சனி, 23 மார்ச், 2013

கனவு 10 - சுனாமி

அதிர வைக்கும் நில நடுக்கம் மிக விரைவாக கடலின் ஆழத்தை கிழித்து கொண்டு நாங்கள் வசிக்கும் நகரத்தை நெருங்கிக்கொண்டு இருந்தது.கடலின் அருகில் முகாமிட்டிருந்த குடிசைகள் யாவும் தரைமட்டமாக மாறியிருந்தது.

அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் நானும் என் தம்பியும் மேல் தட்டு மொட்டை மாடி வரை ஓடிக்கொண்டும் - கடல் அலைகள் அச்சுறுத்தும் காட்சியை தொலைவில் பார்த்துக்கொண்டும் - அயல்வாசிகளை தப்பித்துக்கொள்ளும் படி எச்சரிக்கின்றோம்..

எனது கையில் அலைபேசியும் விடாமல் சிணுங்குகிறது.மனம் அலை பாயும் வேலையில் கடல் அலை ஆக்ரோஷமாக கட்டிடங்களை காலி செய்து கொண்டிருந்தது ! அனைவரும் தண்ணீருக்குள் மூழ்கிவிட்டு மீண்டும் மூச்சு விடுகின்றோம். எங்கும் கூக்குரல் அலையின் பேரிரைச்சலுக்கு போட்டியாக !!!

இது தான் உலகின் அழிவுக்கு ஆரம்பம் போலும் - பனை மரங்களும் வேரோடு மிதந்து செல்லும் போது தான் நினைக்க தோன்றியது - இதன் பெயர் சுனாமி என்று !!! இது தான் சுனாமியா என்று யோசித்து முழித்து பார்த்தால் கனவு கண்டேன் என்பது நினைவுக்கு வந்தது.

--சிவசுப்பிரமணியன்

வெள்ளி, 22 மார்ச், 2013

கனவு 9 - புலியும் சிறுத்தையும்

நானும் என் மாமாவும் பழைய கதைகள் , நினைவுகள் பற்றி பேசிக்கொண்டே
கிராமத்தின் எல்லையில் அமைந்திருந்த கோவில் வரை நடந்தோம்.உடனே காட்டிலிருந்து பதுங்கி வந்த ஒரு புலி கிராமத்துக்குள் தன் வேட்டையை துவங்கியது.தூரத்தில் நடந்து போகிற சில மனிதர்களை அது தாக்க பாய்ந்தது.
அந்த நிமிடம் நாங்கள் இருவரும் கோவிலுக்குள் நுழைந்து விட்டோம்.அடுத்த ஆச்சரியம் என்ன வென்றால் கோவிலின் பிரகாரத்தில் ஒரு சிறுத்தை!

அதை பார்த்தவுடன் எனக்கு திக்கென்றது.யோசிக்காமல் நாங்கள் இருவரும் கோவிலின் கோபுரத்தில் ஏறி அமர்ந்து கொண்டோம். க்ஷண நேரத்தில் அங்கு வந்திருந்த அனைவரும் புலிக்கும் சிறுத்தைக்கும் இறையாயினர்.பிறகு சில கிராம மக்கள் ஆயுதங்கள் திரட்டி அங்கிருந்த புலியை ஒரு கை பார்த்தார்கள்.

இதற்க்குள் சிறுத்தை தப்பி ஓடிவிட்டது.இந்த களேபரம் முடிந்த வுடன் கொஞ்சம் அமைதி ! நானும் மாமாவும் கீழே இறங்க ஆயித்தமானோம். ஆனால் சில கிராமத்து வீரர்கள் அந்த சிறுத்தையை தோளில் சுமந்து கொண்டு வந்தார்கள். திடீரென்று அதை எங்கள் முன் வைத்தார்கள்.அது கண் திறந்து பேசி சிரித்து விட்டு தமிழில் பேசவும் ஆரம்பித்தது. என்ன ஆச்சரியம் !!
பிறகு தான் தெரிந்தது அது சிறுத்தை வேடம் பூண்ட ஒரு கிராமத்து இளைஞன் என்று ... 

பிறகு கண் விழித்து பார்த்து யோசித்த போது எல்லாமே கனவு. கனவுலகில் உலா வரும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் சில நேரம் தொடர்பு கொஞ்சம் கூட இருக்காது போலிருக்கு ....

-- சிவசுப்பிரமணியன் .