சனி, 2 ஏப்ரல், 2016

கட்டுரை 7 - உலக திரைப்படங்களில் பாசத்தின் பங்கு - ஒரு திரை அலசல்

                     கருப்பு வெள்ளை திரைப்படங்கள் வெளியான காலம் முதல் மூன்று, நான்கு பரிமாணங்களில் (3D,4D) 360 பாகை (360 degree) பார்வையில் அகல திரை அரங்குகள் (IMAX Theater) மத்தியில் மெய் நிகர் கண்ணாடிகருவியை (Virtual Gear 3D glass) கண்களில் மாட்டி கொண்டு, எண்ணியல் ஒலிகளை (Digital DTS) சுற்றியும் தெறிக்க விட்டு, நவீன நிறங்கள் பூசிய நிகழ் படங்கள் (Color Screen) வரை -  குடும்பம், பாசம், பந்தம், அன்பு, நட்பு, காதல், சண்டை, பயம், புன்னகை, நகைச்சுவை, படபடப்பு, விறுவிறுப்பு என்று நகரும் கதை, திரைக்கதைகள் ஏராளம்.

இப்படி உலக திரைக்காவியங்கள் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைக்கும் தருணத்தில் மனித உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுக்கும் திரை இயக்குனர்கள் இருக்கிறார்கள். பாசத்தை திரையில் காட்டி கண்களில் கண்ணீரை வரவழைக்கும் மாயாஜாலம்.  வெவ்வேறு மொழிகளில் தந்தை மகன் பாசம், தந்தை மகள் பாசம், தாய் பாசம், நண்பனின் நேசம் என்று திரைப்படங்களின் பட்டியல் நீளும்.  கருப்பு வெள்ளை காலத்தில் எண்ணில் அடங்காத படங்களை அடுக்கி விடலாம்.

தமிழ் மொழியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த படங்கள் எத்தனையோ இருக்கின்றது. அதில் பா  வரிசையில் வெளி வந்த சிவாஜி படங்கள் பங்கு அதிகம். இதை 1950 -1970 கால கட்டம் என்று எடுத்து கொண்டால், 1980-2010 களில் திரைப்படங்கள் பல மனதை வருடியது. நடிகர் சரத்குமார் நடித்த நட்புக்காக, நாட்டாமை, சூர்யவம்சம், சமுத்திரம் , நடிகர் மம்மூட்டி நடித்த ஆனந்தம், நடிகர் பார்த்திபன் நடித்த அழகி பல முறை பார்த்தும் சலிக்காத பாசப்படங்கள். 2006ல் இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் வெளி வந்த வெயில்,  இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் வெளி வந்த எம் மகன் ஆகிய திரைப்படங்கள் தந்தை-மகன் பாசத்தை உணர்த்தியது.நடிகர் விக்ரம் - பேபி சாரா நடிப்பில் தமிழ் மொழியில் வெளிவந்த தெய்வ திருமகள் திரைப்படத்தில் தந்தை மகள் பாசத்தை அற்புதமாக சொல்லியிருப்பார்கள்.

2015ல் ஹிந்தி மொழியில் வெளிவந்த பஜ்ரங்கி பாயிஜான் நாடு - வயது - மொழி - மதம் என்று எந்த பேதமும் பாராமல் பாசத்தை காட்டும் அழகான திரைப்படம். மௌனத்தை வைத்தே சத்தமாக சிந்தையை தூண்டும் ஆறு வயது சிறுமி ஷாஹிதாவின் நடிப்பு கண் கலங்க வைத்து விடுகிறது.எப்பாடு பட்டாவது பெற்றோர்களிடம் குழந்தையை சேர்த்து விட வேண்டும் என்று ஒரே லட்சியம் கொண்டு அப்பாவி நடிப்பில் அசத்தல் காட்டியிருக்கிறார் சல்மான் கான்.மனித உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து திரைக்கதையை கச்சிதமாக நகர்த்தி சென்றுள்ளார் இயக்குனர் கபீர் கான். 

2003ல் கொரியன் மொழியில் வெளிவந்த Miracle in Cell No.7 என்னை வியக்க வைத்த இன்னொரு அற்புதமான திரைப்படம். மூளை வளர்ச்சி இல்லாத தந்தைக்கு செய்யாத குற்றத்திற்காக சிறைவாசம். வெளி வேஷம் இல்லாத வெகுளியான தந்தைக்கு தெரிந்த ஒரே விஷயம் மகளின் பாசம். ஆறு வயது சிறுமிக்கு அப்பா மேல் அளவு கடந்த அக்கறை. அப்பாவை எங்கே கொண்டு போகிறார்கள் என்று கண்ணீர் நிறைந்த அந்த பிஞ்சு கண்கள் பேசும் பொழுது நமது கண்களில் கண்ணீர் நிறைவது நிச்சயம்.

நான் இங்கே பகிர்ந்த திரைப்படங்களில் ஒரு பக்கம் நகைச்சுவை காட்சிகள் சத்தம் போட்டு சிரிக்க வைத்தது என்றால் மறுபக்கம் மனதை உருக்கும் தருணங்கள் மெளனமாக கண்ணீர் சிந்த வைத்து விடுகிறது. நம்பிக்கை, அன்பு, விடாமுயற்சி என்று நேர்மறை சிந்தனைகள் எடுத்து காட்டும் காட்சிகள் பார்வையாளர்கள் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்து விடும்.இன்னும் பிற மொழிகளாகிய ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று நான் ஒவ்வொரு திரைப்படமாக அடுக்கினால் கட்டுரைகள் பல எழுதலாம்.

--சிவசுப்பிரமணியன்