சில கனவுகள் நம்மை தூக்கத்திலிருந்து உடனே கண் முழித்து பார்க்க செய்து விடும். அது பயத்தினாலோ அல்லது கனவின் பயங்கரத்தினாலோ கூட இருக்கலாம். ஆனால் என்னை பயம், பயங்கரம், அதிசயம், நகைச்சுவை என்று அனைத்தும் ஒரு சேர காட்டிய கனவு இது.
நானும் எனது நண்பர்களும் தெருமுனையில் ஒரு உணவு விடுதியின் முன் அரட்டையடித்து கொண்டிருந்தோம்.திடீர் என்று எதிரே அமைந்திருக்கும் வீடுகள்,கடைகள், கட்டிடங்கள் யாவும் லேசாக குலுங்குகிறது.முதல் முறை வெகு சிலர் மட்டும் தான் அதை கவனித்திருக்க கூடும்.
பிறகு நாங்கள் நின்று கொண்டிருந்த இடமும், விடுதியும், வேகமாக குலுங்க துவங்கியது.பயங்கர நில நடுக்கம் ஒன்று விரைவாக வருகிறது என்று தெரிந்து நாங்களும் சுற்றியிருந்த மக்களும் பயத்தோடு ஓடுகின்றோம்.பிறகு பார்த்தால் ஆங்காங்கே நட்டு வைத்த தென்னை மரங்கள் வேரோடு வீடுகளின் கூரைகளை பதம் பார்க்கிறது. சிலரின் மேலேயே மரங்கள் சாய்கிறது. எங்கும் கூச்சல், சோகம், அழுகை நிரம்பிய காட்சிகள். இரவு நேரம் நெருங்கி விட்டதால் நில நடுக்கத்திலிருந்து பாதிக்கப்படுபவர்களை காப்பாற்றுவது என்று ஒரு பெரும் படை முயற்சி செய்கிறது.
நான் எனது குடும்பத்தார் இருக்கும் வீடு நோக்கி ஓடுகிறேன்.வழியில் ஒரு கூட்டம் அதிர்ச்சியில் வானத்தை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது.நானும் சற்றே நிமிர்ந்து பார்த்தேன்.ஆகா என்ன அதிசய காட்சி. வானில் இரட்டை முழு நிலவு தொலை நோக்கி இல்லாமலே தெள்ள தெளிவாக காட்சியளிக்கிறது. நாம் வேற்று கிரகம் வந்து விட்டோமோ என்று நினைப்பதற்குள் அந்த இடத்தில சிலர் அதை அலைபேசியில் புகைப்படம் எடுத்து கொண்டிருப்பது கிரகம் மாறவில்லை என்பதை ஊர்ஜித படுத்தியது.
உலகமே நில நடுக்கத்தாலும், எரிமலையாலும் அழிந்து கொண்டிருக்கையில் இரட்டை நிலாக்காட்சியை படமெடுக்க நினைக்கும் மனித உள்ளதை நினைத்து சிரிப்பதா, சிந்திப்பதா என்பதுக்குள் கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டேன்.