செவ்வாய், 28 நவம்பர், 2017

கனவு 17 - கதவு தட்டும் சத்தம்

              னது நண்பன் விடுமுறைக்கு சொந்த ஊர் சென்று விட்டதால் அவன் தங்கும் அறையை என்னிடம் ஒப்படைத்து விட்டு சென்றான். புத்தகங்கள் அடுக்கி வைத்திருந்த இடத்திலிருந்து இரண்டு புத்தகங்களை எடுத்து புரட்டி கொண்டிருந்தேன். அப்பொழுது கதவு தட்டும் சத்தம் கேட்டது. 

கதவை திறந்து பார்த்தால் அந்த வீட்டின் சொந்தக்காரரின் பதின் பருவத்து பையன் நின்று கொண்டிருந்தான். "நான் இங்கே கொஞ்சம் நேரம் ஒய்வு எடுக்க வந்தேன்", என்று சொல்கிறான்.  அவன் இங்கு தூங்கினால் எவ்வளவு நேரம் ஆகுமோ என்று தெரியாததால் என் நண்பனை அலைபேசியில் அழைக்கிறேன். "அவன் ஒரு திருட்டு பயல். அவனை அங்கு தங்க விடாதே", என்று நண்பன் எச்சரிக்கிறான்.


வீட்டுக்காரம்மாவை கூப்பிட்டு அவனை திருப்பி அழைத்து செல்லுங்கள் என்று நான் சொல்கிறேன். கதவை சாத்திவிட்டு மீண்டும் வந்து அமர்கிறேன். பத்து நிமிடங்கள் கடந்த பின் கதவு தட்டும் சத்தம் கேட்கிறது. இந்த முறை ஒரு கர்ப்பிணி பெண் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவிச்சு வைத்த முட்டையின் வெள்ளை கரு கேட்கிறார்.

குழம்பி போய் நானும் குளிர் சாதன பெட்டியில் இருந்த முட்டைகளை எடுத்து நீங்களே அவிச்சு சாப்பிட்டுக்கோங்க என்று அனுப்பி வைக்கிறேன் அந்த பெண்மணியை. அரை மணி நேரம் சென்றிருக்கும். மீண்டும் கதவு தட்டும் சத்தம். இரு பாலகர்கள் நின்று கொண்டிருந்தனர். இரட்டை சகோதரர்கள் போல தெரிந்தார்கள். வீட்டை சுத்தம் செய்ய வந்தோம் என்று கூறுகின்றனர்.

வீட்டினுள் நுழைந்து பொருட்களை ஒதுங்க வைத்து துப்பரவு செய்த பின், தண்ணீர் விட்டு வீட்டை சுத்தம் செய்தனர். பிறகு அண்ணன் வந்தா சொல்லிருங்க என்று என்னிடம் சொல்லி விட்டு செல்கிறார்கள். சிறு வயதிலேயே இவர்களுக்கு இந்த வேலையா என்று நான் சிந்திக்கும் பொழுது சமையல் எரிவாயு கசிந்த வாடை வீசுகிறது. விளையாட்டு சிறுவர்கள் சுத்தம் செய்யும் நேரம் பார்த்து எரிவாயு உருளையின் குழாயை உடைத்து விட்டிருந்தனர். மீண்டும் கதவு தட்டும் சத்தம். கண் முழித்து பார்க்கிறேன் - அடடா கனவு தானா என்று பெருமூச்சு விடுகிறேன்.

--சிவசுப்பிரமணியன் 

ஞாயிறு, 26 நவம்பர், 2017

கனவு 16 - அயலான்

                                வேற்று கிரக வாசிகள் மூன்று சிறுவர்கள் உருவில் நடமாடிக்கொண்டிருக்கிறார்கள் . நானும் எனது நண்பனும் தங்கிரியிருக்கும் வீட்டை நோக்கி வருகிறார்கள். இரவு நேரம். வீட்டினுள் நுழைந்து எங்களை கட்டி போடுகிறார்கள். பிறகு ஏதோ பொருளை கடத்துகிறார்கள்.


நான் வளர்க்கும் கொம்பு குதிரை (Unicorn) அந்த அயலார்களை தடுக்க முயல்கிறது. ஆனால் அதை திசை திருப்புகிறார்கள். அருகிலிருக்கும் கிணற்று பகுதிக்கு ஒளிப்பந்துகளை சுழல விட்டு குதிரையை ஓட விடுகிறார்கள்.

