புதன், 8 ஆகஸ்ட், 2012

கவிதை 37 -பரிசு

விளையாட்டு போட்டியில் ஏழை மாணவனுக்கு
கிடைத்தது முதல் பரிசு,
பெருமையுடன் பரிசுக்கோப்பையை எடுத்துச்,
சென்றான் வீட்டுக்கு,
உற்சாகமும் சந்தோஷமும் சில நொடிகளில்
கண்ணீர் துளிகளாக  மாறின,
பாராட்டு கிடைக்க வேண்டிய பிஞ்சு
உள்ளத்தில் சோகம் நிறைந்தது,
படிச்சு கிழிச்சதும் பதக்கம் வாங்கினதும் போதும்
என்று அதட்டினார் தகப்பன்,
மெளனமாக ஆறுதல் அளித்தாள் வறுமையின்
நிலைமையை புரிந்த அன்னை,
எத்தனை பரிசுகள் வாங்கினாலும் அத்தனையும்
அந்த ஏழை வீட்டில் தங்காமல் மார்வாடி
கடைகளில் அழகு பொருட்களாக ஜொலித்தது .....!

காத்திருந்த மணமகளுக்கு கடைசியாக
ஒரு நல்ல வரன் அமைந்தது,
எப்பாடுப்பட்டாவது கல்யாணத்தை முடித்து
விட துடித்தார்கள் பெற்றோர்,
கல்யாண மேடை வரை கச்சேரி
கலை கட்டி விட்டது,
அமர்க்களமாக வாழ்க்கையை துவங்கியிருந்த
மணமகள் அதிர்ச்சி அடைந்தாள்,
வரதட்சணை தொகை குறைந்து விட்டதென
மணமகன் குடும்பத்தினர் விடைபெற்றனர்,
இப்பொழுதும் பல குடும்பங்களில் வரதட்சணை
தான் கல்யாணப்பரிசு .....!

கஷ்டப்பட்டு படித்து முடித்து மாநிலத்தில்
முதலாவது இடத்தை பிடித்தான்,
வேலை கிடைப்பதற்க்குண்டான அனைத்து
தேர்வுகளிலும் வெற்றி பெற்றான்,
முடிவை ஆவலுடன் எதிர்பார்த்தவனுக்கு
ஏமாற்றம் தான் மிஞ்சியது,
உழைப்புக்கும் திறமைக்கும் கிடைத்த
பரிசை சிபாரிசு மறைத்து விட்டது ...!

ஒரு வேளை உணவுக்கு கையேந்தும் சிறுவர்களின்
விலாசம் ஆரம்பிக்குமிடம் குப்பைத்தொட்டி,
மாற்று உடை கூட இல்லாமல் தவிக்கும் அவர்களுக்கு
கல்விக்கூடங்கள் அலங்கார பொருட்காட்சி,
கள்ளம் கபடமில்லாத அந்த பிஞ்சு நெஞ்சங்களின்
எதிர்கால கனவுகளுக்கு யார் வழிக்காட்டி ?
ஆதரவின்றி துடிக்கும் இந்த இளம் சமுதாயதிற்கு
என்று கிடைக்கும் பிறந்த நாள் பரிசு .....!

-- சிவசுப்பிரமணியன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக