சனி, 29 டிசம்பர், 2012

கவிதை 42 - சில நொடிகள்

நெடு நாள் பழகிய நண்பனுக்காக
ஒரு நொடி காத்திருக்க வில்லை ....
சில நொடிகள் பார்த்த பெண்னுக்காக
ஒரு நாள் உன் விழிகள் ஏன் காத்திருக்கின்றது ***

நெடு நேரம் நிற்கும் முதியவருக்காக
அமர இடம் தர மனமில்லை ....
சில நொடிகள் நின்ற பெண்னுக்காக
உன் கால்கள் ஏன் வலிக்கின்றது ***

நெடுங்காலமாகியும் உன் குரலை நெடுந்தூரம்
உள்ள உன் பெற்றோர்கள் கேட்கவில்லை ....
சில நொடிகள் புன்னகைத்த பெண்னுக்காக
வாழ்நாள் முழுதும் பேச உன் நாவு ஏன் துடிக்கின்றது ***

நெடுஞ்சாலையில் அதிவேகமாக இரு சக்கர 
வாகனத்தை செலுத்தும் பொழுது பதற்றமில்லை ....
சில நொடிகள் பேசலாம் என்ற பெண்னுக்காக 
நடுநிசி வரையில் தூக்கமில்லாமல் உன் இதயம் ஏன் படபடக்கின்றது ***

நெடுந்துயரம் பஞ்சமாக வந்த போதிலும்
வஞ்சமில்லா உன் நெஞ்சம் கலங்கவில்லை 
சில நொடிகள் மௌனகீதம் பாடும் பெண்னுக்காக
கஞ்சமில்லா உன் வாழ்க்கை ஏன் தஞ்சமடைகிறது ***

மறுபடியும் சில நொடிகளுடன் சந்திப்போம்,
சிவசுப்பிரமணியன் ***

ஞாயிறு, 2 டிசம்பர், 2012

கனவு 8 - சிறைச்சாலை

மீண்டும் ஒரு சவாலான பயணம். இதில் நான் மட்டும் தான். தங்க நிற கழுகுகளின் கூடாரம் என்னை வரவேற்கிறது. எனது பார்வை ராட்சத கழுகு முதல் எறும்பின் அளவு கொண்ட கழுகு வரை விரிகிறது.உள்ளங்கையில் அடங்கி விடும் கழுகுகளை எடுக்க முயன்ற பொது அதன் கூர்மையான அலகுகள் என்னை பதம் பார்க்க ஆரம்பித்து விட்டன.வலி தாங்காமல் அதை விட்டு விட்டு தங்க நிற கழுகுகளின் சாம்ராஜ்யத்திடம் விடை பெற்றேன்.

ஆள் நடமாட்டமில்லாத பாழடைந்த வீடு தெரிகிறது.வீட்டுக்குள் மெல்ல நுழைந்தவுடன்  வெள்ளை திரவத்தால் ஒரு மனித சிலையும், கருப்பு திரவத்தால் ஒரு மனித சிலையும் தென் படுகிறது.அருகில் சென்று அந்த சிலைகளை தொட்டவுடன் அவை உயிர் பெற்று என்னை துரத்த ஆரம்பிக்கின்றன.

சிறிய வீடு போல காட்சியளித்த அந்த வீடு பல மடங்கு பெரியதாக உயரவும் நீளவும், எனது ஓட்டம் மறைந்திருந்த அறைகளுக்குள்.பிறகு தான் நான் கவனித்த போது அறை  எங்கும் மனிதர்கள் சுய நினைவில்லாமல் சிறை பிடித்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை உணர்கிறேன்.மிக உயரத்திலிருக்கும் அறை வரை அந்த சிலை மனிதர்கள் என்னை பின் தொடர்ந்தார்கள்.

அங்கே இரு குழாய்களில் தீக்குழம்பு வடிந்து கொண்டிருப்பதை கண்டவுடன் சிலை மனிதர்கள் நின்று விட்டார்கள்.எப்படியோ அவர்களை தீக்குழம்பில் தள்ளி விட்டு அங்கிருந்து தப்பித்தேன்.சிறு வெளிச்சம் தான் ஒவ்வொரு அறைக்குண்டான சாப-விமோசனம் என்று அங்குள்ள கல்வெட்டுகளில் பதிந்துள்ளது.எனது கைபேசியில் உள்ள வெளிச்சத்தை பயன்படுத்தி எல்லா மனிதர்களையும் சிறையிலிருந்து விடுவித்தேன்.


