சனி, 27 டிசம்பர், 2014

கட்டுரை 4 - மனித மொழிகளின் கலப்படம்

                                   யற்கையான மனித மொழிகளின் பரிணாமம் பற்றி என்னுடைய முந்தைய கட்டுரையில் பார்த்தோம். ஆங்கிலம் - தினசரி வாழ்க்கையில் பேசப்படும் ஒரு பொதுவான சர்வதேச மொழியாகும். வேகமான தகவல்தொடர்பு வளர்ச்சிக்கு மத்தியில் ஒரு பொதுவான மொழி அத்தியாவசிய தேவையாக மாறி வருகிறது. தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கும் ஒரு நுண்ணறி பேசி போல்,  ஒரு பொதுவான மொழி இந்த கிரகத்தில் உள்ள ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனுக்கும் போய் சேருவதில்லை. காரணங்கள் பல இருக்கலாம் - ஆனால் நான் முக்கிய காரணிகளாக கருதுவது கல்வியறிவின்மை மற்றும் வறுமை.

                                  அறிவியல் பார்வையில்  மனித மொழி ஒரே மொழி என்று கருதப்படுகிறது. அது மனிதர்களைத் தவிர விலங்குகள் அல்லது பறவைகள் அல்லது பிற வாழும் உயிரினங்களில் இருந்து வேறுபடுகிறது. சொல்லகராதி, உச்சரிப்பு, பேச்சு நடை, வட்டார மொழிகள் போன்ற பல காரணிகள் உலகில் பேசப்படும் மனித மொழிகளில் முடிவில்லா மாறுபாடும் பரந்த வகைப்பாடும் ஏற்படுத்தியிருக்கின்றது.
                                தற்போது மொழிக்கலப்படம் அதிகரித்து வருவதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.இந்த கலப்படம் அசல் மொழி + பிராந்திய மொழி + சர்வதேச மொழி + புரியாத  புதிய சொற்களை கலந்து ஒரு புது மொழியை உருவாக்கி வருகிறது. சிலர் இதை மொழி பரிணாம வளர்ச்சி என்று வாதிடலாம். சிலர் அருகிவரும் மொழிகள் அதன் தனித்தன்மையை இழந்து விடுகிறது என்று வாதிடலாம். என்னை கேட்டால் நாடோடிகள் போல் வெவ்வேறு இடங்களுக்கு சுற்றி திரியும் நாம், நமக்கு தெரிந்த மொழியை மறக்கும் வாய்ப்பை அதிகரித்து விடுகிறோம். மொழி கலப்படத்திற்கு வழி வகுக்கிறோம். இந்த விவாதத்தை மொழியியல் அறிஞர்கள் அல்லது ஆராய்ச்சியாளர்களிடமே விட்டு விடுவோம்.

                                  எனது பார்வையில், நாம் குறைந்தது நம் சொந்த தாய் மொழிகளின் சொல்லகராதி அறிய முயற்சி செய்து அதை மென்மேலும் வளர்க்க, எழுத, பேச என்று முறையாக பயன் படுத்தலாம். ஆராய்ச்சி ஒன்று சொந்த தாய் மொழி பேச தெரியாத அல்லது பேசுவதை மறந்த ஒரு நிலையும் ஏற்படுகிறது என்று எடுதுக்காட்டுகின்றது. தாய்நாட்டை விட்டு செல்லும் ஒவ்வொரு குடிமகனும் தனது தாய் மொழி தெரிந்த இன்னொருவரிடம் அதே மொழியில் பெரும்பாலும் பேசுவதில்லை.

                                   நாம் கற்று புலமை பெற்ற சொந்த முதல் மொழியில் சரளமாக பேசும் பொழுது பிற மொழிகளை அதில் கலக்காமல் நாம் ஏன் பேச முடியாது.   பிராந்திய மொழிகளில் தான்  சர்வதேச மொழியான ஆங்கிலம் கலக்கும் வாய்ப்பு அதிகம் என்று யூகிக்கிறேன். சரளமாக ஆங்கிலம் பேசும் ஒரு நபர் தனது  சொந்த மொழியிலிருக்கும் ஓரிரு வார்த்தைகளை கலந்து பேசும் போது அது எப்படி இருக்கும் என்று யோசித்து பாருங்கள்.

                                   இந்த கலவை புது மொழி கற்கும் ஒருவர் அதே மொழியை நன்கு அறிந்த இன்னொருவருக்கு உடனே  தகவல்கள் தெரிவிக்க பயன்படும் என்றால் ஒப்புக்கொள்ளலாம்.அல்லது  இரு சாராருக்கும் தெரிந்த பொது மொழியை பேசலாம். ஆனால் சரளமாக மொழியை கற்று முடித்த பிறகும் இந்த கலப்படம் ஏன் தொடர வேண்டும்.

