சனி, 29 டிசம்பர், 2012

கவிதை 42 - சில நொடிகள்

நெடு நாள் பழகிய நண்பனுக்காக
ஒரு நொடி காத்திருக்க வில்லை ....
சில நொடிகள் பார்த்த பெண்னுக்காக
ஒரு நாள் உன் விழிகள் ஏன் காத்திருக்கின்றது ***

நெடு நேரம் நிற்கும் முதியவருக்காக
அமர இடம் தர மனமில்லை ....
சில நொடிகள் நின்ற பெண்னுக்காக
உன் கால்கள் ஏன் வலிக்கின்றது ***

நெடுங்காலமாகியும் உன் குரலை நெடுந்தூரம்
உள்ள உன் பெற்றோர்கள் கேட்கவில்லை ....
சில நொடிகள் புன்னகைத்த பெண்னுக்காக
வாழ்நாள் முழுதும் பேச உன் நாவு ஏன் துடிக்கின்றது ***

நெடுஞ்சாலையில் அதிவேகமாக இரு சக்கர 
வாகனத்தை செலுத்தும் பொழுது பதற்றமில்லை ....
சில நொடிகள் பேசலாம் என்ற பெண்னுக்காக 
நடுநிசி வரையில் தூக்கமில்லாமல் உன் இதயம் ஏன் படபடக்கின்றது ***

நெடுந்துயரம் பஞ்சமாக வந்த போதிலும்
வஞ்சமில்லா உன் நெஞ்சம் கலங்கவில்லை 
சில நொடிகள் மௌனகீதம் பாடும் பெண்னுக்காக
கஞ்சமில்லா உன் வாழ்க்கை ஏன் தஞ்சமடைகிறது ***

மறுபடியும் சில நொடிகளுடன் சந்திப்போம்,
சிவசுப்பிரமணியன் ***

ஞாயிறு, 2 டிசம்பர், 2012

கனவு 8 - சிறைச்சாலை

மீண்டும் ஒரு சவாலான பயணம். இதில் நான் மட்டும் தான். தங்க நிற கழுகுகளின் கூடாரம் என்னை வரவேற்கிறது. எனது பார்வை ராட்சத கழுகு முதல் எறும்பின் அளவு கொண்ட கழுகு வரை விரிகிறது.உள்ளங்கையில் அடங்கி விடும் கழுகுகளை எடுக்க முயன்ற பொது அதன் கூர்மையான அலகுகள் என்னை பதம் பார்க்க ஆரம்பித்து விட்டன.வலி தாங்காமல் அதை விட்டு விட்டு தங்க நிற கழுகுகளின் சாம்ராஜ்யத்திடம் விடை பெற்றேன்.

ஆள் நடமாட்டமில்லாத பாழடைந்த வீடு தெரிகிறது.வீட்டுக்குள் மெல்ல நுழைந்தவுடன்  வெள்ளை திரவத்தால் ஒரு மனித சிலையும், கருப்பு திரவத்தால் ஒரு மனித சிலையும் தென் படுகிறது.அருகில் சென்று அந்த சிலைகளை தொட்டவுடன் அவை உயிர் பெற்று என்னை துரத்த ஆரம்பிக்கின்றன.

சிறிய வீடு போல காட்சியளித்த அந்த வீடு பல மடங்கு பெரியதாக உயரவும் நீளவும், எனது ஓட்டம் மறைந்திருந்த அறைகளுக்குள்.பிறகு தான் நான் கவனித்த போது அறை  எங்கும் மனிதர்கள் சுய நினைவில்லாமல் சிறை பிடித்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை உணர்கிறேன்.மிக உயரத்திலிருக்கும் அறை வரை அந்த சிலை மனிதர்கள் என்னை பின் தொடர்ந்தார்கள்.

அங்கே இரு குழாய்களில் தீக்குழம்பு வடிந்து கொண்டிருப்பதை கண்டவுடன் சிலை மனிதர்கள் நின்று விட்டார்கள்.எப்படியோ அவர்களை தீக்குழம்பில் தள்ளி விட்டு அங்கிருந்து தப்பித்தேன்.சிறு வெளிச்சம் தான் ஒவ்வொரு அறைக்குண்டான சாப-விமோசனம் என்று அங்குள்ள கல்வெட்டுகளில் பதிந்துள்ளது.எனது கைபேசியில் உள்ள வெளிச்சத்தை பயன்படுத்தி எல்லா மனிதர்களையும் சிறையிலிருந்து விடுவித்தேன்.


கனவு 7 - பறக்கும் ரயில்

நானும் எனது பள்ளி நண்பர்கள் சிலரும் ஒரு ரயிலில் பயணம் சென்று கொண்டிருகின்றோம்.சில மணி நேரங்களுக்கு பிறகு நான் ரயிலின் ஜன்னல் வழியாக கவனித்த போது அதிர்ச்சி கலந்த ஆச்சரியம்.அந்தரத்தில் ரயில் வேகமாக சென்று கொண்டிருக்கிறது.

வயிற்றுக்குள் பட்டாம் பூச்சி பறக்கும் அனுபவம்.பறக்கும் ரயிலை தரையில் நிற்க்கும் பார்வையாளர்கள் பிரமிப்போடு ரசிப்பதை நாங்கள் யாவரும் ரயிலில் இருந்த படியே பார்த்து மகிழ்கிறோம்.அசையும் கட்டிடங்கள், ஆர்பரிக்கும் விளக்குகள், நகைக்கும் இயந்திர மனிதர்கள், கணிப்பொறி ஊடாடு அமைப்புகள்,கதிர்வீச்சு மூலம் இனைய விளம்பரங்கள் என்று செயற்கை நுண்-அறிவில் சுழலும் உலகத்தை வட்டமிட்டு பறந்தது நாங்கள் அமர்ந்த பறக்கும் ரயில்.

துணைக்கோள் மாய வானொலி மூலம் அடுத்த ரயில் நிலையத்தின் பெயரை எதிரொலித்தது. இனைய விளம்பரங்கள் ஒன்றில் செவ்வாய் - புதன் ஆகிய கிரகங்களுக்கு பயணம் செல்ல வேண்டிய முன் பதிவு தேதியும்,கட்டணமும் அறிவிப்பதை உணர்ந்தேன்.அடுத்த ரயில் நிலையத்தை நெருங்கும் போது பறக்கும் ரயில் மெதுவாக தரை இறங்குகிறது.

மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.இருபத்தைந்தாம் நூற்றாண்டிலும் மக்கள் தொகை குறைந்த பாடில்லை.ஒளியை விட வேகமாக பறக்கும் இந்த ரயில் உலகை சுற்றி வரும் என்று ஒலிபெருக்கியில் அறிவிப்பு.மக்கள் வெள்ளம் ஆரவாரத்தோடு அவரவர் இருக்கையில் அமர்ந்த பின் மீண்டும் மின்னல் வேக ரயில் வானை நோக்கி பறந்தது ...............!