கனவு 7 - பறக்கும் ரயில்

நானும் எனது பள்ளி நண்பர்கள் சிலரும் ஒரு ரயிலில் பயணம் சென்று கொண்டிருகின்றோம்.சில மணி நேரங்களுக்கு பிறகு நான் ரயிலின் ஜன்னல் வழியாக கவனித்த போது அதிர்ச்சி கலந்த ஆச்சரியம்.அந்தரத்தில் ரயில் வேகமாக சென்று கொண்டிருக்கிறது.

வயிற்றுக்குள் பட்டாம் பூச்சி பறக்கும் அனுபவம்.பறக்கும் ரயிலை தரையில் நிற்க்கும் பார்வையாளர்கள் பிரமிப்போடு ரசிப்பதை நாங்கள் யாவரும் ரயிலில் இருந்த படியே பார்த்து மகிழ்கிறோம்.அசையும் கட்டிடங்கள், ஆர்பரிக்கும் விளக்குகள், நகைக்கும் இயந்திர மனிதர்கள், கணிப்பொறி ஊடாடு அமைப்புகள்,கதிர்வீச்சு மூலம் இனைய விளம்பரங்கள் என்று செயற்கை நுண்-அறிவில் சுழலும் உலகத்தை வட்டமிட்டு பறந்தது நாங்கள் அமர்ந்த பறக்கும் ரயில்.

துணைக்கோள் மாய வானொலி மூலம் அடுத்த ரயில் நிலையத்தின் பெயரை எதிரொலித்தது. இனைய விளம்பரங்கள் ஒன்றில் செவ்வாய் - புதன் ஆகிய கிரகங்களுக்கு பயணம் செல்ல வேண்டிய முன் பதிவு தேதியும்,கட்டணமும் அறிவிப்பதை உணர்ந்தேன்.அடுத்த ரயில் நிலையத்தை நெருங்கும் போது பறக்கும் ரயில் மெதுவாக தரை இறங்குகிறது.

மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.இருபத்தைந்தாம் நூற்றாண்டிலும் மக்கள் தொகை குறைந்த பாடில்லை.ஒளியை விட வேகமாக பறக்கும் இந்த ரயில் உலகை சுற்றி வரும் என்று ஒலிபெருக்கியில் அறிவிப்பு.மக்கள் வெள்ளம் ஆரவாரத்தோடு அவரவர் இருக்கையில் அமர்ந்த பின் மீண்டும் மின்னல் வேக ரயில் வானை நோக்கி பறந்தது ...............!

ஞாயிறு, 25 நவம்பர், 2012

கனவு 6 - அதிசய தீவு

சீனப்பெருஞ்சுவர் போல உயரம் கொண்ட, நைல் நதி போல
நீளம் கொண்ட ஒரு பிரம்மாண்ட பாலம் அது. நானும் என் குடும்பமும் , அந்த பாலத்தை கடந்து சென்று அந்த அதிசயத்தீவை பார்த்தே தீர வேண்டும் என்ற ஆவலோடு பிரயாணத்தை துவங்கினோம்.
ஆனால் மிகவும் ஆபத்தான பாலம் அது.

எப்பாடுப்பட்டாவது அந்த பாலத்தை கடந்து விட எண்ணினோம். அந்த அதிசயத்தீவை இதுவரை யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை என்று நான் நினைத்து கொண்டே இருந்தேன். வழி எங்கும் வித - விதமான கற்கள் பாலத்தின் இரு புறத்தையும் அலங்கரித்து வைத்திருக்கிறது. நைல் நதி தூரம் என்றால் எத்தனை நாட்கள் பயணம் செய்திருப்போமோ என்று தெரியவில்லை. விசித்திரமான பாம்புகள் ஆங்காங்கே தொங்கிய படியும்,
ஊர்ந்து செல்வதுமாயிருந்தன. நானும் என் தம்பியும் மிக கவனமாக எந்த பாம்பையும் மிதித்து விடாமல் சென்று கொண்டிருந்தோம்.

