ஞாயிறு, 14 அக்டோபர், 2012

கனவு 4 - பறக்கும் மனிதன்

முன்னுரை

நாம் காணும் கனவுகள் யாவும் பலித்து விடுமோ? அல்லது நடைமுறையில் நடக்கும் சம்பவங்களுக்கும் கனவுகளுக்கும் தொடர்பு இருந்து கொண்டே இருக்குமா? அதுவும் அதிகாலை கனவுகள் அப்படியே நம் வாழ்க்கையில் பிரதிபலிக்க கூடுமோ? அல்லது ஆழ் மனதில் அவ்வபோது நாம் சந்திக்கும் நபர்கள், காணும் காட்சிகள் பதிந்திருந்து கனவுகளாக தோன்றுகிறதா ?
இப்படி பல கேள்விக்கணைகள் ஒன்று சேர்ந்து கனவுகளை பற்றி ஒரு நீளமான சர்ச்சை உருவாக்குகின்றது !! 

கனவுகளை பற்றி ஆராய்ந்து அதற்க்கு பல மாறுப்பட்ட கருத்துக்களை முக்கோண மன முடிச்சுக்களை அவிழ்த்து அலசி பார்த்த மனோதத்துவ தந்தை - சிக்மண்ட் பிராயிட் (Sigmund Freud). கனவுகளை பற்றி மேலும் ஆழமாக தெரிந்து கொள்ள அவரது கட்டுரைகளும் புத்தகங்களும் நாம் படித்து பார்க்க வேண்டும் !!!

பறக்கும் மனிதன் 

என்ன அதிசயம் ! கனவில் தான் இப்படியெல்லாம் சாதிக்க முடிகிறது. சிறகுகள் இல்லை, விமானத்தில் பயணம் இல்லை,எந்த வித ஊன்றுகோலும் இல்லாமல் நான் உயர உயர பறந்து கொண்டே இருக்கின்றேன்.மேலும் உச்சத்தை அடையும் பொழுது மனதில் திக்கற்ற மகிழ்ச்சி. அப்படியே ஊர் சென்று விட்டு வரலாம், பார்க்காத இடங்களை பார்க்கலாம்,நினைத்த  மாத்திரத்தில் எங்கு வேண்டுமானாலும் பறந்து செல்லும் பாக்கியம், வெளிநாடுகள் செல்ல எந்த வித தடையும் இல்லை. 

பறவைகளுடன் போட்டி போட்டு , அலைக்கதிர்களிடமிருந்து சுதாரித்துக்கொண்டு மேலே மேலே பறக்கின்றேன்.உலக அதிசயங்களை நொடிகளில் சுற்றி பார்த்துவிட்டு திரும்புகின்றேன்.அதுவும் அந்த எகிப்து நாட்டின் மேலே பறந்து செல்லும் போது தங்கமாக மின்னும் கோபுரங்கள் தத்ரூபமாக காட்சியளிக்கின்றது.

வயல் வெளிகள், அருவிகள், செடி-கொடிகள், மலைகள், கடல் அலைகள் என்று இயற்கையை பறந்தவாறே ரசித்து செல்கிறேன். 
பறவைகள் யாவும் வானில் மிதக்கும் தோழர்கள். தரை இறங்க கால்கள் சொன்னாலும் மனம் மறுக்கின்றது.

சனி, 13 அக்டோபர், 2012

கவிதை 41 - தமிழ் கலாச்சாரம்

கரங்கள் தொடுப்பதோ முல்லைச்சரம்,
விழிகள் தேடுதோ மாலைச்சூரியன்,
மனம் பாடுதோ திருவெண்பா,
மறக்க முடியுமா பண்டைய கலாச்சாரம் !

கறுப்பு பலகையில் வெள்ளை குச்சி பதிக்கிறது உயிர் எழுத்து,
வெள்ளை மனதும் கறுப்பு கண்களும் எதிர்பார்க்கிறது மெய் எழுத்து !

காத்திருக்கும் விழிகளில் மௌன புன்னகை,
எதிர்பார்த்திருக்கும் மனதினில் மௌன தேடல் !

நகரத்து pizza வும் burger உம் போட்டி போட்டு
மனிதன் நாவை அடக்க முயல்கிறது -
கிராமத்து இளநீரும் பதநீரும் சுவை தர மறுக்கின்றனவோ ?
அல்ல மனிதன் மறக்கின்றானோ ?

தொடுத்து வச்ச முல்லைச்சரம் வாடும் முன்னே,
ஆக்கி வச்ச மீன்குழம்பு ஆறும் முன்னே,
சந்தைக்கு போன மச்சான் திரும்பிவிடுவாரோ ?

ஆத்திசுவடி படித்து கல்வி கற்கும் சின்ன பெண்,
புல்லாங்குழல் பிடித்து இசை பயிலும் சின்ன பெண்,
அடுப்பில் தீ மூட்டும் கலையை இன்னும் மறக்கவில்லை ...

பல்லாங்குழிக்கு சோழி கிடைக்கவில்லை குமரிக்கு,
ஆனால் புறாக்கள் தொந்தரவு செய்யவில்லை,
சோழிக்கு பதிலாக நெல் மணிகளை உபயோகித்தபோது ....

