ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

கவிதை 44 - மாசு

சீருந்தை சீறிட்டு செலுத்தும் 
அடுக்கு மாடி வீட்டு சீமான்கள்.

பேருந்தை பேரிரைச்சலோடு செலுத்தும் 
அரசு போக்குவரத்து போராளிகள்.

தானுந்தை புகை மண்டலமாக செலுத்தும்
மூன்று சக்கர வாகன மேதாவிகள்.

உந்துவளையை தலைக்கவசமில்லாமல் செலுத்தும்
இரு சக்கர வாகன நகர் பேசிகள்.

மிதிவண்டியை மறந்து விட்ட நவீன நடை பாதைகளில் 
மாசு படிந்த நகரத்தால் இயற்கையை மறந்து போன பாதசாரிகள்.

ஒலி ,ஒளி ,காற்று, நீர் என்று அனைத்திலும் கலந்து விட்ட மாசு,
கொஞ்சம் கொஞ்சமாக பறிக்கிறது மனிதனின் வயசு.

--சிவசுப்பிரமணியன்.

திங்கள், 11 ஆகஸ்ட், 2014

கட்டுரை 2 - தொழில்நுட்பத்தின் தாக்கம்

                                                ளர்ந்து வரும் அசாத்திய தொழில் நுட்பம் மனிதனை எப்படி புரட்டி போடுகிறது என்பதை தினசரி மனித நடைமுறைகள் நமக்கு உணர்த்துகின்றன. முதலில் பாதிக்க படுவது என்னவோ மனிதனின் மூளை தான். பிறகு உடல் உறுப்புக்கள் துவங்கி உள் உணர்வுகள் வரை இந்த அசுர வளர்ச்சி அடைந்த தொழில் நுட்பம் தாக்கி விடும் அபாயம் தெரிகிறது.

                                                  ஒன்றும் ஒன்றும் கூட்டினால் இரண்டு என்ற சுலபமான கணிப்புக்கு கூட சாதுர்யமான கைபேசியை நம்புகிறான் நவீன உலகின் மனிதன். மடிக்கணினியை தலையணையாக வைத்து தூங்குகின்றான். அலைபேசியை இசைக்கருவியாக காதில் பொருத்திக்கொண்டான். அருகிலிருக்கும் உணவு விடுதிக்கோ, மளிகைக்கடைக்கோ நடந்து செல்ல மறந்து விட்டான் (இரு சக்கர வாகனமோ, நான்கு சக்கர வாகனமோ துணை).


அப்பா, அம்மா, உறவினர்கள், நண்பர்கள் என்று அத்துணை தொடர்புகளையும் தொலைபேசியில் தொடர்பு கொள்வதை கூட விட்டு விட்டு இணையத்தில் சந்திக்கிறான் (நேரில் பார்த்து பேசுவது தான் வெகு காலங்களுக்கு முன்பே நின்று விட்டதே !!!)

செயற்கை நுண்ணறிவு இயந்திரங்களை உருவாக்க நிரல் மொழிகள் கற்றுக்கொள்ளும் மென்பொருள் பொறியாளர்களுக்கு தன் தாய் மொழி மறந்து இயற்க்கை அறிவு செயலற்ற நிலையை எட்டிகொண்டிருக்கிறது.

தொலைதூரம் வீற்றிருக்கும் செவ்வாய் மற்றும் புதன் கிரகங்களுக்கு ஏவுகணைகள் அனுப்பும் விஞ்ஞானிகளுக்கு அண்டை வீட்டுக்காரனின் பெயர் கூட தெரியாது.

முக நூலில் பல்வேறு முகபாவங்களை புகைப்படங்களாக பதிவேற்ற இளசுகளுக்கு நேரமிருக்கு, ஆனால் தன முகம் தனை பெற்றோர்களுக்கு காண்பிக்க நேரமில்லை.

