ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

கவிதை 40 - ரசனை

வானில் சிரிக்கும் நிலவை
ரசிக்க மறந்து விட்டேன்,
அருகிலிருக்கும் நிலவை பார்த்து  ....

மலை உச்சியிலிருந்து விழும் அருவியை
ரசிக்க மறந்து விட்டேன்,
அருவியாய் கொட்டும் உன் பேச்சை கேட்டு ....

நிம்மதி தரும் இயற்கையின் மௌனத்தை
ரசிக்க மறந்து விட்டேன்,
எழில் கொஞ்சும் உன் மௌனப்புன்னகையால் ....

ஆர்பரிக்கும் நட்சத்திரங்களின் அழகை
ரசிக்க மறந்து விட்டேன்,
அழகான  ஓவியமாக நீ காட்சி தருகையில் ....

மெல்ல வருடும் தென்றலின் தீண்டலை
ரசிக்க மறந்து விட்டேன்,
அந்த மின்மினி பூச்சிகளை நீ துரத்தும் பொழுது ....

மெய் சிலிர்க்கவைக்கும் வெள்ளி மலர்களை
ரசிக்க மறந்து விட்டேன்,
சந்தோஷத்தில் உன் முகம் மலர்ந்த போது .....!

---சிவசுப்பிரமணியன் ***

புதன், 15 ஆகஸ்ட், 2012

கவிதை 39 - கற்பனை

நிலவு வரை மேகங்கள் 
ஒவ்வொன்றும் படிக்கட்டுகளாக,

நெடு நெடுவென வளர்ந்து நிற்கும்  தென்னை மரங்கள்
ஒவ்வொன்றும் கூட கோபுரங்களாக,

காற்றோடு கலந்துரையாடும் பனை மரங்கள்
ஒவ்வொன்றும் காத்தாடிகளாக,

வானத்தில் சிறகடிக்கும் வண்ண பறவைகள்
ஒவ்வொன்றும் விமானங்களாக,

ஆழ்கடலில் பதுங்கியிருக்கும் திமிங்கலங்கள்
ஒவ்வொன்றும் நீர்மூழ்கி கப்பல்களாக,

கொடுங்காட்டில் பாய்ந்தோடும் மிருகங்கள்
ஒவ்வொன்றும் ரயில் வண்டிகளாக,

எட்டாத உயரம் கொண்ட மாமலைகள்
ஒவ்வொன்றும் பளிங்கு மாளிகைகளாக,

புதியதோர் இயற்க்கை உலகம் - கனவு காணும்
பொழுதே என்ன அற்புதம் *****

-- சிவசுப்பிரமணியன்

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

கவிதை 38 - மாற்றி யோசி

புது மொழி ஒன்றை கற்றுக்கொள்,அதை
உன் பொழுதுப்போக்காக மாற்றிக்கொள் !

தினம் ஒரு திருவிழா கொண்டாடு,அது
உன் மன உளைச்சல்களை அழித்திடும் வேரோடு !

எழு மணி நேர தூக்கம் ஒரு பக்கம், அரை மணி
நேர உடற்ப்பயிற்சி மறு பக்கம் - மறந்து விடாதே !

பெற்றோர்களோடு மனம் விட்டு அரட்டையடி,
நண்பர்களோடு பகிர்ந்திடு நகைச்சுவைக்கடி !

நல் நூல்களில் கிடைக்கும் அறிவுரைகளை பின்பற்று,
தன்னம்பிக்கை தான் என்றும் உற்சாக ஊற்று !

துக்கம் வந்து சூழ்ந்து கொண்டால் மனம் விட்டு அழுது விடு,
உல்லாசம் உச்சியை அடைந்து விட்டால்,
வெட்கத்தை விட்டு ஆட்டம் போடு !

கற்பனைகளுக்கும் கனவுகளுக்கும் தடை போடாதே,
ஒரு நொடிக்குள் முடியும் விஷயத்தை தள்ளி போடாதே !

பிறர் சிறு முன்னேற்றம்மடைந்தால் கூட பொறாமை படாமல்
மென்மேலும் வளர்ச்சி பெற பாராட்டு,

அவசர உலகில் ஒய்வு எடுக்க மனம் வேண்டினால்
பாசமுள்ள அன்னை மடி தனில் தாலாட்டு !

புதன், 8 ஆகஸ்ட், 2012

கவிதை 37 -பரிசு

விளையாட்டு போட்டியில் ஏழை மாணவனுக்கு
கிடைத்தது முதல் பரிசு,
பெருமையுடன் பரிசுக்கோப்பையை எடுத்துச்,
சென்றான் வீட்டுக்கு,
உற்சாகமும் சந்தோஷமும் சில நொடிகளில்
கண்ணீர் துளிகளாக  மாறின,
பாராட்டு கிடைக்க வேண்டிய பிஞ்சு
உள்ளத்தில் சோகம் நிறைந்தது,
படிச்சு கிழிச்சதும் பதக்கம் வாங்கினதும் போதும்
என்று அதட்டினார் தகப்பன்,
மெளனமாக ஆறுதல் அளித்தாள் வறுமையின்
நிலைமையை புரிந்த அன்னை,
எத்தனை பரிசுகள் வாங்கினாலும் அத்தனையும்
அந்த ஏழை வீட்டில் தங்காமல் மார்வாடி
கடைகளில் அழகு பொருட்களாக ஜொலித்தது .....!

காத்திருந்த மணமகளுக்கு கடைசியாக
ஒரு நல்ல வரன் அமைந்தது,
எப்பாடுப்பட்டாவது கல்யாணத்தை முடித்து
விட துடித்தார்கள் பெற்றோர்,
கல்யாண மேடை வரை கச்சேரி
கலை கட்டி விட்டது,
அமர்க்களமாக வாழ்க்கையை துவங்கியிருந்த
மணமகள் அதிர்ச்சி அடைந்தாள்,
வரதட்சணை தொகை குறைந்து விட்டதென
மணமகன் குடும்பத்தினர் விடைபெற்றனர்,
இப்பொழுதும் பல குடும்பங்களில் வரதட்சணை
தான் கல்யாணப்பரிசு .....!

கஷ்டப்பட்டு படித்து முடித்து மாநிலத்தில்
முதலாவது இடத்தை பிடித்தான்,
வேலை கிடைப்பதற்க்குண்டான அனைத்து
தேர்வுகளிலும் வெற்றி பெற்றான்,
முடிவை ஆவலுடன் எதிர்பார்த்தவனுக்கு
ஏமாற்றம் தான் மிஞ்சியது,
உழைப்புக்கும் திறமைக்கும் கிடைத்த
பரிசை சிபாரிசு மறைத்து விட்டது ...!

ஒரு வேளை உணவுக்கு கையேந்தும் சிறுவர்களின்
விலாசம் ஆரம்பிக்குமிடம் குப்பைத்தொட்டி,
மாற்று உடை கூட இல்லாமல் தவிக்கும் அவர்களுக்கு
கல்விக்கூடங்கள் அலங்கார பொருட்காட்சி,
கள்ளம் கபடமில்லாத அந்த பிஞ்சு நெஞ்சங்களின்
எதிர்கால கனவுகளுக்கு யார் வழிக்காட்டி ?
ஆதரவின்றி துடிக்கும் இந்த இளம் சமுதாயதிற்கு
என்று கிடைக்கும் பிறந்த நாள் பரிசு .....!

-- சிவசுப்பிரமணியன்

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

கவிதை 36 - இயற்க்கை தமிழ்

சில்லென்று அருவி தாளம் போட,
புல்லாங்குழல் இசை மெல்ல ஒலிக்க,
ஜில்லென்று காற்று நடனம் ஆட,
பல்லாங்குழி ஓசை துணை கொடுக்க,
சில் வண்டுகள் பூக்களோடு ரீங்காரமிட,
சிட்டுக்குருவிகளின் சலசலப்பு சத்தம் கேட்க,
கயல்விழி மான்கள் துள்ளி குதிக்க,
பட்டாம்பூச்சி கூட்டம் வட்டம் போட,
தேன்மொழி தமிழில் திருவாய் மலர்ந்திடுவாய் ***

தடதடவென மேகங்கள் இடம் மாற,
படபடவென பச்சைக்கிளிகள் பறந்தோட,
மளமளவென மரங்கள் தலையாட்ட,
பளபளவென புல்வெளிகள் புதிர்போட,
விறுவிறுவென மழைத்துளிகள் மன்னைதொட,
சடுகுடுவென மலைகள் மோதி விளையாட,
கரகரவென கடல் மீன்கள் நீச்சலடிக்க,
இயற்க்கைத்தமிழை ரசித்து மகிழ்ந்திடுவாய் ***

-- சிவசுப்பிரமணியன்