ஞாயிறு, 12 மே, 2024

கட்டுரை 9 - முல்லை நிலத்து மரங்கள் காத்து, உலக வெப்பத்தைத் தணிப்போம்!

லக வெப்பமயமாதல், காடுகள் அழிப்பு மற்றும் எதிர்கால சந்ததியினருக்கான மனித இனத்தின் காத்தல் பற்றி இந்த கட்டுரையில் விரிவாக பார்ப்போம்..  

தமிழ் மண்ணின் தொன்மைமிக்க இயற்கை எழில், சங்க இலக்கியத்தில் "புலர்பூ" (மலர்ந்து மணம் வீசும் பூக்கள்) எனவும், "செழுங்குன்று" (பசுமையான மலை) எனவும் போற்றப்பட்டுள்ளது. இயற்கையோடு இயைந்த வாழ்வையே சங்க மக்கள் மேன்மைப்படுத்தினர். ஆனால், இன்று நாம் எதிர்கொள்ளும் "உலக வெப்பமயமாதல்" (Global Warming) என்ற பெரும் பிரச்சனை, நம் பூமியின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்குகிறது. சங்க இலக்கியங்களில் ‘மலை’ என அழைக்கப்பட்ட காடுகள், மருத நிலம் போன்ற வளமான பகுதிகளின் உயிரோட்டியாக இருந்தன.  தண்புலம் எனும் குளிர்ந்த காற்றையும், மழை வளம் எனும் மழைப்பொழிவையும் தந்து, வான்புகழ் பெற்றிருந்த காடுகள் அழிக்கப்படுவதால், கதிரவன் சுடர் எனும் சூரிய கதிர்களின் தாக்கம் அதிகரித்து வருகிறது. 

கானக அழிப்பின் விளைவுகள்

"வன்புல வாழ்வு" (காட்டு விலங்குகளின் வாழ்வு) சீர்குலைந்து, வறண்ட நிலம் உருவாகக் காரணமாக இருப்பது "கானகங்களின் அழிப்பு" ஆகும். மரங்கள் வெட்டப்படுவதால், "மழை பொழிவு" பாதிக்கப்பட்டு, "சுட்டெரிக்கும் வெய்யில்" (கடும் வெயில்) தாண்டவமாட, குளிர் காலம் மறைந்து, "கதிரவன் சுடர் வெப்பம்" (அதிக வெப்பம்) நிலவுகிறது. காடுகளை அழிப்பதால் பூமியின் நுரையீரல் பாதிக்கப்பட்டு மீத்தேன் போன்ற விஷ வாயுக்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் பூமியின் வெப்பநிலை உயர்ந்து வருகின்றது. கடல் உயிரினங்கள் மூச்சு திணறி பரிதாபமாக உயிர் விடுகின்றன. 

வான்வழிப் படைகள் போன்ற போக்குவரத்தின் மூலம் வெளியேற்றப்படும் கரியவளி எனும் கார்பன் டை ஆக்சைடும், தொழிற்சாலைக் கழிவுகள் போன்றவை சுற்றுச்சூழலை பாதிக்கின்றன. இதனால், மருத்துவ மாமணிகள் கூட தடுக்க முடியாத நோய்கள் உருவாகும் அபாயம் உள்ளது.

சுகாதார பாதிப்புகள்

புறநானூறு பாடல்களில் இயற்கையின் அழகை போற்றிய நம் முன்னோர் இன்று காணும் காட்சி அவர்களை வேதனைப்படுத்தும். மழை பொய்த்து வறட்சி ஏற்படுதல், கடல் மட்டம் உயர்ந்து கடற்கரை கிராமங்கள் நீரில் மூழ்குதல் போன்ற இயற்கை பேரிடர்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் உணவு தட்டுப்பாடு, பஞ்சம் போன்ற பிரச்சனைகள் உருவாகிறது . இதன் விளைவாக, "தீ நோய்" (காய்ச்சல்), "சுவாசக் கோளாறு" (சுவாச பிரச்சனை) போன்ற துன்பம், மக்களை வாட்டுகின்றன. மேலும், "கடல் மட்டம் உயர்வு" காரணமாக, கடல் நீர் உள்நாட்டின் "புறம்போக்கு நிலம்" (பொது நிலம்) வரை பரவி, "உவர் நிலம்" (உப்பு கலந்த நிலம்) உருவாகி, விவசாயம் பாதிக்கப்படுகிறது.

