சனி, 13 அக்டோபர், 2012

கவிதை 41 - தமிழ் கலாச்சாரம்

கரங்கள் தொடுப்பதோ முல்லைச்சரம்,
விழிகள் தேடுதோ மாலைச்சூரியன்,
மனம் பாடுதோ திருவெண்பா,
மறக்க முடியுமா பண்டைய கலாச்சாரம் !

கறுப்பு பலகையில் வெள்ளை குச்சி பதிக்கிறது உயிர் எழுத்து,
வெள்ளை மனதும் கறுப்பு கண்களும் எதிர்பார்க்கிறது மெய் எழுத்து !

காத்திருக்கும் விழிகளில் மௌன புன்னகை,
எதிர்பார்த்திருக்கும் மனதினில் மௌன தேடல் !

நகரத்து pizza வும் burger உம் போட்டி போட்டு
மனிதன் நாவை அடக்க முயல்கிறது -
கிராமத்து இளநீரும் பதநீரும் சுவை தர மறுக்கின்றனவோ ?
அல்ல மனிதன் மறக்கின்றானோ ?

தொடுத்து வச்ச முல்லைச்சரம் வாடும் முன்னே,
ஆக்கி வச்ச மீன்குழம்பு ஆறும் முன்னே,
சந்தைக்கு போன மச்சான் திரும்பிவிடுவாரோ ?

ஆத்திசுவடி படித்து கல்வி கற்கும் சின்ன பெண்,
புல்லாங்குழல் பிடித்து இசை பயிலும் சின்ன பெண்,
அடுப்பில் தீ மூட்டும் கலையை இன்னும் மறக்கவில்லை ...

பல்லாங்குழிக்கு சோழி கிடைக்கவில்லை குமரிக்கு,
ஆனால் புறாக்கள் தொந்தரவு செய்யவில்லை,
சோழிக்கு பதிலாக நெல் மணிகளை உபயோகித்தபோது ....

 புகைப்படமோ ஓவியமோ என்று வியக்க வைக்கும்
 நிலா மாடங்களும்,கலைசிற்ப தூண்களும் !

 நகரத்திற்கு வந்த கிராமத்து பெண்கள் கோலம் மாறியிருக்கலாம்
ஆனால் கிராமத்து முற்றத்தில் போடும் கோலம் இன்னும் மாறவில்லை ...

பொறுமை - அடக்கம் - பணிவு -
மரியாதை - நிம்மதி -மனதில் நிறைவு
-- மொத்தமாக காட்டி விடுகிறது மங்கையின் மலர்ந்த முகம் !

கீரை பொறியலும் வத்தக்குழம்பும் சமைக்கும் போதே,
அந்த தெரு திண்ணையில் வீற்றிருக்கும்,
கனவான்கள் மோப்பம் பிடித்திருப்பார்கள் ...

சிறு பானையில் கூட கலை வண்ணம்,
நீடிக்காதோ பொற்காலம் எனும் எண்ணம்...

பாசமுள்ள மனையாளின் நேச பார்வையும்,
ஒரு பித்தளை செம்பு தண்ணீரும்,
ஒரு சட்டி கேழ்வரகு கஞ்சியும்,
ஒற்றுமையாக காத்திருக்கின்றது ....
வயலுக்கு சென்ற உழவனுக்காக !

ஓவிய கண்காட்சியில் அழகிய ஓவியங்கள்,
வெளிச்சம் போட்டு காட்டும் தமிழ் கலாச்சாரம் அற்புதம்,
தூரிகை பிடித்த கைகளுக்கு தங்க காப்போ, 
மலர் செண்டோ தேவையில்லை,
மக்கள் இன்றும் கலாச்சாரத்தை மறவாமல் 
இருந்தால் மட்டும் போதும் !

--சிவசுப்பிரமணியன் ***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக