சனி, 28 ஜூலை, 2012

கவிதை 35 - பக்கம் பக்கமாக

பக்கம் பக்கமாக நான் உன்னுடன் பேச நினைத்தாலும்,
உன் பக்கம் என் விழிகள் சென்ற போது முந்தியது மௌனம் ***

பக்கம் பக்கமாக நான் உனக்கு மடல் எழுத நினைத்தாலும்,
உன் பக்கம் அனுப்பும் போது வார்த்தைகள் இல்லாத கடிதம் ***

பக்கம் பக்கமாக நான் ஓவியம் வரைய நினைத்தாலும்,
உன் பக்கம் எட்டியது சுவர் இல்லாத சித்திரம் ***

பக்கம் பக்கமாக நான் சிற்பம் செதுக்க நினைத்தாலும்,
உன் பக்கம் வந்து சேர்ந்தது கண்ணுக்கு தெரியாத கலைநுட்பம் ***

பக்கம் பக்கமாக நான் பாடல் இசைக்க நினைத்தாலும்,
உன் பக்கம் வந்து வாசிக்கும் போது மௌன ராகம் ***

பக்கம் பக்கமாக நான் கவிதை படைக்க நினைத்தாலும்,
உன் பக்கம் விண்ணப்பிக்க கூட இல்லை ஒரு ஹைக்கூ ***

பக்கம் பக்கமாக நான் படங்கள் இயக்க நினைத்தாலும்,
உன் பக்கம் நானே இயக்கமில்லாத இயந்திரம் ***

பக்கம் பக்கமாக நான் கதைகள் சொல்ல நினைத்தாலும்,
உன் பக்கம் வந்து நின்ற போது ஸ்தம்பித்து விடுகிறது கதைக்களம் ***

பக்கம் பக்கமாக நான் இப்படியே வரிகளை அடுக்கி கொண்டே,
சிந்தனைகளை சங்கிலிகளால் பிணைத்து கொண்டே,
போக நினைத்தாலும் ---

உன் பக்கம் .

"உன் பக்கம்" --- என்று தட்டச்சு தப்பாமல் அடித்த அடுத்த நொடி
விழுந்தது ஒரு பெரிய முற்றுப்புள்ளி ***

இப்படிக்கு,
சிவசுப்பிரமணியன் ***

வியாழன், 26 ஜூலை, 2012

கவிதை 34 - சுனாமி காவியம்

கடல் அலைகள் சுனாமி என்ற உருவெடுத்து பிஞ்சு
உள்ளங்களின் கனவை கலைத்தன !

இயற்கையின் சீற்றத்தால் சிசுவை இழந்த தாயின்
கண்களில் கண்ணீர் கரைந்தன !

ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சுனாமி மனிதனின்
எதிர்கால நினைவுகளை சிதைத்தன !

ராட்சத அலைகளின் தோற்றத்தால் பதுங்கியிருந்த
எத்தனையோ கிராமங்கள் அழிந்தன !

கடல் தான் நமக்கு வாழ்க்கை என்று நம்பியிருந்த
மீனவர்களின் எண்ணங்கள் புதைந்தன !

சற்றும் எதிர்பாராத இந்த மின்னல் வேக அலைகள்
நொடியில் உயிர்களை பலி வாங்கின !

உலகின் அமைதியை நிமிடத்தில் சிதற வைத்த
சுனாமியால் சோகம் தான் மிஞ்சின !

ஏழைகளின் நிம்மதியை தொலைத்த ஆக்ரோஷ அலைகள்
துன்பத்தைத்தான் அள்ளித்தந்தன !

சொந்தங்களை இழந்து தவிக்கும் குடும்பங்களின் கதறல்
சத்தம் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன !

மீண்டும் சுனாமி வராமல் இருக்க ஆண்டவனை வணங்கி
கோடி இதயங்கள் பிரார்த்தனை செய்கின்றன !

முடியட்டும் இந்த சுனாமி காவியம் ;
மலரட்டும் புது உலகம்;
தொடரட்டும் புது யுகம் !!!