எதிர்கால சந்ததியினர் வாழ்வுமுறை 

இயற்கையைப் பேணாவிட்டால், எதிர்கால சந்ததியினருக்கு நாம் விட்டுச்செல்ல போவது என்ன? வான்பரப்பு (வானம்) நிறம் மாறி, "கருமேகம்" போர்த்திய வறண்ட பூமியை தானா? இதனைத் தடுத்து, "மழை பொழிந்த சோலை" (மரங்கள் நிறைந்த பகுதி) சூழலில் வாழும் வாய்ப்பை அவர்களுக்கு வழங்க வேண்டியது நம் கடமை. மழை மேகம் இன்றி வறண்ட வானம் இருந்தால், பூமி தன் வளத்தை இழந்து பாலைவனமாக மாறும். மண் வளம் குன்றி, மேலும் பஞ்சம் தலைதூக்கும். இதனால், விலங்குகள் மற்றும் பறவைகள் எல்லாம் வாழ்விடம் இழந்து அழிந்து போகும் அபாயம் உள்ளது. மருதூர் நிலம் போன்ற செழிப்பான பகுதிகளும் பாதிக்கப்படும். நெல், கரும்பு போன்ற செந்நெல் பயிர்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டு, உணவு தட்டுப்பாடு ஏற்படும்.

தீர்வுகள்

காடுகளை அழிப்பதைத் தடுத்து, மரம் வளர்ப்பதை ஊக்குவிக்க வேண்டும். சூரிய ஆற்றல், காற்று ஆற்றல் போன்ற "பசுமை ஆற்றல்" பயன்படுத்தி, "கரிபுகையை" அகற்றி இளங்காற்றை சுவாசிப்போம். 

எனவே, மழை பொய்த்தல் தடுக்க, மரங்களை நட்டு வளர்ப்பதே தீர்வு. மரங்கள் மழை மேகங்கள் உருவாகக் காரணமாக இருப்பதோடு, வளிமண்டலக் காற்று மாசுபடுவதைத் தடுத்து சுத்தமான காற்று கிடைக்கச் செய்கிறது. முன்னோர்கள் வணங்கிய இயற்கையைப் பாதுகாப்பது நமது கடமை. மரங்களை வளர்க்க வேண்டும். நீர்நிலைகளைப் பாதுகாத்து, மண்வளம் காத்து, பூமியின் சீதோஷண நிலையை பேண வேண்டும். இதற்கு மக்கள் இயக்கங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மணிமேகலை காப்பியத்தில் மருத்துவ குணம் கொண்ட தாவரங்கள் பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது. காடுகளை அழிப்பதால் மூலிகைகள் அழிந்து மருத்துவ துறை பெரும் பாதிப்பை சந்திக்க நேரிடும். மேலும், காற்று மாசு அதிகரிப்பால் சுவாசக் கோளாறுகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. வனசிறப்பு மிக்க காடுகளை அழிப்பதைத் தடுத்து, மீண்டும் வனப்பரப்பு செய்து, பூமியின் நடுநிலை எனும் சமநிலையை காக்க வேண்டும்.

எனவே, எதிர்கால சந்ததியினருக்காக நம் பூமியைக் காப்பாற்றுவது அவசியம். மரம் வளர்ப்போம், காடுகளைப் பாதுகாப்போம், கரிய உமிழ் குறைத்து சுற்றுச்சூழலைக் காப்போம். பூமியைக் காப்பாற்ற உறுதி ஏற்போம். இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை மேற்கொள்வதே எதிர்கால சந்ததியினருக்கு நாம் விட்டுச் செல்ல வேண்டிய பொக்கிஷம். மண் தாயை பாதுகாப்போம், எதிர்காலத்தை காப்போம்!

-- சிவசுப்பிரமணியன்

செவ்வாய், 28 நவம்பர், 2017

கனவு 17 - கதவு தட்டும் சத்தம்

              னது நண்பன் விடுமுறைக்கு சொந்த ஊர் சென்று விட்டதால் அவன் தங்கும் அறையை என்னிடம் ஒப்படைத்து விட்டு சென்றான். புத்தகங்கள் அடுக்கி வைத்திருந்த இடத்திலிருந்து இரண்டு புத்தகங்களை எடுத்து புரட்டி கொண்டிருந்தேன். அப்பொழுது கதவு தட்டும் சத்தம் கேட்டது. 

கதவை திறந்து பார்த்தால் அந்த வீட்டின் சொந்தக்காரரின் பதின் பருவத்து பையன் நின்று கொண்டிருந்தான். "நான் இங்கே கொஞ்சம் நேரம் ஒய்வு எடுக்க வந்தேன்", என்று சொல்கிறான்.  அவன் இங்கு தூங்கினால் எவ்வளவு நேரம் ஆகுமோ என்று தெரியாததால் என் நண்பனை அலைபேசியில் அழைக்கிறேன். "அவன் ஒரு திருட்டு பயல். அவனை அங்கு தங்க விடாதே", என்று நண்பன் எச்சரிக்கிறான்.


வீட்டுக்காரம்மாவை கூப்பிட்டு அவனை திருப்பி அழைத்து செல்லுங்கள் என்று நான் சொல்கிறேன். கதவை சாத்திவிட்டு மீண்டும் வந்து அமர்கிறேன். பத்து நிமிடங்கள் கடந்த பின் கதவு தட்டும் சத்தம் கேட்கிறது. இந்த முறை ஒரு கர்ப்பிணி பெண் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவிச்சு வைத்த முட்டையின் வெள்ளை கரு கேட்கிறார்.

குழம்பி போய் நானும் குளிர் சாதன பெட்டியில் இருந்த முட்டைகளை எடுத்து நீங்களே அவிச்சு சாப்பிட்டுக்கோங்க என்று அனுப்பி வைக்கிறேன் அந்த பெண்மணியை. அரை மணி நேரம் சென்றிருக்கும். மீண்டும் கதவு தட்டும் சத்தம். இரு பாலகர்கள் நின்று கொண்டிருந்தனர். இரட்டை சகோதரர்கள் போல தெரிந்தார்கள். வீட்டை சுத்தம் செய்ய வந்தோம் என்று கூறுகின்றனர்.

வீட்டினுள் நுழைந்து பொருட்களை ஒதுங்க வைத்து துப்பரவு செய்த பின், தண்ணீர் விட்டு வீட்டை சுத்தம் செய்தனர். பிறகு அண்ணன் வந்தா சொல்லிருங்க என்று என்னிடம் சொல்லி விட்டு செல்கிறார்கள். சிறு வயதிலேயே இவர்களுக்கு இந்த வேலையா என்று நான் சிந்திக்கும் பொழுது சமையல் எரிவாயு கசிந்த வாடை வீசுகிறது. விளையாட்டு சிறுவர்கள் சுத்தம் செய்யும் நேரம் பார்த்து எரிவாயு உருளையின் குழாயை உடைத்து விட்டிருந்தனர். மீண்டும் கதவு தட்டும் சத்தம். கண் முழித்து பார்க்கிறேன் - அடடா கனவு தானா என்று பெருமூச்சு விடுகிறேன்.

--சிவசுப்பிரமணியன் 

ஞாயிறு, 26 நவம்பர், 2017

கனவு 16 - அயலான்

                                வேற்று கிரக வாசிகள் மூன்று சிறுவர்கள் உருவில் நடமாடிக்கொண்டிருக்கிறார்கள் . நானும் எனது நண்பனும் தங்கிரியிருக்கும் வீட்டை நோக்கி வருகிறார்கள். இரவு நேரம். வீட்டினுள் நுழைந்து எங்களை கட்டி போடுகிறார்கள். பிறகு ஏதோ பொருளை கடத்துகிறார்கள்.


நான் வளர்க்கும் கொம்பு குதிரை (Unicorn) அந்த அயலார்களை தடுக்க முயல்கிறது. ஆனால் அதை திசை திருப்புகிறார்கள். அருகிலிருக்கும் கிணற்று பகுதிக்கு ஒளிப்பந்துகளை சுழல விட்டு குதிரையை ஓட விடுகிறார்கள்.

கொம்பு குதிரை அந்த பந்துகளை துரத்தி சென்று அதை எண்ணிக்கை எடுக்கும் பணியில் ஈடுபடுகிறது. ஒளி பந்துகள் பல மடங்குகளாக அதிகரித்து குதிரையின் கவனத்தை திசை திருப்புகிறது.


பறக்கும் தட்டு வேகமாக தரை இறங்குகிறது. நாங்கள் கட்டுகளை அவிழ்த்து அயலார்களை நோக்கி ஓடுகிறோம். நீளமான இரும்பு கம்பி செங்குத்தாக சுழன்று வருகிறது. அதை தடுக்க முயற்சித்த நண்பன் அடி படுகிறான். பறக்கும் வட்டு ஒன்று என்னை ஆக்கிரமிக்க வருகிறது. தலையை குனிந்து தப்பித்து கொள்கிறேன். பிறகு கொம்பு குதிரை இருக்கும் பக்கம் ஓட்டம் எடுக்கிறேன். அயலார்கள் எதை திருடி சென்றார்கள்? நான் குதிரை மீது ஏறி  அயலார்களை பிடித்தேனா என்று பல புதிர்கள் உங்களுக்கு எழலாம். ஆனால் கனவு கலைந்து விட்டபடியால் இதை கற்பனை கதையாக வேறு ஒரு வலைப்பூவில் தொடர்கிறேன்.

--சிவசுப்பிரமணியன் 

சனி, 26 ஆகஸ்ட், 2017

கட்டுரை 8 - அன்றாட வாழ்வில் மறந்து போன தமிழ் சொற்கள்

மிழை தாய் மொழியாக கொண்டுள்ள தமிழர்கள் ஐந்து நிமிடங்கள் தொடர்ச்சியாக தூய தமிழ் மொழியில் பேச முடியாமல் போகிறது. ஆங்கில மொழியின் தாக்கம் அன்றாட வாழ்வில் தமிழ் சொற்களை மறந்து விட செய்கின்றது. 30 வருடங்களுக்கு முன் தினசரி வாழ்வில் பேசிய தமிழ் சொற்கள் கூட தற்பொழுது பேச்சு வழக்கில் இல்லாமல் போனது. தமிழ் மொழியோடு வட்டார மொழி கலவை, ஆங்கில மொழி கலவை, வடமொழி கலவை, அண்டை மாநிலங்களின் மொழி கலவை என்று புது புது மொழிகள் உருவாகும் தருணமிது. 

அப்படி நாம் தினசரி வாழ்வில் பயன்படுத்தும் பல ஆங்கில வார்த்தைகளால் தமிழ் சொற்கள் மறந்து போனது. சற்று யோசித்து நான் ஒரு பட்டியலை தயாரித்தேன்.


fan = மின் விசிறி 
table = மேசை / மேஜை 
chair = நாற்காலி 
toothbrush = பல் துலக்கி , பற்குச்சி 
toothpaste = பற்பசை 
paint - வர்ணம்
paintbrush - வர்ணத்தூரிகை
television (TV) = தொலைக்காட்சி 
telephone = தொலைபேசி 
mobile phone = அலைபேசி, கைபேசி 
switch = ஆளி, தாவி, நிலைமாற்றி 
wire = கம்பி
wash basin = கழுவு தொட்டி
bath = குளியல்
bathroom = குளியலறை 
toilet = கழிவறை 
soap = சவுக்காரம்
tea = தேநீர் 
coffee = குளம்பி 
ice = பனி, பனிக்கட்டி 
ice cream = பணிப்பாகு, பனிக்கூழ் 
flask = குடுவை, குப்பி 
morning = காலை 
night = இரவு
button = பித்தான், வில்லை
bed = படுக்கை 
coat = மேல் அங்கி 
dress = ஆடை, உடை 
room = அறை 
star = நட்சத்திரம், விண்மீன்
moon = நிலா 
sun = சூரியன் 
gold = தங்கம்
silver = வெள்ளி  
radio = வானொலி 
book = புத்தகம் 
time = நேரம்
evening = மாலை 
bus = பேருந்து 
car = தானுந்து, மகிழுந்து 
bike = மிதிவண்டி 
auto = தானி 
bottle = புட்டி 
pen = பேனா, எழுதுகோல்  
pencil = கரிக்கோல் 
water = தண்ணீர் 
computer = கணினி 
internet = இணையம் 
mixie = மின்னம்மி 
grinder = மின்னறவை 
fridge/refrigerator = பதமி, குளிர்சாதனப்பெட்டி 
washing machine = சலவைப்பெட்டி, துவைப்பி 
fruits = பழங்கள் 
apple = குமளிப்பழம் 
orange = இன்னரந்தம், தோடம்பழம் 
pineapple = அன்னாசிப்பழம் 
lemon = எலுமிச்சை 
vegetables = காய்கறிகள் 
tablet = மாத்திரை, கைக்கணினி
color = நிறம் 
bus stand = பேருந்து நிலையம் 
railway station = தொடர்வண்டி நிலையம் 
train = தொடரி 
aeroplane = விமானம் 
helmet = தலைக்கவசம் 
clock = மணினி 
road = சாலை 
highway = நெடுஞ்சாலை 
painting = ஓவியம் 
sketch = வரிவடிவம், மாதிரிப்படம் 
satellite = துணைக்கோள்
watch = கடிகாரம் 
shoe = காலணி 
socks = காலுறை 
shirt = சட்டை
pant/trouser = காற்சட்டை  
shorts = அரைக்கால்சட்டை
food = உணவு 
meals = சாப்பாடு 
spoon = கரண்டி 
plate = தட்டு 
glass = கண்ணாடி 
steel  = எஃகு
iron = இரும்பு 
calendar = நாட்காட்டி 
paper = தாள், காகிதம் 
letter = கடிதம் 
pin = ஊசி, மின்செருகி 
password = கடவுச்சொல் 
camera = நிழற்படக்கருவி
photo = புகைப்படம் 
door = கதவு 
window = ஜன்னல் 
lock = பூட்டு 
keys = சாவி 
sound = சத்தம், ஒலி 
light = ஒளி 
number = எண் 
lorry/truck = சரக்குந்து 
van = பொதியுந்து, கூண்டுந்து 
jeep = வல்லுந்து
charger = மின்னூட்டி
laptop = மடிக்கணினி 
system = அமைப்பு, இயங்கு தளம் 
rainbow = வானவில்

இன்னும் இந்த பட்டியல் நீண்டு கொண்டே தான் போகும். எங்கும் மொழி கலவை, எதிலும் மொழி கலவை. தமிழ் பள்ளியிலும் மொழி கலவை, பார்க்கும் தமிழ் சினிமாவிலும் மொழி கலவை. கருப்பு வெள்ளை தமிழ் திரைப்படங்களை பார்க்கும் பொழுது அதில் ஆங்கில கலவை மிக மிக குறைவே. ஆனால் இந்த காலத்து திரைப்படங்களில் முழுதும் ஒரு நிமிடம் பேசும் வசனங்களிலும் பாடல்களிலும் ஆங்கிலம் கலந்து தான் இருக்கிறது. 

இந்த ஆங்கில கலவை மற்ற இந்திய மொழிகளையும் விட்டு வைக்க வில்லை. மேலே கூறப்பட்ட சொற்களை மற்ற மொழிகளில் மொழி பெயர்த்து பார்த்தால் அவரவர் தாய் மொழிகளில் எத்தனை சொற்களை மறந்திருக்கின்றோம் (தெரியாமல் கூட இருக்கின்றோம்) என்று தெரிய வரும். 

நாம் பேசும் பொழுது ஒரே மொழியை முழுவதுமாக பயன்படுத்தி பேசலாமா என்று முயற்சி செய்வோம். முயற்சி எடுக்க வில்லை என்றால் எதிர்காலத்தில் ஒரு சில மொழிகள் மட்டும் தான் உலகில் மிஞ்சும். அல்லது ஆங்கில மொழி மட்டும் தான் கோலோச்சும். மற்ற மொழிகள் எல்லாம் அருகி வரும் மொழிகளாகி பின்பு காணாமல் போய் வரலாற்றில் மட்டும் இடம் பிடிக்கலாம். தாய் மொழிகளை முடிந்தவரை காப்பாற்றுவோம்.

நன்றி,
சிவசுப்பிரமணியன்.

சனி, 2 ஏப்ரல், 2016

கட்டுரை 7 - உலக திரைப்படங்களில் பாசத்தின் பங்கு - ஒரு திரை அலசல்

                     கருப்பு வெள்ளை திரைப்படங்கள் வெளியான காலம் முதல் மூன்று, நான்கு பரிமாணங்களில் (3D,4D) 360 பாகை (360 degree) பார்வையில் அகல திரை அரங்குகள் (IMAX Theater) மத்தியில் மெய் நிகர் கண்ணாடிகருவியை (Virtual Gear 3D glass) கண்களில் மாட்டி கொண்டு, எண்ணியல் ஒலிகளை (Digital DTS) சுற்றியும் தெறிக்க விட்டு, நவீன நிறங்கள் பூசிய நிகழ் படங்கள் (Color Screen) வரை -  குடும்பம், பாசம், பந்தம், அன்பு, நட்பு, காதல், சண்டை, பயம், புன்னகை, நகைச்சுவை, படபடப்பு, விறுவிறுப்பு என்று நகரும் கதை, திரைக்கதைகள் ஏராளம்.

இப்படி உலக திரைக்காவியங்கள் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைக்கும் தருணத்தில் மனித உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுக்கும் திரை இயக்குனர்கள் இருக்கிறார்கள். பாசத்தை திரையில் காட்டி கண்களில் கண்ணீரை வரவழைக்கும் மாயாஜாலம்.  வெவ்வேறு மொழிகளில் தந்தை மகன் பாசம், தந்தை மகள் பாசம், தாய் பாசம், நண்பனின் நேசம் என்று திரைப்படங்களின் பட்டியல் நீளும்.  கருப்பு வெள்ளை காலத்தில் எண்ணில் அடங்காத படங்களை அடுக்கி விடலாம்.

தமிழ் மொழியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த படங்கள் எத்தனையோ இருக்கின்றது. அதில் பா  வரிசையில் வெளி வந்த சிவாஜி படங்கள் பங்கு அதிகம். இதை 1950 -1970 கால கட்டம் என்று எடுத்து கொண்டால், 1980-2010 களில் திரைப்படங்கள் பல மனதை வருடியது. நடிகர் சரத்குமார் நடித்த நட்புக்காக, நாட்டாமை, சூர்யவம்சம், சமுத்திரம் , நடிகர் மம்மூட்டி நடித்த ஆனந்தம், நடிகர் பார்த்திபன் நடித்த அழகி பல முறை பார்த்தும் சலிக்காத பாசப்படங்கள். 2006ல் இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் வெளி வந்த வெயில்,  இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் வெளி வந்த எம் மகன் ஆகிய திரைப்படங்கள் தந்தை-மகன் பாசத்தை உணர்த்தியது.நடிகர் விக்ரம் - பேபி சாரா நடிப்பில் தமிழ் மொழியில் வெளிவந்த தெய்வ திருமகள் திரைப்படத்தில் தந்தை மகள் பாசத்தை அற்புதமாக சொல்லியிருப்பார்கள்.

2015ல் ஹிந்தி மொழியில் வெளிவந்த பஜ்ரங்கி பாயிஜான் நாடு - வயது - மொழி - மதம் என்று எந்த பேதமும் பாராமல் பாசத்தை காட்டும் அழகான திரைப்படம். மௌனத்தை வைத்தே சத்தமாக சிந்தையை தூண்டும் ஆறு வயது சிறுமி ஷாஹிதாவின் நடிப்பு கண் கலங்க வைத்து விடுகிறது.எப்பாடு பட்டாவது பெற்றோர்களிடம் குழந்தையை சேர்த்து விட வேண்டும் என்று ஒரே லட்சியம் கொண்டு அப்பாவி நடிப்பில் அசத்தல் காட்டியிருக்கிறார் சல்மான் கான்.மனித உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து திரைக்கதையை கச்சிதமாக நகர்த்தி சென்றுள்ளார் இயக்குனர் கபீர் கான். 

2003ல் கொரியன் மொழியில் வெளிவந்த Miracle in Cell No.7 என்னை வியக்க வைத்த இன்னொரு அற்புதமான திரைப்படம். மூளை வளர்ச்சி இல்லாத தந்தைக்கு செய்யாத குற்றத்திற்காக சிறைவாசம். வெளி வேஷம் இல்லாத வெகுளியான தந்தைக்கு தெரிந்த ஒரே விஷயம் மகளின் பாசம். ஆறு வயது சிறுமிக்கு அப்பா மேல் அளவு கடந்த அக்கறை. அப்பாவை எங்கே கொண்டு போகிறார்கள் என்று கண்ணீர் நிறைந்த அந்த பிஞ்சு கண்கள் பேசும் பொழுது நமது கண்களில் கண்ணீர் நிறைவது நிச்சயம்.

