ஞாயிறு, 25 நவம்பர், 2012

கனவு 6 - அதிசய தீவு

சீனப்பெருஞ்சுவர் போல உயரம் கொண்ட, நைல் நதி போல
நீளம் கொண்ட ஒரு பிரம்மாண்ட பாலம் அது. நானும் என் குடும்பமும் , அந்த பாலத்தை கடந்து சென்று அந்த அதிசயத்தீவை பார்த்தே தீர வேண்டும் என்ற ஆவலோடு பிரயாணத்தை துவங்கினோம்.
ஆனால் மிகவும் ஆபத்தான பாலம் அது.

எப்பாடுப்பட்டாவது அந்த பாலத்தை கடந்து விட எண்ணினோம். அந்த அதிசயத்தீவை இதுவரை யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை என்று நான் நினைத்து கொண்டே இருந்தேன். வழி எங்கும் வித - விதமான கற்கள் பாலத்தின் இரு புறத்தையும் அலங்கரித்து வைத்திருக்கிறது. நைல் நதி தூரம் என்றால் எத்தனை நாட்கள் பயணம் செய்திருப்போமோ என்று தெரியவில்லை. விசித்திரமான பாம்புகள் ஆங்காங்கே தொங்கிய படியும்,
ஊர்ந்து செல்வதுமாயிருந்தன. நானும் என் தம்பியும் மிக கவனமாக எந்த பாம்பையும் மிதித்து விடாமல் சென்று கொண்டிருந்தோம்.

எங்களால் மெல்ல மெல்ல தான் ஒவ்வொரு அடியும் எடுத்து வைக்குமாறு இருந்தன. ஏனென்றால் இரண்டடி அந்த பக்கமோ இந்த பக்கமோ சாய்ந்து விட்டோமென்றால் அகல பாதாளம் தான்.பாலத்தின் மேலிருந்து கீழே பார்த்தால் சில சமயம் கடல் அலைகள் தெரிகிறது.சில சமயம் தீக்குழம்பு எரிகிறது.ஒரு வழியாக பாலத்தின் எல்லைக்கு வந்து விட்டோம்.

அங்கே தீவிற்க்கு செல்ல பழனிமலை படிக்கட்டுகள் காத்திருக்கிறது.
சற்று நேரம் அங்கு ஒய்வு எடுக்கவும் கனவு கலைந்தது.தீவை நாங்கள் சந்தித்திருக்கலாம் என்று நீங்கள் ஆவலோடு எதிர்பார்ப்பது எனக்குள் இனி வரும் கனவுகளில் தெரியும் ..................!

கனவு காண்போம்,
சிவசுப்பிரமணியன் ***

ஞாயிறு, 4 நவம்பர், 2012

கனவு 5 - உயிர்

நானும் என் நண்பனும் கடற்க்கரை ஓரம் நடந்து செல்லும் காட்சி ..
பிறகு எங்களுக்குள் ஒரு சவால் எழுகிறது. 
யார் அதிக நேரம் கடலுக்குள் மூச்சு பிடித்து இருப்போம் என்று ?
முதலில் என் நண்பன் கடலுக்குள் செல்கிறான்.வெகு நேரமாகியும் அவனைக்காணவில்லை. பிறகு நானும் ஆழ் கடலில் மூழ்கிறேன்.

 கடலுக்கடியில் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. என் நண்பன் ஆழ்கடலில் உயிர் வாழும் திறனை கைவசப்படுத்தியிருந்தான் என்று முதலில் வியந்தேன்.பிறகு தான் புரிந்தது நானும் பிற கடல் உயிரினங்களைப்போல் மூச்சு விட்டுக்கொண்டிருகின்றேன் என்று !

அங்கேயே வாழ்ந்து விடலாமென்று நினைத்த நாங்கள் சர்வ சாதாரணமாக நீந்தி சென்றோம்.வைர மாளிகை , ஆர் பறிக்கும் வண்ண மீன்கள், திமிங்கலங்கள்,சுறாக்கள் என்று உலா வந்தோம். உல்லாச பயணம் தான்.

இயற்க்கை அன்னை கடலுக்கடியில் அத்துணை பொக்கிஷத்தையும் பாதுக்காப்பாக வைத்திருக்கிறாள் என்றே சொல்லலாம்.ஆனால் செயற்கையாக மனிதன் படைத்த மாபெரும் கப்பல்களும்,படகுகளும், நீர்மூழ்கி கப்பல்களும் கண்ணுக்கு தெரியவில்லை.சில இடங்களில் மூச்சு விட கஷ்டமாக இருந்தது. அப்போதே புரிந்து விட்டது - மனிதன் உருவாக்கும் செயற்கை ரசாயன பொருட்களால் கடலில் வாழும் உயிரினங்களுக்கு எவ்வளுவு ஆபத்து இருக்கின்றது என்பது.

தரையில் ஊர்ந்து செல்லும் எறும்பு,ஆகாயத்தில் பறந்து செல்லும் சிட்டு குருவி, கடலில் வாழும் சிறு மீன்கள் - யாவும் கண்ணுக்கு தெரியாமல் இருக்கலாம் - ஆனால் அவைகள் யாவும் மனிதனை போல் உயிர் வாழும் உயிரினம் தான் என்பதை மறவாமல் இருப்போம் *** 

--சிவசுப்பிரமணியன்...