                                   ஒரு மொழி நன்கு தெரிந்தால், அதை சரியான முறையில் குறைந்தது அதே மொழி தெரியும் மற்றொரு நபருடன் சரியாக தொடர்பு கொள்ள  முடியுமளவிற்கு பயன்படுத்த பழகலாம். அதே மொழியில் ஒரு இளநிலை பட்டம் பெறவோ  அல்லது நூறு சதவீதம் சரியாக அதை கற்றுக்கொள்ள வேண்டுமோ என்று அர்த்தம் இல்லை. அது அந்தந்த மொழிக்கு கொடுக்கும் உங்கள் ஈடுபாடை பொருத்தது. பல மொழிகள் தெரிந்தாலும் அதை அரைகுறையாகத் தான் கற்றுக்கொண்டிருக்கின்றோம்.

                                   பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம் முன்னோர்கள் எப்படி பேசியிருக்க வேண்டும் அல்லது அவர்கள் பயன்படுத்திய சொற்கள் என்ன என்று தெரியவில்லை. வரலாற்றில் மனித மொழி பற்றி விவரங்கள் சேகரித்து வைத்த ஆதாரங்கள் ஒரு எல்லை வரை தான் நமக்கு தெரியும்.  மனிதனின் பரிணாம வளர்ச்சி எப்படி தொடர்கிறதோ, அதே போல்  நாம் மனிதர்கள் பேசும் மொழிகளின் பரிணாம வளர்ச்சியை நிறுத்த முடியாது. எதிர்காலத்தில் ஒரு பொதுவான மொழி அல்லது ஒற்றை மொழி உருவாகலாம்  - அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் அதை வடிவமைக்கலாம்.


                                   ஆங்கிலத்தில்  பிற மொழி வார்த்தைகளை கலக்காமல் பல மணி நேரம் இடைவெளி இல்லாமல் பேசக்கூடிய ஆட்கள் பலர். எனவே இந்த கட்டுரையின் சவாலாக நான் தொடுப்பது : நீங்கள் குறைந்தது பத்து நிமிடங்கள் மற்ற மொழி சொற்கள் கலக்காமல் உங்கள் தாய்மொழியை  பேச முடியுமா? (தாய்  மொழி  தெரியாது என்றால், விரைவில் அதை கற்க முயற்சி செய்யுங்கள்)   நீங்கள் சவாலில் வெற்றி பெற்றால், நீங்கள் நம்பிக்கையுடன் உங்கள் சொந்த மொழி கற்றதற்க்கு கொஞ்சம் பெருமை படலாம். மனித மொழிகளின் பரிணாம வளர்ச்சி நல்ல முறையில் தொடரட்டும்....

--சிவசுப்பிரமணியன்.

ஞாயிறு, 23 நவம்பர், 2014

கட்டுரை 3 - மனிதன் பேசும் இயற்க்கை மொழி

                                    த்தாண்டுக்கு முன்போ அல்லது நூற்றாண்டுக்கு முன்போ அல்லது ஆயிரவாண்டுக்கு முன்போ மனிதன் பேசிய இயற்கை மொழிகளிலும், தற்போது பேசப்படும்  மனித மொழிகளின் பயன்பாட்டில் ஏற்ப்படும் வேறுபாடுகளை கவனித்திருப்பீர்கள். நான் இங்கே கணினிக்கு புரியும்  நிரலாக்க மொழிகள் பற்றி சொல்ல வரவில்லை. கட்டுரைகள், செய்திகள், புத்தகங்கள், கையெழுத்துப் பிரதிகள், ஓலைச்சுவடிகள்  அல்லது வெவ்வேறு கால கட்டங்களில் வெளியடப்பட்ட உரையாடல் நிகழ்படங்கள், ஆவணப்படங்கள், திரைப்படங்கள் , ஒலிப்பேழைகள், ஒலி -ஒளி பதிவுகள்  என்று வரலாற்று சான்றுகள் அனைத்தும் நமக்கு மனிதன் பேசும் இயற்க்கையான மொழியின் மாற்றத்தை உணர்த்தும்.


பேசும் திறன் மட்டுமின்றி ஏனைய அடிப்படை மொழி திறன்கள் ஆகிய கேட்பு,  வாசிப்பு, எழுத்து அனைத்திலும் மாற்றம். மற்ற முக்கியமான அம்சங்களான சொல்லகராதி, உச்சரிப்பு, எழுத்தாக்கம், இலக்கணம், மொழியின் பாணி மற்றும் தனிமனித தகவல் அடிப்படை திறன்கள் மீதும் ஒரு பெரும் தாக்கத்தை இந்த மொழி மாற்றம் ஏற்படுத்துகிறது..

அருகிவரும் இனங்கள் போன்று அருகிவரும் மொழி கூடத் அதன் தனிப்பட்ட அடையாளம் மற்றும் தெளிவை இழந்து வருகின்றன. மொழியில் பயன்படுத்தப்படும் வார்த்தைகள் கூட காணாமல் போகிறது. இப்போது ஒரு நாள் நாம் மீண்டும் மீண்டும் அதே வார்த்தைகளை அல்லது குறைவான வார்த்தைகளை தான் பேசுகின்றோம்.