நான் இங்கே பகிர்ந்த திரைப்படங்களில் ஒரு பக்கம் நகைச்சுவை காட்சிகள் சத்தம் போட்டு சிரிக்க வைத்தது என்றால் மறுபக்கம் மனதை உருக்கும் தருணங்கள் மெளனமாக கண்ணீர் சிந்த வைத்து விடுகிறது. நம்பிக்கை, அன்பு, விடாமுயற்சி என்று நேர்மறை சிந்தனைகள் எடுத்து காட்டும் காட்சிகள் பார்வையாளர்கள் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்து விடும்.இன்னும் பிற மொழிகளாகிய ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று நான் ஒவ்வொரு திரைப்படமாக அடுக்கினால் கட்டுரைகள் பல எழுதலாம்.

--சிவசுப்பிரமணியன் 

திங்கள், 22 பிப்ரவரி, 2016

10 நொடி கதை 8 - சுயம்வரம்

2100 கி.பி பிரம்மாண்டமான மாளிகை முன் ஒரு நீண்ட வரிசையில் இளைஞர்கள் நின்று கொண்டிருந்தார்கள். மாளிகையின் வாசலில் ஒரு எந்திரன் ஒவ்வொரு இளைஞனையும் நிறம், இரத்த பிரிவு, எடை, உயரம், பழக்க வழக்கங்கள் என்று சோதனை செய்து கொண்டிருந்தது. மாளிகையின் உள்ளே மின்திரையில் 50% அறிவாளி, 20% புகை பிடிப்பவன், 30% மது அருந்துபவன் என்று புள்ளி விவரங்களை பார்வையிட்டாள் நல்ல மணமகனை எதிர்பார்க்கும் எந்திர பெண்.

--சிவசுப்பிரமணியன்

சனி, 20 பிப்ரவரி, 2016

10 நொடி கதை 7 - உடற்பயிற்ச்சி

“ஆரோக்கியமாக வாழ்வதற்கு நடப்பது, நீச்சலடிப்பது, படிக்கட்டில் ஏறி இறங்குவது என்ற எளிய உடற்பயிற்ச்சிகளை கடை பிடியுங்கள்.” 

அருமையான சொற்பொழிவை முடித்து விட்டு அந்த இளம் சுகாதார அமைச்சர் மின்தூக்கியை நோக்கி அன்ன நடை நடந்தார்.



-- சிவசுப்பிரமணியன்

சனி, 13 பிப்ரவரி, 2016

கட்டுரை 6 - மறந்து போன தேவதை கற்பனை கதைகள்

டந்த கட்டுரையில் மறந்து போன மாயாஜால கற்பனைக்கதைகள் பற்றி எழுதியிருந்தேன். இந்த கட்டுரையில் தேவதை கதைகள் (Fairy Tales), பறக்கும் நாகங்கள் (Dragons), வேதாளங்கள் அல்லது காட்டேரிகள் (Vampires), ஓநாய் மனிதர்கள் (Werewolves) மந்திரவாத குள்ளர்கள் (Dwarfs), மாயலோக கூளியர்கள் (Elves) என்று வியக்க வைக்கும் கற்பனை கதாபாத்திரங்கள் பற்றி பார்ப்போம்.

தமிழில் தேவதை கதைகள் அந்த காலத்தில் பல வடிவங்களில் இருந்திருக்கலாம். தேவதை கதைகளில் நல்ல தேவதைகள் ஆக தேவதூதர்கள், தெய்வங்கள், தேவர்கள், குறும்பு செய்யும் குட்டி தேவதைகள் ஒரு பக்கம் என்றால் கெட்ட தேவதைகள் என்று பேய், பிசாசு, சூனியம், விசித்திர குள்ளர்கள், பூதங்கள், அரக்கர்கள், அசுரர்கள் மறுப்பக்கம் என்று புராண கதைகளிலே படித்திருப்பீர்கள். ஆங்கில புனைக்கதைகளிலும் மாயாஜால திரைப்படங்களிலும் Elves, Dwarves, Dragons, Vampires, Werewolves, Angels, Unicorns, Centaurs , Mermaids, Ghosts, Demons, Devils, Goblins, Zombies, Witches, Trolls, Genies, Black magic, White magic, Giants, Gnomes, Pixies, Immortals, Sorcery என்று வகைகளோ ஏராளம்.