 புகைப்படமோ ஓவியமோ என்று வியக்க வைக்கும்
 நிலா மாடங்களும்,கலைசிற்ப தூண்களும் !

 நகரத்திற்கு வந்த கிராமத்து பெண்கள் கோலம் மாறியிருக்கலாம்
ஆனால் கிராமத்து முற்றத்தில் போடும் கோலம் இன்னும் மாறவில்லை ...

பொறுமை - அடக்கம் - பணிவு -
மரியாதை - நிம்மதி -மனதில் நிறைவு
-- மொத்தமாக காட்டி விடுகிறது மங்கையின் மலர்ந்த முகம் !

கீரை பொறியலும் வத்தக்குழம்பும் சமைக்கும் போதே,
அந்த தெரு திண்ணையில் வீற்றிருக்கும்,
கனவான்கள் மோப்பம் பிடித்திருப்பார்கள் ...

சிறு பானையில் கூட கலை வண்ணம்,
நீடிக்காதோ பொற்காலம் எனும் எண்ணம்...

பாசமுள்ள மனையாளின் நேச பார்வையும்,
ஒரு பித்தளை செம்பு தண்ணீரும்,
ஒரு சட்டி கேழ்வரகு கஞ்சியும்,
ஒற்றுமையாக காத்திருக்கின்றது ....
வயலுக்கு சென்ற உழவனுக்காக !

ஓவிய கண்காட்சியில் அழகிய ஓவியங்கள்,
வெளிச்சம் போட்டு காட்டும் தமிழ் கலாச்சாரம் அற்புதம்,
தூரிகை பிடித்த கைகளுக்கு தங்க காப்போ, 
மலர் செண்டோ தேவையில்லை,
மக்கள் இன்றும் கலாச்சாரத்தை மறவாமல் 
இருந்தால் மட்டும் போதும் !

--சிவசுப்பிரமணியன் ***

புதன், 10 அக்டோபர், 2012

கனவு 3 - நடுங்க வைக்கும் அதிசயம்

நானும் என் நண்பர்களும் சுற்றுலா செல்ல எங்களை தயார் படுத்தி
கொண்டிருந்தோம். கப்பலில் பயணம் துவங்கி நாட்டின் எல்லையை
கடந்து விடுகிறோம். பிறகு நாங்கள் உள்ளூர் ரயிலில் பயணத்தை தொடர்கிறோம்.ஒரு வழியாக சுற்றுலா தலம் ஆன அந்த அழகிய தீவுக்கு வந்து விட்டோம்.

பிறகு நாங்கள் கண்ட காட்சிகள் யாவும் விநோதமாக இருந்தது.
எந்த மொழியில் வேண்டுமானாலும் பாடும் குயில் !
எந்த கேள்வியை கேட்டாலும் அதற்க்கு விடை தருகிறது பேசும் மரம் !
தீவை முழுதும் சுற்றி காட்ட பறக்கும் கம்பளங்கள் என்று ஏகப்பட்ட அதிசயங்கள் !

நானும் எனது நண்பர்களும் ஒரு கம்பளத்தில் ஏறி விட்டோம்.
சொர்க்கமாகதான் இந்த தீவு இருந்திருக்குமோ என்று நான் சிந்தித்து
கொண்டே பறக்கும் கம்பளத்தின் கீழே இருந்த கோபுரங்கள்,
மாளிகைகள் அனைத்தையும் ரசித்து வந்தேன். ஆனால் திடீரென்று
அந்த பறக்கும் கம்பளம் ஓர் இடத்தில் நின்று விட்டது. அந்தரத்திலிருந்து
நாங்கள் சற்றே தடுமாறி பார்வையை கீழே திசை திருப்பினோம்.

அதிர்ச்சியில் என்னை உறையச்செய்து விட்டது அங்கே நடந்த
திகில் காட்சி ! மனிதர்கள் யாவரும் வன்முறையில் ஈடுபட்டு ஒருவர்
தலையை மற்றொருவர் சர்வ சாதாரணமாக சீவிக்கொண்டிருன்தனர்.
எங்கும் இரத்த வெள்ளம். நாங்கள் உடனே அங்கிருந்து தப்பித்து விடவே
எண்ணினோம்.ஆனால் கம்பளம் அங்கிருந்து கடைசி தலை சாயும் வரை
அசையவே இல்லை.பயத்தில் பிறகு என்ன நடந்தது என்று முழித்து பார்த்தால்  - அட கனவு ;)

கனவுகள் காண்போம்,
சிவசுப்பிரமணியன் ***

ஞாயிறு, 7 அக்டோபர், 2012

கனவு 2 - நோக்கு வர்மம்

ஒரு இருட்டுச்சிறை முதலில் தெரிகிறது. அது சிறைச்சாலையா இல்லை ஏதோ மந்திரவாதியின் மாய அறையா என்று யோசனைகள் எனக்குள் மட்டும் !
பலகைகள் பல அடுக்கி வைத்திருப்பது காண முடிகிறது .

