சனி, 27 டிசம்பர், 2014

கட்டுரை 4 - மனித மொழிகளின் கலப்படம்

                                   யற்கையான மனித மொழிகளின் பரிணாமம் பற்றி என்னுடைய முந்தைய கட்டுரையில் பார்த்தோம். ஆங்கிலம் - தினசரி வாழ்க்கையில் பேசப்படும் ஒரு பொதுவான சர்வதேச மொழியாகும். வேகமான தகவல்தொடர்பு வளர்ச்சிக்கு மத்தியில் ஒரு பொதுவான மொழி அத்தியாவசிய தேவையாக மாறி வருகிறது. தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கும் ஒரு நுண்ணறி பேசி போல்,  ஒரு பொதுவான மொழி இந்த கிரகத்தில் உள்ள ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனுக்கும் போய் சேருவதில்லை. காரணங்கள் பல இருக்கலாம் - ஆனால் நான் முக்கிய காரணிகளாக கருதுவது கல்வியறிவின்மை மற்றும் வறுமை.

                                  அறிவியல் பார்வையில்  மனித மொழி ஒரே மொழி என்று கருதப்படுகிறது. அது மனிதர்களைத் தவிர விலங்குகள் அல்லது பறவைகள் அல்லது பிற வாழும் உயிரினங்களில் இருந்து வேறுபடுகிறது. சொல்லகராதி, உச்சரிப்பு, பேச்சு நடை, வட்டார மொழிகள் போன்ற பல காரணிகள் உலகில் பேசப்படும் மனித மொழிகளில் முடிவில்லா மாறுபாடும் பரந்த வகைப்பாடும் ஏற்படுத்தியிருக்கின்றது.
                                தற்போது மொழிக்கலப்படம் அதிகரித்து வருவதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.இந்த கலப்படம் அசல் மொழி + பிராந்திய மொழி + சர்வதேச மொழி + புரியாத  புதிய சொற்களை கலந்து ஒரு புது மொழியை உருவாக்கி வருகிறது. சிலர் இதை மொழி பரிணாம வளர்ச்சி என்று வாதிடலாம். சிலர் அருகிவரும் மொழிகள் அதன் தனித்தன்மையை இழந்து விடுகிறது என்று வாதிடலாம். என்னை கேட்டால் நாடோடிகள் போல் வெவ்வேறு இடங்களுக்கு சுற்றி திரியும் நாம், நமக்கு தெரிந்த மொழியை மறக்கும் வாய்ப்பை அதிகரித்து விடுகிறோம். மொழி கலப்படத்திற்கு வழி வகுக்கிறோம். இந்த விவாதத்தை மொழியியல் அறிஞர்கள் அல்லது ஆராய்ச்சியாளர்களிடமே விட்டு விடுவோம்.

                                  எனது பார்வையில், நாம் குறைந்தது நம் சொந்த தாய் மொழிகளின் சொல்லகராதி அறிய முயற்சி செய்து அதை மென்மேலும் வளர்க்க, எழுத, பேச என்று முறையாக பயன் படுத்தலாம். ஆராய்ச்சி ஒன்று சொந்த தாய் மொழி பேச தெரியாத அல்லது பேசுவதை மறந்த ஒரு நிலையும் ஏற்படுகிறது என்று எடுதுக்காட்டுகின்றது. தாய்நாட்டை விட்டு செல்லும் ஒவ்வொரு குடிமகனும் தனது தாய் மொழி தெரிந்த இன்னொருவரிடம் அதே மொழியில் பெரும்பாலும் பேசுவதில்லை.

                                   நாம் கற்று புலமை பெற்ற சொந்த முதல் மொழியில் சரளமாக பேசும் பொழுது பிற மொழிகளை அதில் கலக்காமல் நாம் ஏன் பேச முடியாது.   பிராந்திய மொழிகளில் தான்  சர்வதேச மொழியான ஆங்கிலம் கலக்கும் வாய்ப்பு அதிகம் என்று யூகிக்கிறேன். சரளமாக ஆங்கிலம் பேசும் ஒரு நபர் தனது  சொந்த மொழியிலிருக்கும் ஓரிரு வார்த்தைகளை கலந்து பேசும் போது அது எப்படி இருக்கும் என்று யோசித்து பாருங்கள்.

                                   இந்த கலவை புது மொழி கற்கும் ஒருவர் அதே மொழியை நன்கு அறிந்த இன்னொருவருக்கு உடனே  தகவல்கள் தெரிவிக்க பயன்படும் என்றால் ஒப்புக்கொள்ளலாம்.அல்லது  இரு சாராருக்கும் தெரிந்த பொது மொழியை பேசலாம். ஆனால் சரளமாக மொழியை கற்று முடித்த பிறகும் இந்த கலப்படம் ஏன் தொடர வேண்டும்.

                                   ஒரு மொழி நன்கு தெரிந்தால், அதை சரியான முறையில் குறைந்தது அதே மொழி தெரியும் மற்றொரு நபருடன் சரியாக தொடர்பு கொள்ள  முடியுமளவிற்கு பயன்படுத்த பழகலாம். அதே மொழியில் ஒரு இளநிலை பட்டம் பெறவோ  அல்லது நூறு சதவீதம் சரியாக அதை கற்றுக்கொள்ள வேண்டுமோ என்று அர்த்தம் இல்லை. அது அந்தந்த மொழிக்கு கொடுக்கும் உங்கள் ஈடுபாடை பொருத்தது. பல மொழிகள் தெரிந்தாலும் அதை அரைகுறையாகத் தான் கற்றுக்கொண்டிருக்கின்றோம்.

                                   பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம் முன்னோர்கள் எப்படி பேசியிருக்க வேண்டும் அல்லது அவர்கள் பயன்படுத்திய சொற்கள் என்ன என்று தெரியவில்லை. வரலாற்றில் மனித மொழி பற்றி விவரங்கள் சேகரித்து வைத்த ஆதாரங்கள் ஒரு எல்லை வரை தான் நமக்கு தெரியும்.  மனிதனின் பரிணாம வளர்ச்சி எப்படி தொடர்கிறதோ, அதே போல்  நாம் மனிதர்கள் பேசும் மொழிகளின் பரிணாம வளர்ச்சியை நிறுத்த முடியாது. எதிர்காலத்தில் ஒரு பொதுவான மொழி அல்லது ஒற்றை மொழி உருவாகலாம்  - அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் அதை வடிவமைக்கலாம்.


                                   ஆங்கிலத்தில்  பிற மொழி வார்த்தைகளை கலக்காமல் பல மணி நேரம் இடைவெளி இல்லாமல் பேசக்கூடிய ஆட்கள் பலர். எனவே இந்த கட்டுரையின் சவாலாக நான் தொடுப்பது : நீங்கள் குறைந்தது பத்து நிமிடங்கள் மற்ற மொழி சொற்கள் கலக்காமல் உங்கள் தாய்மொழியை  பேச முடியுமா? (தாய்  மொழி  தெரியாது என்றால், விரைவில் அதை கற்க முயற்சி செய்யுங்கள்)   நீங்கள் சவாலில் வெற்றி பெற்றால், நீங்கள் நம்பிக்கையுடன் உங்கள் சொந்த மொழி கற்றதற்க்கு கொஞ்சம் பெருமை படலாம். மனித மொழிகளின் பரிணாம வளர்ச்சி நல்ல முறையில் தொடரட்டும்....

--சிவசுப்பிரமணியன்.