பள்ளி, கல்லூரி மற்றும் உயர் கல்வி பயிலும் நாம் படிப்பை முடித்த பின்பு நாம் படிப்படியாக இதுவரை கற்று வந்த சொல்லகராதியை மறந்துவிட்டு, வாழ்க்கையில் அதே சொல்லகராதியை மேம்படுத்த வேண்டும் என்று நினைப்பது கூட இல்லை.

சொந்த தாய் மொழியை மறந்து பொது மொழியை பேசும்  மனிதர்களே நாம் அதிகம் காண்கிறோம். இதுவரை நான் உணர்ந்த வரையில், சொல்லகராதியை மேம்படுத்த முக்கியமான திறன்கள்: கற்றல், அறிதல், வாய்மொழி, எழுத்தாக்கம், இலக்கணம் மற்றும் இலக்கியம்.

ஒவ்வொரு நாளும் ஒரு புது சொல் கற்று அதை மறக்காமல் நடைமுறையில் பயன்படுத்தலாம். மொழியின் முக்கியத்துவம், உச்சரிப்பு, தனித்தன்மையை  மேம்படுத்த நிறைய கட்டுரைகள், புத்தகங்கள்,  படிக்கலாம். பயிற்சி வகுப்புகள், தகவல் தொடர்பு அமர்வுகள், உள்ளங்கையில் இருக்கும் உலகம் (இணையம்) என்று பல ஊடகங்களால் நாம் நமது மொழியை விரிவு படுத்தலாம், வரும் தலைமுறையினர்களுக்கு வழிகாட்டலாம். மொழியின் முக்கியத்துவத்தை உணர்த்தலாம்.

ஆராய்ச்சி ஒன்று  - கடந்த நூற்றாண்டில் தொடங்கி, தற்போது பேசப்படும் மொழிகளில் 50% முதல் 90% அழிந்துவிட்டது என்று காட்டுகிறது. விக்கிப்பீடியா, விக்சனரி, கூகிள் போன்ற முக்கிய இணைய வளங்கள் நமது  மொழி வரலாறு, மறந்து போன சொல் வார்த்தைகள், நிகண்டுகள், அகராதிகள், முதலிய புள்ளிவிவரங்களை தெளிவாக எடுத்து காட்டுகின்றன.

பெரும்பாலான மொழியியல் அறிஞர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மொழிகளின் அழிவை  நிறுத்த முடியாத நிகழ்வு என்று கூறுகிறார்கள்.
நான் கவனித்த மற்றொரு விஷயம், மொழி கலப்படம். தாய்மொழியில் பிற மொழிகளை கலந்து உரையாடுவது, சிந்திப்பது,எழுதுவது என்று வினாடிக்கு ஒரு முறை புது மொழி ஒன்று உருவாகி விடுகிறது. இதை பற்றி விரிவாக எனது அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

--சிவசுப்பிரமணியன்...

ஞாயிறு, 21 செப்டம்பர், 2014

கவிதை 45 - கணினி

கணினியில் கணிதமோ,
உன் மூளைக்கு விரதமோ ....!

கணினியில் கவிதையோ,
ஏட்டும் எழுது கோலும் மறந்தாயோ...!

கணினியில் ஓவியமோ,
காகிதமும் தூரிகையும் தொலைத்தாயோ...!

கணினியில் திரைப்படமோ,
திரையரங்கும் நாடகமேடையும் அலுத்து போனதோ...!


கணினியில் விளையாட்டோ,
மைதானமும் தெப்பக்குளமும் வெறிச்சோடிக்கிடப்பதா...!

கணினியில் உறவுமுறையோ,
நட்பும் சொந்தமும் நேரில் அழைக்கவில்லையா...!

கணினியில் வேலையோ,
உடலுக்கும் உள்ளத்திற்க்கும் ஒய்வு கொடுத்தாயோ...!

கணினியில் இணையமோ,
மெய்நிகர் உலகில் தனிமை வாட்டுதோ ....?

--சிவா 

ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

கவிதை 44 - மாசு

சீருந்தை சீறிட்டு செலுத்தும் 
அடுக்கு மாடி வீட்டு சீமான்கள்.

பேருந்தை பேரிரைச்சலோடு செலுத்தும் 
அரசு போக்குவரத்து போராளிகள்.

தானுந்தை புகை மண்டலமாக செலுத்தும்
மூன்று சக்கர வாகன மேதாவிகள்.

உந்துவளையை தலைக்கவசமில்லாமல் செலுத்தும்
இரு சக்கர வாகன நகர் பேசிகள்.

மிதிவண்டியை மறந்து விட்ட நவீன நடை பாதைகளில் 
மாசு படிந்த நகரத்தால் இயற்கையை மறந்து போன பாதசாரிகள்.

ஒலி ,ஒளி ,காற்று, நீர் என்று அனைத்திலும் கலந்து விட்ட மாசு,
கொஞ்சம் கொஞ்சமாக பறிக்கிறது மனிதனின் வயசு.

--சிவசுப்பிரமணியன்.