எங்களால் மெல்ல மெல்ல தான் ஒவ்வொரு அடியும் எடுத்து வைக்குமாறு இருந்தன. ஏனென்றால் இரண்டடி அந்த பக்கமோ இந்த பக்கமோ சாய்ந்து விட்டோமென்றால் அகல பாதாளம் தான்.பாலத்தின் மேலிருந்து கீழே பார்த்தால் சில சமயம் கடல் அலைகள் தெரிகிறது.சில சமயம் தீக்குழம்பு எரிகிறது.ஒரு வழியாக பாலத்தின் எல்லைக்கு வந்து விட்டோம்.

அங்கே தீவிற்க்கு செல்ல பழனிமலை படிக்கட்டுகள் காத்திருக்கிறது.
சற்று நேரம் அங்கு ஒய்வு எடுக்கவும் கனவு கலைந்தது.தீவை நாங்கள் சந்தித்திருக்கலாம் என்று நீங்கள் ஆவலோடு எதிர்பார்ப்பது எனக்குள் இனி வரும் கனவுகளில் தெரியும் ..................!

கனவு காண்போம்,
சிவசுப்பிரமணியன் ***

ஞாயிறு, 4 நவம்பர், 2012

கனவு 5 - உயிர்

நானும் என் நண்பனும் கடற்க்கரை ஓரம் நடந்து செல்லும் காட்சி ..
பிறகு எங்களுக்குள் ஒரு சவால் எழுகிறது. 
யார் அதிக நேரம் கடலுக்குள் மூச்சு பிடித்து இருப்போம் என்று ?
முதலில் என் நண்பன் கடலுக்குள் செல்கிறான்.வெகு நேரமாகியும் அவனைக்காணவில்லை. பிறகு நானும் ஆழ் கடலில் மூழ்கிறேன்.

 கடலுக்கடியில் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. என் நண்பன் ஆழ்கடலில் உயிர் வாழும் திறனை கைவசப்படுத்தியிருந்தான் என்று முதலில் வியந்தேன்.பிறகு தான் புரிந்தது நானும் பிற கடல் உயிரினங்களைப்போல் மூச்சு விட்டுக்கொண்டிருகின்றேன் என்று !

அங்கேயே வாழ்ந்து விடலாமென்று நினைத்த நாங்கள் சர்வ சாதாரணமாக நீந்தி சென்றோம்.வைர மாளிகை , ஆர் பறிக்கும் வண்ண மீன்கள், திமிங்கலங்கள்,சுறாக்கள் என்று உலா வந்தோம். உல்லாச பயணம் தான்.

இயற்க்கை அன்னை கடலுக்கடியில் அத்துணை பொக்கிஷத்தையும் பாதுக்காப்பாக வைத்திருக்கிறாள் என்றே சொல்லலாம்.ஆனால் செயற்கையாக மனிதன் படைத்த மாபெரும் கப்பல்களும்,படகுகளும், நீர்மூழ்கி கப்பல்களும் கண்ணுக்கு தெரியவில்லை.சில இடங்களில் மூச்சு விட கஷ்டமாக இருந்தது. அப்போதே புரிந்து விட்டது - மனிதன் உருவாக்கும் செயற்கை ரசாயன பொருட்களால் கடலில் வாழும் உயிரினங்களுக்கு எவ்வளுவு ஆபத்து இருக்கின்றது என்பது.

தரையில் ஊர்ந்து செல்லும் எறும்பு,ஆகாயத்தில் பறந்து செல்லும் சிட்டு குருவி, கடலில் வாழும் சிறு மீன்கள் - யாவும் கண்ணுக்கு தெரியாமல் இருக்கலாம் - ஆனால் அவைகள் யாவும் மனிதனை போல் உயிர் வாழும் உயிரினம் தான் என்பதை மறவாமல் இருப்போம் *** 

--சிவசுப்பிரமணியன்...

ஞாயிறு, 14 அக்டோபர், 2012

கனவு 4 - பறக்கும் மனிதன்

முன்னுரை

நாம் காணும் கனவுகள் யாவும் பலித்து விடுமோ? அல்லது நடைமுறையில் நடக்கும் சம்பவங்களுக்கும் கனவுகளுக்கும் தொடர்பு இருந்து கொண்டே இருக்குமா? அதுவும் அதிகாலை கனவுகள் அப்படியே நம் வாழ்க்கையில் பிரதிபலிக்க கூடுமோ? அல்லது ஆழ் மனதில் அவ்வபோது நாம் சந்திக்கும் நபர்கள், காணும் காட்சிகள் பதிந்திருந்து கனவுகளாக தோன்றுகிறதா ?
இப்படி பல கேள்விக்கணைகள் ஒன்று சேர்ந்து கனவுகளை பற்றி ஒரு நீளமான சர்ச்சை உருவாக்குகின்றது !! 

கனவுகளை பற்றி ஆராய்ந்து அதற்க்கு பல மாறுப்பட்ட கருத்துக்களை முக்கோண மன முடிச்சுக்களை அவிழ்த்து அலசி பார்த்த மனோதத்துவ தந்தை - சிக்மண்ட் பிராயிட் (Sigmund Freud). கனவுகளை பற்றி மேலும் ஆழமாக தெரிந்து கொள்ள அவரது கட்டுரைகளும் புத்தகங்களும் நாம் படித்து பார்க்க வேண்டும் !!!

பறக்கும் மனிதன் 

என்ன அதிசயம் ! கனவில் தான் இப்படியெல்லாம் சாதிக்க முடிகிறது. சிறகுகள் இல்லை, விமானத்தில் பயணம் இல்லை,எந்த வித ஊன்றுகோலும் இல்லாமல் நான் உயர உயர பறந்து கொண்டே இருக்கின்றேன்.மேலும் உச்சத்தை அடையும் பொழுது மனதில் திக்கற்ற மகிழ்ச்சி. அப்படியே ஊர் சென்று விட்டு வரலாம், பார்க்காத இடங்களை பார்க்கலாம்,நினைத்த  மாத்திரத்தில் எங்கு வேண்டுமானாலும் பறந்து செல்லும் பாக்கியம், வெளிநாடுகள் செல்ல எந்த வித தடையும் இல்லை. 

பறவைகளுடன் போட்டி போட்டு , அலைக்கதிர்களிடமிருந்து சுதாரித்துக்கொண்டு மேலே மேலே பறக்கின்றேன்.உலக அதிசயங்களை நொடிகளில் சுற்றி பார்த்துவிட்டு திரும்புகின்றேன்.அதுவும் அந்த எகிப்து நாட்டின் மேலே பறந்து செல்லும் போது தங்கமாக மின்னும் கோபுரங்கள் தத்ரூபமாக காட்சியளிக்கின்றது.

வயல் வெளிகள், அருவிகள், செடி-கொடிகள், மலைகள், கடல் அலைகள் என்று இயற்கையை பறந்தவாறே ரசித்து செல்கிறேன். 
பறவைகள் யாவும் வானில் மிதக்கும் தோழர்கள். தரை இறங்க கால்கள் சொன்னாலும் மனம் மறுக்கின்றது.

சனி, 13 அக்டோபர், 2012

கவிதை 41 - தமிழ் கலாச்சாரம்

கரங்கள் தொடுப்பதோ முல்லைச்சரம்,
விழிகள் தேடுதோ மாலைச்சூரியன்,
மனம் பாடுதோ திருவெண்பா,
மறக்க முடியுமா பண்டைய கலாச்சாரம் !

கறுப்பு பலகையில் வெள்ளை குச்சி பதிக்கிறது உயிர் எழுத்து,
வெள்ளை மனதும் கறுப்பு கண்களும் எதிர்பார்க்கிறது மெய் எழுத்து !

காத்திருக்கும் விழிகளில் மௌன புன்னகை,
எதிர்பார்த்திருக்கும் மனதினில் மௌன தேடல் !