--சிவசுப்பிரமணியன் ***

செவ்வாய், 24 ஜூலை, 2012

கவிதை 33 - கலியுக காதல்

காயப்படுத்தும் முள்ளும் அதன் மேல் சிரிக்கும் மலரும்,
சேர்ந்த கலவை தான் காதல் ***

ஓளி கொடுக்கும் ஜோதியும் அதன் கீழ் அழுது வடியும்
மெழுகுவர்த்தியும் சேர்ந்தால் தான் காதல் ***

வானத்தில் ஜொலிக்கும் நிலவும் அதன் அருகே கண்
சிமிட்டும் நட்சத்திரங்களும் சேர்ந்தால் காதல் ***

காவியங்கள் பல உருவாக்கி வரலாற்றில் இடம்
பிடித்து விட்டது இந்த தூய்மையான காதல் ***

யுகம் யுகமாய் வித விதமாய் அவதாரங்கள் பல
எடுத்து விட்டது இந்த முரட்டு காதல் ***

வயது-வரம்பு பார்க்காமல் , நேரம்-காலம் பார்க்காமல்,
வாஸ்து-சாஸ்திரம் பார்க்காமல் , ஜாதி-சம்பிரதாயம் பார்க்காமல்,
வளர்ந்து கொண்டே போகிறது காதல் ***

இந்த மூன்றெழுத்து சொல்லுக்கு முடிவு தான் என்ன ?

விடுகதையா இல்லை தொடர்கதையா என்று மனதை
வாட்டி வதைப்பது ஏன் ?

இந்த குழப்பமான கேள்விகளுக்கு தீர்வு காண்பது எப்படி?

மனிதனை பைத்தியம் ஆக்குவதும் காதல் தான் !
தற்கொலைக்கு தூண்டுவதும் காதல் தான் !

அவரவர் பயன்படுத்தும் முறையில் தான் தற்போது,
சுழல்கிறது கலியுக காதல் *****

--- சிவசுப்பிரமணியன்

ஞாயிறு, 22 ஜூலை, 2012

கவிதை 32 - காதல் வலி

* பல்வேறு கோணங்களில் , பல்லாயிரம் ஆண்டுகளாக
   புது புது அர்த்தங்களுடன் கோடிக்கணக்கான
   இதயங்களுள் நுழைந்து விடுகிறது காதல் !

* கருணை குணமோ மகத்தான காதலுக்கு உண்டு,
   ஆனால் கல்லறை ஏன் அழுகிறது காதலர்கள்
    ஜோடி சேர்ந்தும் சேராமலும் வருவதை கண்டு ?

* காதல் தோல்வி கொடுக்கும் வலியில்,
  ஆண்கள் சிலர் தாடி வளர்ப்பதும்,
  பெண்கள் சிலர் தற்கொலை செய்து கொள்வதும்,
  வேடிக்கை அல்ல வாடிக்கை !!!

* புறாக்களை காதலுக்காக தூது அனுப்பிய
   அந்த காலம் மலையேறிவிட்ட பிறகும்,
   மின்னஞ்சல்கள் வழி இந்த காலக்காதல்,
   கல்யாணத்தில் கனிந்து விவாகரத்து வரை
   போன பிறகும், காதலுக்காக உயிரைத்தியாகம் செய்யும்
   சோகம் மட்டும் இன்னும் தொடர்கிறதே ......!

* சில காதல் துயரங்களோ சரித்திர வரலாறு ;
   பல காதல் பயணங்களோ விசித்திர தகறாறு !!!!

சனி, 21 ஜூலை, 2012

கவிதை 31 - மறந்து போனது

நாகரீக சகவாசம் அதிகரித்ததால் -
மறந்து போனது கிராமத்து வாசம் !

நெருக்கடி பயணங்கள் தொடர்ந்ததால் -
மறந்து போனது அரும்புகளின் குறும்புகள் !

நவீன கட்டிடங்கள் பல அமைந்ததால் -
மறந்து போனது இயற்க்கை அழகு !
'
ஜாதிகள் எண்ணிக்கை பெருகியதால் -
மறந்து போனது மனித ஒற்றுமை !

பழக்க வழக்கங்கள் மாறி வருவதால் -
மறந்து போனது கண்ணிய கலாச்சாரம் !

சுயநலமும் அலட்சியமும் ஆக்கிரமிப்பதால் -
மறந்து போனது சமுதாய அக்கறை !

ஊழலும் அநியாயமும் தலைதூக்கியதால்
மறந்து போனது சுதந்திர புரட்சி !

