல்லும் காட்சி தெரிகிறது. அழுகையும் சோகமும் ஆங்காங்கே தெளிவாக காண முடிகிறது. தகன காரியம் முடிந்து கொண்டிருக்கும் நேரம் கடல் அலைகளின் பேரிரைச்சல் ஒலிக்கிறது. தூரத்தில் கடலின் மேல் மட்டத்தில் ஒரு சடலம் மிதந்து கரையோரம் வருகிறது....

திடீர் என்று எனது நண்பரின் காலை பற்றி இழுக்கிறது. நண்பர் அதை விடுவித்து கொண்டு மிரண்டு ஓடுகிறார். கொஞ்ச நேரத்தில் அந்த சடலம் எகிப்து மம்மி போல அங்கு கூடியிருந்த யாவரையும் துரத்துகிறது. நானும் எனது சகோதரர்களும் , மாமாக்களும் பயந்து ஓடுகின்றோம்.

அனால் விடாது கறுப்பு போல் அந்த சடலம் ஓடி வந்து என்னை உடும்பு பிடி பிடித்தது.நான் அலறியடித்து கீழே விழுகின்றேன். அதே சமயம் கடலின் அலைகளை கவனித்தால் பன்மடங்கு சடலங்கள் மிதந்து வருவது யாவரையும் மேலும் அச்சுறுத்தியது. என்னை வீழ்த்திய அந்த சடலம் என் மேல் அமர்ந்து கொண்டு எனக்கு புரியாத வேற்று கிரக மொழியில் பிதற்றியது.

அதன் செய்கையை வைத்து எனக்கு புரிந்தது  ஒரு விஷயம் -
நாம் தேடி வந்த உயிரினங்கள் இந்த கிரகத்தில் இல்லை என்பது போல் தலையசைத்து விட்டு மாயமாக காற்றில் மறைந்தது.  உடனே கடலில் மிதந்து வந்த மற்ற வேதாள சடலங்களும் எழுந்து வந்து கொண்டிருக்கும் போதே மறைந்தன. அதிர்ச்சியில் நான் கண்ட அந்த கனவும் மறைந்தது ........!!!!

சனி, 23 மார்ச், 2013

கனவு 10 - சுனாமி

அதிர வைக்கும் நில நடுக்கம் மிக விரைவாக கடலின் ஆழத்தை கிழித்து கொண்டு நாங்கள் வசிக்கும் நகரத்தை நெருங்கிக்கொண்டு இருந்தது.கடலின் அருகில் முகாமிட்டிருந்த குடிசைகள் யாவும் தரைமட்டமாக மாறியிருந்தது.

அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் நானும் என் தம்பியும் மேல் தட்டு மொட்டை மாடி வரை ஓடிக்கொண்டும் - கடல் அலைகள் அச்சுறுத்தும் காட்சியை தொலைவில் பார்த்துக்கொண்டும் - அயல்வாசிகளை தப்பித்துக்கொள்ளும் படி எச்சரிக்கின்றோம்..

எனது கையில் அலைபேசியும் விடாமல் சிணுங்குகிறது.மனம் அலை பாயும் வேலையில் கடல் அலை ஆக்ரோஷமாக கட்டிடங்களை காலி செய்து கொண்டிருந்தது ! அனைவரும் தண்ணீருக்குள் மூழ்கிவிட்டு மீண்டும் மூச்சு விடுகின்றோம். எங்கும் கூக்குரல் அலையின் பேரிரைச்சலுக்கு போட்டியாக !!!

இது தான் உலகின் அழிவுக்கு ஆரம்பம் போலும் - பனை மரங்களும் வேரோடு மிதந்து செல்லும் போது தான் நினைக்க தோன்றியது - இதன் பெயர் சுனாமி என்று !!! இது தான் சுனாமியா என்று யோசித்து முழித்து பார்த்தால் கனவு கண்டேன் என்பது நினைவுக்கு வந்தது.

--சிவசுப்பிரமணியன்