நானும் என் நண்பர்களும் ஒரு அறையிலும், வாட்டசாட்டமான இளைஞர்கள் சில அறையிலும், முதியவர்கள் சில அறையிலும் பயத்தில் குமுறுவது
செவிகளில் கேட்கிறது.

சற்று நேரம் கழித்து யாரோ நடந்து வரும் ஓசை ஒலிக்கிறது. இதயத்துடிப்பு 
அதிகரிக்க துவங்கிற்று. ஒரு கறுப்பு நிழல் உருவம் கண் முன்னே தெரிகிறது.
அதன் ராட்சத சிரிப்பு யாவரையும் பீதியில் ஆழ்த்தியது. ஆனால் எந்த பதற்றமும் நடுக்கமும் இல்லாமல் எனது அருகிலிருந்த நண்பன் ஒருவன்
தனது கண்களின் அசைவினால் மட்டும் அங்கு நிரம்பியிருந்த பலகைகள் 
ஒவ்வொன்றையும் பறக்க செய்தான். ஒவ்வொரு பலகையும் பறந்து வந்து அந்த நிழல் உருவத்தை பந்தாடியது. சற்று நேரத்தில் அறைக்குள் அடிமைகளாக அடைபட்டிருந்த அனைவரும் தனக்குள் ஏதோ சக்தி புதிதாக 
வந்து விட்டதை உணர்கின்றனர்.

நானும் என் மனதில் புது மாற்றத்தை உணர்கிறேன். எனது பார்வையால் ஒரு பலகையை மெல்ல உயர்த்த முயற்சி செய்கின்றேன்.பலகை உயருவதற்குள் கனவு முடிந்து விட்டது .... :)

பி.கு: இந்த கனவு ஏழாம் அறிவு படம் வெளியாவதற்கு முன்னாலே நான் எழுதி வைத்தது - ஆகையால் அந்த படம் பார்த்த பின்பு தான் இது எனக்கு தோன்றியிருக்கும் என்று வாசகர்கள் என்னிக்கொள்ள கூடாது. இந்த கனவின் தலைப்பு என்னவோ அதே படத்திலிருந்து சுட்டது தான் ;))

செவ்வாய், 2 அக்டோபர், 2012

கனவு 1 - நாட்டுக்குள் சிங்கம்

கவிதை மழையில் இது வரை கவிதைகள் மட்டும் துளி துளியாக பொழிந்து யாவர் மனதையும் குளிர செய்தன என்று நம்புகிறேன். எப்பொழுதும் மழை மட்டும் பொழிந்தால் சுவாரசியம் குறைந்து விடுமே என்று, நான் காணும் அபூர்வ கனவுகளையும் இந்த கவிதை மழையில் ஒரு வானவில் போல் , ஒரு மின்னல் போல் அல்லது ஒரு இடி போல் சேர்த்து கொள்ள விரும்புகிறேன்...

கனவுகளுக்காக ஒரு கனவு மழை ஆரம்பிக்கலாமே என்று நீங்கள் கேட்கலாம் :) - ஆனால் நாம் காணும் கனவுகள் யாவும் நினைவில் தங்குவிதல்லை என்பது யாவரும் அறிந்த உண்மை. அதனால் நான் ஞாபகம் வைத்து எழுதிய சில சிறந்த கனவுகள் மட்டும் இந்த கவிதை மழையில் உலா வரும் .... இந்த கனவுகளை என்னுடைய சிறு கதைகளாகவோ ஒரு பக்க கதைகளாகவோ நீங்கள் நினைத்து கொள்ளலாம் !

" ஒரு சின்ன கிராமம் - எழில் கொஞ்சும் பூஞ்சோலைகளின் நடுவில் அழகாக தென் படுகிறது. ஆனால் கிராமத்தில் வாழும் மக்கள் அனைவரும் பயத்தில் மூழ்கியிருந்தார்கள். வெகு நேரம் அழுகையும் சோகமும் - கிராமம் முழுக்க பரவியிருப்பது தெரிகிறது. இரவு நேரம் நெருங்கி விட்டது... 

கிராம மக்கள் யாவரும் வீட்டினுள் கதவை பூட்டிக்கொண்டு இன்று யார் உயிர் பலியாக போகிறதோ என்று புலம்பி கொண்டனர். ஜன்னல் வழியே நானும் என் பெற்றோர்களும் பார்க்கும் காட்சி தெரிகிறது.திடீர் என்று ஒரு உறுமல் சத்தம் ஒலிக்க துடங்கியது.அங்கு பார்த்தால் ராஜ நடை போட்டுக்கொண்டு ஒரு சிங்கம்! 

அந்த கிராமமே பீதியில் இருப்பதின் காரணம் இந்த சிங்கத்தின் வேட்டை தான் என்று எனக்கு புரிந்தது.எப்படி இந்த சிங்கத்தின் பிடியிலிருந்து ஒரு கிராமத்தையே காப்பாற்றுவது என்று யோசித்து முடிப்பதற்குள் கனவு கலைந்து விட்டது" ...... :)

மீண்டும் அடுத்த கனவில் சந்திப்போம்,
சிவசுப்பிரமணியன் ***