கலவரமும் தீவிரவாதமும் சகஜமானதால்
மறந்து போனது மன அமைதி !

இனிமேலாவது மறக்காமல் இருப்போம்,

******சிவசுப்பிரமணியன் *****

ஞாயிறு, 1 ஜூலை, 2012

கவிதை 30 - சிநேகிதனே

உதவி என்ற வார்த்தைக்கு கட்டுப்பட்டு,
உழைப்பு என்ற வார்த்தைக்கு அர்த்தம் கொடுத்து,
உண்மை என்ற வார்த்தையோடு ஊக்கமளிக்கும்
ஆருயிர் நண்பனே,
உன்னை உயர்ந்த மனிதன் என்றேன்,
உருவத்தில் அல்ல, உள்ளத்தில் ........!


உற்சாகமாய் உதயமாகும் சூரியன் போல,
உல்லாசமாய் உச்சத்தில் மின்னும் நட்சத்திரம் போல,
உரிமையோடு என்றும் உணர்ச்சிகளை உருவாக்கும்
என் உயிர் தோழனே,
உன்னை உயரும் சிகரம் என்றேன்,
உன்னதமான உறவிலும், உறுதியான நட்பிலும் ......!


உத்தரவு போடாமல் நீ உதிரும் புன்னகை,
உள்ளடக்கத்தோடு உருகவைக்கும் உன் உரையாடல்,
உடன்பிறப்பை போல் உலா வந்து மகிழ்ச்சி ஊட்டும்
என் பிரியமான சிநேகிதனே,
உன்னை உத்தம சாதனையாளர் என்றேன்,
உற்றாருக்கு உதாரணமாகவும், என்றும் உறுதுணையாகவும் ......!


உன் சாமர்த்திய பேச்சுக்கு கிடைக்கும் உபயோகமுள்ள உத்தியோகம்,
உன் அசாத்திய துணிச்சலுக்கு ஊகித்த தெல்லாம் கைகூடும்,
உணவை மட்டுமல்லாமல் உதிரத்தைக்கூட நன்கொடையளிக்கும்
என் உயிர் காப்பான் தோழனே,
உன்னை உலகமே போற்றபோகும் மாமேதை என்றேன்,
உச்சரிக்கும் சொல்லிலும், உஷாரான செயலிலும் .......!


உடனடி தீர்வுகள் கொடுத்தாயே என் மன உளைச்சல்களுக்கு,
உரிய ஆறுதல் அளித்தாயே என் உடைந்து போன மனதிற்கு,
உகந்த சிந்தனைகளை பிறருக்கு உற்பத்தி செய்து கொடுக்கும்
என் திறமையான நண்பனே,
உன்னை உபகாரம் செய்யும் உளவாளி என்றேன்,
ஊருக்குள் உளவு பார்பதற்க்கல்ல, நட்பை துப்பறிவதில் ........!


உள்ளுக்குள் உறுத்தலும் உதறலும் ஊற்றெடுத்தாலும்,
உடலுக்கு ஊடலில்லாமல் தெம்பூட்டுவது நம் நட்பு .....!


உண்ணாமல் உறங்காமல் உபவாசமிருந்தாலும் எதிரிகளுக்குக்கூட,
உபசாரம் செய்து கொடுக்கும் உதாரத்தன்மை தான் நம் நட்பு ......!


உஷ்ணத்தைக்கூட உறையச்செய்து விடும் நம் நட்பு ....!
உதடுகள் உளறாமல் உரத்த குரலில் உக்கிரமாக
உபந்நியாசம் செய்து காட்டுவதே நம் நட்பு ........!


உள்ளன்போடு எந்த வித உத்தேசமும் இல்லாமல் ஊடுருவ
முடியாத உருக்கமான ஈர்ப்பு சக்தி தான் நம் நட்பு ........!


ஊழியர்கள் ஊழல் செய்யும் போது ஊமையாக இல்லாமல்
சமுதாயதிற்கு எடுத்துறைக்கும் உத்திரவாதம் தான் நம் நட்பு *****


நட்பே,
உனக்காக எல்லாம் உனக்காக,
உதவும் கரங்கள் யாவும் உன்னாலே உன்னாலே *******


*********************************************************************************
நட்புடன்,
சிவசுப்பிரமணியன் *********************************************************************************