இப்படி தொழில் நுட்பத்தின் வேகத்தை சமாளிக்க கற்றுக்கொள்வது எப்படி, மனித நேயத்தையும், பண்டைய கலாச்சாரத்தையும், மறந்து விடும் பேச்சு மொழிகளையும் கட்டி காப்பது எப்படி, சமச்சீராக இயந்திரமும் மனிதனும் கட்டுக்குள் இருப்பது எப்படி ? இப்படி பல கேள்விகள் நாம் சிந்தித்து பார்க்க வேண்டிய தருணம். மேலும் நான் எழுத இருக்கும் கட்டுரைகளில் இதை பற்றி விவாதிப்போம்....

வணக்கம்,
சிவசுப்பிரமணியன்...

சனி, 28 ஜூன், 2014

கனவு 16 - கனவுக்குள் கனவு - இரண்டாம் கனவு

                              நான்  எனது தம்பி , நண்பர்கள் இருவர் எங்கோ விடுமுறைக்கு சென்று விட்டு ரயில் நிலையத்தில் இரண்டு மணி நேரம் கழித்து வர இருக்கும் ரயிலுக்கு காத்துக்கிடக்கின்றோம். அப்பொழுது அங்கே ஒரு ரவுடி கும்பல் ஒன்று வருகிறது. அங்கு இருக்கும் யாவரையும் சோதித்து விட்டு எங்களையும் பரிசோதனை செய்கிறார்கள்.நான் மட்டும் சும்மா இருக்காமல் ஏன் இப்படி தராதரமில்லாமல் பழகுகிறீர்கள் என்று அதில் ஒருவனை பார்த்து வம்பு இழுத்து விடுகின்றேன். பிறகு அவன் என்னை முறைத்து விட்டு சென்று விடுகிறான்.


இரயில் வர ஒரு மணி நேரம் இருக்கும்.அப்போது அந்த ரவுடி கும்பல் தலைவனும் அடியாள் ஒருவனும் எங்களை சுற்றி விட்டு - ஏன் என்று கேள்வி கேட்டாயே - இதோ பதில் என்று அப்படியே அலேக்காக என்னை தூக்கிக் கொண்டு அருகிலிருக்கும் மைதானம் பக்கம் போனார்கள். எனது தம்பியும் நண்பர்களும் அதை தடுக்க முயன்றார்கள். ஆனால் அவர்களை வேறு சிலர் தடுத்து விட்டனர். பிறகு அந்த மைதானத்தில் கில்லி விஜய் -பிரகாஷ்ராஜ் கடைசி கட்ட சண்டை காட்சி நடந்தது என்று எண்ண வேண்டாம். என்னை அந்த அடியாள் பந்தை தூக்கி எறிவது போல் தூக்கி எறிந்தான், அடிதான்,உதைத்தான்.. நான் கத்துகிறேன் கதறுகிறேன்.எங்கும் வேடிக்கை மட்டும் தான் வழக்கம் போல்.யாரும் உதவுவதற்கு கூட வரவில்லை.பிறகு அந்நியனாக மாறு என்று உள் மனது சொன்னாலும்  நான் செயலற்று தான் கிடக்கிறேன்.

கண் முழித்து பார்க்கும் போது  தம்பி அருகிலிருந்தான். என்னை விட்டு விடுங்கள்,காப்பாற்றுங்கள் என்று பிதற்றினாயே என்று கேட்டான்.நீயும் தான் கூட இருந்தாய் என்றேன். நல்ல கனவு கண்டாய் என்று நகைத்தான். பிறகு தான் அது கனவு என்று நானும் உணர்ந்தேன். உடல் வலி லேசாக இருந்தது.
நண்பனும் நானும் காயம் கொண்டு பயணம் சென்று திரும்பி வந்த தூக்கத்தில் இப்படி கனவு வந்ததே என்று நொந்து கொண்டேன்.

மீண்டும் கண் விழித்து பார்க்கிறேன். நான் இரு கனவுகள் INCEPTION திரைப்படம் போல் பல நிலைகளில் கனவுகள் கண்டுள்ளேன் என்பதை உணர்ந்தேன். கனவு 16 முற்றும்.

மீண்டும் வேறு கனவோ,கவிதையோ,கட்டுரையோ வளம் வரும், மழை பொழியும் ....