ஞாயிறு, 19 மே, 2013

கனவு 13 - நடு இரவில்

இந்த கனவை திகில் நாவல்களில் சேர்க்க வேண்டுமா என்று நீங்கள் இதை படித்து விட்டு முடிவு செய்யலாம்.

திருவிழா பார்க்க நான்  ஊருக்கு குதூகலமாக புறப்படும் காட்சியுடன் இந்த கனவு ஆரம்பமாகிறது. சில பால்ய கால நண்பர்களை அங்கு சந்தித்து பழைய கதைகள் யாவும் பேசுகின்றோம். எங்கள் உறவினர்கள் மனைகள் யாவும் நான் தங்கியிருக்கும் பாட்டியின் வீட்டுக்கு பக்கத்திலே அமைந்திருந்தது.

கொஞ்ச தூரம் நடந்தால் அங்கு கோவில் பிரகாரம் நம்மை வரவேற்கிறது.
கடல் அலைகள் ஓயாமல் கரை திரும்பும் ஓசை நம் காதுகளில் ஒலிக்கிறது.
இரவு நேரம் எல்லாரும் தூங்கும் பொழுது வேகமாக கதவு தட்டும் சத்தம்.
நான் கண் முழித்து கதவை திறந்து பார்த்தால் ஒரு ஊமை பெண்.

ஏதோ ஒரு காகிதத்தை கையில் கொடுத்து விட்டு செல்கிறாள். அதில் சில சித்திர குறிப்புகள் மட்டும். அவை இரு மனிதர்கள் சடலங்களாக நடமாடும் குறிப்பு. எனது நண்பர்களையும் உறவினர்களையும் எழுப்பி அதை  காண்பிக்கின்றேன். யாவரும் திகைத்து பார்த்து விட்டு - இது வெறும் வேடிக்கை பூசல் - கவலை வேண்டாம் என்று என்னை நன்றாக தூங்கு என்றும் சொல்லி விட்டு அவர்களும் படுத்து விட்டார்கள் .

வெகு நேரம் சென்ற பின் நடு இரவில் மீண்டும் கதவு தட்டும் ஓசை.யாவரும் பயத்தோடு ஜன்னல் வழியாக எட்டி பார்க்கிறோம்.அங்கு கோரமாக இரு பிரேத உடல்கள் அலங்கோல உடையுடன் நிற்பது தெரிகிறது.கண்களில் ரத்தம் வடிகிறது. அதில் ஒருவனுக்கு இரு கைகளும் பாதி வெட்டப்பட்ட நிலையில் தொங்குகிறது.மீண்டும் அவர்கள் கதவை வேகமாக தட்டவும், அதை உடைத்துக்கொண்டு உள்ளே நுழையவும் எத்தனிக்கிறார்கள். கதவை திறந்து விட்டால் நாங்கள் யாவரும் காலி.. அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிப்பதற்குள் கனவு காற்றோடு கலைந்து விட்டது.