கொம்பு குதிரை அந்த பந்துகளை துரத்தி சென்று அதை எண்ணிக்கை எடுக்கும் பணியில் ஈடுபடுகிறது. ஒளி பந்துகள் பல மடங்குகளாக அதிகரித்து குதிரையின் கவனத்தை திசை திருப்புகிறது.


பறக்கும் தட்டு வேகமாக தரை இறங்குகிறது. நாங்கள் கட்டுகளை அவிழ்த்து அயலார்களை நோக்கி ஓடுகிறோம். நீளமான இரும்பு கம்பி செங்குத்தாக சுழன்று வருகிறது. அதை தடுக்க முயற்சித்த நண்பன் அடி படுகிறான். பறக்கும் வட்டு ஒன்று என்னை ஆக்கிரமிக்க வருகிறது. தலையை குனிந்து தப்பித்து கொள்கிறேன். பிறகு கொம்பு குதிரை இருக்கும் பக்கம் ஓட்டம் எடுக்கிறேன். அயலார்கள் எதை திருடி சென்றார்கள்? நான் குதிரை மீது ஏறி  அயலார்களை பிடித்தேனா என்று பல புதிர்கள் உங்களுக்கு எழலாம். ஆனால் கனவு கலைந்து விட்டபடியால் இதை கற்பனை கதையாக வேறு ஒரு வலைப்பூவில் தொடர்கிறேன்.

--சிவசுப்பிரமணியன் 

சனி, 26 ஆகஸ்ட், 2017

கட்டுரை 8 - அன்றாட வாழ்வில் மறந்து போன தமிழ் சொற்கள்

மிழை தாய் மொழியாக கொண்டுள்ள தமிழர்கள் ஐந்து நிமிடங்கள் தொடர்ச்சியாக தூய தமிழ் மொழியில் பேச முடியாமல் போகிறது. ஆங்கில மொழியின் தாக்கம் அன்றாட வாழ்வில் தமிழ் சொற்களை மறந்து விட செய்கின்றது. 30 வருடங்களுக்கு முன் தினசரி வாழ்வில் பேசிய தமிழ் சொற்கள் கூட தற்பொழுது பேச்சு வழக்கில் இல்லாமல் போனது. தமிழ் மொழியோடு வட்டார மொழி கலவை, ஆங்கில மொழி கலவை, வடமொழி கலவை, அண்டை மாநிலங்களின் மொழி கலவை என்று புது புது மொழிகள் உருவாகும் தருணமிது. 

அப்படி நாம் தினசரி வாழ்வில் பயன்படுத்தும் பல ஆங்கில வார்த்தைகளால் தமிழ் சொற்கள் மறந்து போனது. சற்று யோசித்து நான் ஒரு பட்டியலை தயாரித்தேன்.