கிரேக்க புராணங்கள், சீன புராணங்கள், புத்த புராணங்கள் புரட்டி பார்த்தவர்களுக்கு இந்த கற்பனை கதாபாத்திரங்கள் பரிச்சயமானவை தான். Dragons என்ற வார்த்தையை தமிழில் மொழிபெயர்த்தால் வலு சர்ப்பம் அல்லது பறக்கும் நாகம் என்று தான் இணையத்தில் கிடைத்தன. ஆங்கில படத்தை தமிழில் பார்க்கும் உணர்வு தான். ஆனால் தமிழில் நேரடி கட்டுரைகளோ திரைப்படங்களோ மறந்து போன இந்த கற்பனை படைப்புகளை நாம் பார்த்ததும்,படித்ததும், கேட்டதும் அரிது.

அம்புலி, மிருதன், புலி என்ற தமிழ் திரைப்படங்களில் ஓநாய் மனிதன் (Werewolf), மிருதன் (Zombie), காட்டேரி (Vampire) கதைக்களமாக இருப்பதை கவனித்திருப்பீர்கள். ஆனால் ஆங்கில திரையுலகில் Vampire வகையில் Dracula, Twilight series, Van Helsing, Hotel Transylvania, Underworld என்று எண்ணிக்கையில் அடங்காத திரைப்படங்கள் சொல்லிவிடலாம். காட்டேரிகள் சாகாவரம் பெற்று மனித ரத்தம் சுவைக்கும் இனமாக காலம் காலமாக காட்டியிருப்பார்கள். ஓநாய் மனிதர்களை முழு நிலவில் மட்டும் ஓநாய், மற்ற நாட்களில் மனிதனாக சித்தரிப்பார்கள்.இப்படி ஒவ்வொரு தேவதை கதைகளும் அற்புதமான கற்பனை களஞ்சியம்.

Elves என்ற வார்த்தைக்கு தமிழில் அர்த்தம் என்ன என்று கூகுளை சொடுக்கிய போது கிடைத்த தமிழ் வார்த்தைகள் கூளி, தெய்வம். ஆனால் அது சரியான மொழிபெயர்ப்பு என்று என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கூளி என்றால் ஆண் பேய், தெய்வம் என்றால் கடவுள் என்று தான் நேரடி அர்த்தங்கள். இந்த ஒரு கதாபாத்திரத்தை ஜெர்மானிய புராணங்களிலிருந்து எடுக்கப்பட்டதாக விக்கிபீடியா சொல்கிறது. Lord of the Rings, Eragon ஆகிய திரைப்படங்களை பார்த்தவர்களுக்கு Elves, Dragons  எப்படி இருப்பார்கள் என்பது தெரிந்திருக்கும். The Chronicles Of Narnia என்ற நாவலை படித்தவர்களோ அல்லது திரைப்படத்தை பார்த்தவர்களோ இந்த கட்டுரையில்  குறிப்பிட்ட பெரும்பாலான கற்பனை வடிவங்கள்  உலா வருவதை கவனித்திருப்பீர்கள்.

சமஸ்க்ருத புராணங்கள் மற்றும் தமிழ் புராணங்களில் கூட வியக்க வைக்கும் கதைகள் உள்ளன. அதை இன்னொரு கட்டுரையில் பார்க்கலாம்.

--சிவசுப்பிரமணியன்.

செவ்வாய், 15 டிசம்பர், 2015

10 நொடி கதை 6 - சிங்க நடை


“எழுந்து நட என் செல்லம்... அப்படி தான் என் சிங்க குட்டி”, தவழ்ந்து வந்த குழந்தைக்கு நடை பயிற்சி சொல்லிக்கொடுத்து விட்டு மிக அருகிலிருக்கும்  மளிகைக்கடைக்கு தனது இரு சக்கர வாகனத்தை கிளப்பினார் அந்த குழந்தையின் தந்தை.
-- சிவசுப்பிரமணியன்

திங்கள், 14 டிசம்பர், 2015

10 நொடி கதை 5 - நேர்முக தேர்வு


ரமேஷ் பதற்றத்துடன் காத்திருந்தான். அருகிலிருந்த பட்டதாரி ஒருவன் அவனிடம் பல விஷயங்களை கேட்டு நச்சரித்து கொண்டிருந்தான். நேர்முக தேர்வு அறைக்குள் நுழைந்தவனுக்கு அதிர்ச்சி. "நீங்கள் தேர்வாகிவிட்டீர்கள். மற்ற விவரங்கள் பேசுவோமா?" அவனுடன் பேசிய பட்டதாரி எதிரே நின்று கொண்டிருந்தார்.

--சிவசுப்பிரமணியன்