ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015

கட்டுரை -5 - மறந்து போன இந்திய மாயாஜால கற்பனை கதைகள்

ஆங்கிலத்தில் Tamil Fantasy Novels or Stories என்று கூகுளில் தேடி பார்த்த பொழுது விளக்கமான முடிவுகள் ஒன்றும் தென் படவில்லை. Fantasy  என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழாக்கம் கூட கற்பனை, மாயாஜாலம், மந்திர லோகம் என்று தான் என்னால் நினைத்து பார்க்க முடிகிறது.

ஆங்கில கதைகளோ, நாவல்களோ எடுத்துக்கொண்டால் கற்பனைக்கு எட்டாத அறிவியல் புனைக்கதைகள் (Science Fiction), வரலாற்று புனைக்கதைகள் (Historical Fiction) மற்றும் மாயாஜால சாகச பயணக்கதைகள் (Fantasy Adventure) என்று ஏராளமான வகைகளில் புத்தகங்கள், நாவல்கள், தொலைக்காட்சி தொடர்கள், நாடகங்கள், திரைப்படங்கள் என்று அனைத்தும் பிரம்மாண்ட வரவேற்ப்பை பெற்றுள்ளன.

ஆனால் தமிழிலோ, அல்லது இந்திய மொழிகளிலோ முன்பொரு காலத்தில் இந்த வகையறாக்கள் இருந்த போதிலும் தற்பொழுது அவை எல்லாம்  நினைவுகளாகவோ அல்லது சிறுவர் கதைகளாகவோ தான் கருதபடுகின்றன. திரைப்படங்கள் கூட அவ்வபோது பாஹுபலி, மகதீரா, ஈ, எந்திரன், புலி, இம்சை அரசன் 23ம் புலிகேசி என்று வந்த வண்ணம் உள்ளன.


சரி- விஷயத்துக்கு வருவோம். கருப்பு வெள்ளை காலத்தில் இந்தியாவில் ஏராளமான நாவல்கள், கதைகள், திரைப்படங்கள் கற்பனை காவியங்களாக வெளியாகி இருந்தன. பழம் பெரும் மாயாஜால கதைகள் என்றால் சமஸ்க்ரிதத்தில் வெளியாகி பின்னர் பிராந்திய மொழிகளில் புகழ் பெற்ற  விக்கிரமாதித்யன்-வேதாளம் கதைகள் தான் என் நினைவுக்கு வருகிறது. 17ம்  நூற்றாண்டில் வெளியான மதனகாமராஜ கதைகளும் இதே வகை தான். இந்த கதைகள் 1930-50 காலக்கட்டத்தில் நாடகங்களாகவும், திரைப்படங்களாகவும் வெளி வந்துள்ளன. மதனகாமராஜ கதைகள் Arabian Nights என்ற அரேபிய கதைகள் போல பல கதைகளின் சேகரிப்பு. அம்புலி மாமா, சிறுவர் மலர், பஞ்சதந்திர கதைகள், அக்பர்-பீர்பால் கதைகள், தெனாலிராமன் கதைகள், Jataka Tales, என்று பல சிறு கதைகளும், தொடர்களும், வார இதழ்களில், நூலகங்களில் படித்த நினைவு.

இந்த மாயாஜால கதைகள் சில நேரம் நமது மூளைக்கு வேலை கொடுக்கும். Lord of the Rings கதையில் வரும் Gollum போடும் புதிர்கள் போல் மன்னன் விக்கிரமாதித்யனுக்கு வேதாளம் புதிர் கதைகளாக அடுக்கி தள்ளும். மாபெரும் காவியங்களான மஹாபாரதம், இராமாயணம் நமது கற்பனைக்கு சிறகு கொடுத்து பறக்க செய்யும்.

தற்போதைய தலைமுறை எழுத்தாளர்கள் இந்த மறந்து போன கற்பனை புனைக்கதைகளை படைப்புகளாக செதுக்கினால் அது நன்றாக இருக்கும். ரசிக்க தோன்றும், காட்சிகள் கண் முன்னே மெய்நிகர் வடிவமாக தோன்றும், கற்பனைகள் புதுமையாக தோன்றும், நுண்ணுட்பத் தொழில்நுட்பம் தாளம் போடும், செயற்கை நுண்ணறிவுள்ள எந்திர அரிமாக்கள் ஆட்டம் ஆடும், மந்திரக்குருவிகள் பாட்டு பாடும், எண்ணங்கள் வேற்று கிரக பூக்களாக மலரும். 

Fairy Tales, Dragons, Vampires, Werewolves என்று எத்தனையோ விஷயங்கள் இன்னும் அலசி பார்க்கலாம் எனது அடுத்த கட்டுரையில்!!!

--சிவசுப்பிரமணியன்.