fan = மின் விசிறி 
table = மேசை / மேஜை 
chair = நாற்காலி 
toothbrush = பல் துலக்கி , பற்குச்சி 
toothpaste = பற்பசை 
paint - வர்ணம்
paintbrush - வர்ணத்தூரிகை
television (TV) = தொலைக்காட்சி 
telephone = தொலைபேசி 
mobile phone = அலைபேசி, கைபேசி 
switch = ஆளி, தாவி, நிலைமாற்றி 
wire = கம்பி
wash basin = கழுவு தொட்டி
bath = குளியல்
bathroom = குளியலறை 
toilet = கழிவறை 
soap = சவுக்காரம்
tea = தேநீர் 
coffee = குளம்பி 
ice = பனி, பனிக்கட்டி 
ice cream = பணிப்பாகு, பனிக்கூழ் 
flask = குடுவை, குப்பி 
morning = காலை 
night = இரவு
button = பித்தான், வில்லை
bed = படுக்கை 
coat = மேல் அங்கி 
dress = ஆடை, உடை 
room = அறை 
star = நட்சத்திரம், விண்மீன்
moon = நிலா 
sun = சூரியன் 
gold = தங்கம்
silver = வெள்ளி  
radio = வானொலி 
book = புத்தகம் 
time = நேரம்
evening = மாலை 
bus = பேருந்து 
car = தானுந்து, மகிழுந்து 
bike = மிதிவண்டி 
auto = தானி 
bottle = புட்டி 
pen = பேனா, எழுதுகோல்  
pencil = கரிக்கோல் 
water = தண்ணீர் 
computer = கணினி 
internet = இணையம் 
mixie = மின்னம்மி 
grinder = மின்னறவை 
fridge/refrigerator = பதமி, குளிர்சாதனப்பெட்டி 
washing machine = சலவைப்பெட்டி, துவைப்பி 
fruits = பழங்கள் 
apple = குமளிப்பழம் 
orange = இன்னரந்தம், தோடம்பழம் 
pineapple = அன்னாசிப்பழம் 
lemon = எலுமிச்சை 
vegetables = காய்கறிகள் 
tablet = மாத்திரை, கைக்கணினி
color = நிறம் 
bus stand = பேருந்து நிலையம் 
railway station = தொடர்வண்டி நிலையம் 
train = தொடரி 
aeroplane = விமானம் 
helmet = தலைக்கவசம் 
clock = மணினி 
road = சாலை 
highway = நெடுஞ்சாலை 
painting = ஓவியம் 
sketch = வரிவடிவம், மாதிரிப்படம் 
satellite = துணைக்கோள்
watch = கடிகாரம் 
shoe = காலணி 
socks = காலுறை 
shirt = சட்டை
pant/trouser = காற்சட்டை  
shorts = அரைக்கால்சட்டை
food = உணவு 
meals = சாப்பாடு 
spoon = கரண்டி 
plate = தட்டு 
glass = கண்ணாடி 
steel  = எஃகு
iron = இரும்பு 
calendar = நாட்காட்டி 
paper = தாள், காகிதம் 
letter = கடிதம் 
pin = ஊசி, மின்செருகி 
password = கடவுச்சொல் 
camera = நிழற்படக்கருவி
photo = புகைப்படம் 
door = கதவு 
window = ஜன்னல் 
lock = பூட்டு 
keys = சாவி 
sound = சத்தம், ஒலி 
light = ஒளி 
number = எண் 
lorry/truck = சரக்குந்து 
van = பொதியுந்து, கூண்டுந்து 
jeep = வல்லுந்து
charger = மின்னூட்டி
laptop = மடிக்கணினி 
system = அமைப்பு, இயங்கு தளம் 
rainbow = வானவில்

இன்னும் இந்த பட்டியல் நீண்டு கொண்டே தான் போகும். எங்கும் மொழி கலவை, எதிலும் மொழி கலவை. தமிழ் பள்ளியிலும் மொழி கலவை, பார்க்கும் தமிழ் சினிமாவிலும் மொழி கலவை. கருப்பு வெள்ளை தமிழ் திரைப்படங்களை பார்க்கும் பொழுது அதில் ஆங்கில கலவை மிக மிக குறைவே. ஆனால் இந்த காலத்து திரைப்படங்களில் முழுதும் ஒரு நிமிடம் பேசும் வசனங்களிலும் பாடல்களிலும் ஆங்கிலம் கலந்து தான் இருக்கிறது. 

இந்த ஆங்கில கலவை மற்ற இந்திய மொழிகளையும் விட்டு வைக்க வில்லை. மேலே கூறப்பட்ட சொற்களை மற்ற மொழிகளில் மொழி பெயர்த்து பார்த்தால் அவரவர் தாய் மொழிகளில் எத்தனை சொற்களை மறந்திருக்கின்றோம் (தெரியாமல் கூட இருக்கின்றோம்) என்று தெரிய வரும். 

நாம் பேசும் பொழுது ஒரே மொழியை முழுவதுமாக பயன்படுத்தி பேசலாமா என்று முயற்சி செய்வோம். முயற்சி எடுக்க வில்லை என்றால் எதிர்காலத்தில் ஒரு சில மொழிகள் மட்டும் தான் உலகில் மிஞ்சும். அல்லது ஆங்கில மொழி மட்டும் தான் கோலோச்சும். மற்ற மொழிகள் எல்லாம் அருகி வரும் மொழிகளாகி பின்பு காணாமல் போய் வரலாற்றில் மட்டும் இடம் பிடிக்கலாம். தாய் மொழிகளை முடிந்தவரை காப்பாற்றுவோம்.

நன்றி,
சிவசுப்பிரமணியன்.