நகரத்து pizza வும் burger உம் போட்டி போட்டு
மனிதன் நாவை அடக்க முயல்கிறது -
கிராமத்து இளநீரும் பதநீரும் சுவை தர மறுக்கின்றனவோ ?
அல்ல மனிதன் மறக்கின்றானோ ?

தொடுத்து வச்ச முல்லைச்சரம் வாடும் முன்னே,
ஆக்கி வச்ச மீன்குழம்பு ஆறும் முன்னே,
சந்தைக்கு போன மச்சான் திரும்பிவிடுவாரோ ?

ஆத்திசுவடி படித்து கல்வி கற்கும் சின்ன பெண்,
புல்லாங்குழல் பிடித்து இசை பயிலும் சின்ன பெண்,
அடுப்பில் தீ மூட்டும் கலையை இன்னும் மறக்கவில்லை ...

பல்லாங்குழிக்கு சோழி கிடைக்கவில்லை குமரிக்கு,
ஆனால் புறாக்கள் தொந்தரவு செய்யவில்லை,
சோழிக்கு பதிலாக நெல் மணிகளை உபயோகித்தபோது ....

 புகைப்படமோ ஓவியமோ என்று வியக்க வைக்கும்
 நிலா மாடங்களும்,கலைசிற்ப தூண்களும் !

 நகரத்திற்கு வந்த கிராமத்து பெண்கள் கோலம் மாறியிருக்கலாம்
ஆனால் கிராமத்து முற்றத்தில் போடும் கோலம் இன்னும் மாறவில்லை ...

பொறுமை - அடக்கம் - பணிவு -
மரியாதை - நிம்மதி -மனதில் நிறைவு
-- மொத்தமாக காட்டி விடுகிறது மங்கையின் மலர்ந்த முகம் !

கீரை பொறியலும் வத்தக்குழம்பும் சமைக்கும் போதே,
அந்த தெரு திண்ணையில் வீற்றிருக்கும்,
கனவான்கள் மோப்பம் பிடித்திருப்பார்கள் ...

சிறு பானையில் கூட கலை வண்ணம்,
நீடிக்காதோ பொற்காலம் எனும் எண்ணம்...

பாசமுள்ள மனையாளின் நேச பார்வையும்,
ஒரு பித்தளை செம்பு தண்ணீரும்,
ஒரு சட்டி கேழ்வரகு கஞ்சியும்,
ஒற்றுமையாக காத்திருக்கின்றது ....
வயலுக்கு சென்ற உழவனுக்காக !

ஓவிய கண்காட்சியில் அழகிய ஓவியங்கள்,
வெளிச்சம் போட்டு காட்டும் தமிழ் கலாச்சாரம் அற்புதம்,
தூரிகை பிடித்த கைகளுக்கு தங்க காப்போ, 
மலர் செண்டோ தேவையில்லை,
மக்கள் இன்றும் கலாச்சாரத்தை மறவாமல் 
இருந்தால் மட்டும் போதும் !

--சிவசுப்பிரமணியன் ***

புதன், 10 அக்டோபர், 2012

கனவு 3 - நடுங்க வைக்கும் அதிசயம்

நானும் என் நண்பர்களும் சுற்றுலா செல்ல எங்களை தயார் படுத்தி
கொண்டிருந்தோம். கப்பலில் பயணம் துவங்கி நாட்டின் எல்லையை
கடந்து விடுகிறோம். பிறகு நாங்கள் உள்ளூர் ரயிலில் பயணத்தை தொடர்கிறோம்.ஒரு வழியாக சுற்றுலா தலம் ஆன அந்த அழகிய தீவுக்கு வந்து விட்டோம்.

பிறகு நாங்கள் கண்ட காட்சிகள் யாவும் விநோதமாக இருந்தது.
எந்த மொழியில் வேண்டுமானாலும் பாடும் குயில் !
எந்த கேள்வியை கேட்டாலும் அதற்க்கு விடை தருகிறது பேசும் மரம் !
தீவை முழுதும் சுற்றி காட்ட பறக்கும் கம்பளங்கள் என்று ஏகப்பட்ட அதிசயங்கள் !

நானும் எனது நண்பர்களும் ஒரு கம்பளத்தில் ஏறி விட்டோம்.
சொர்க்கமாகதான் இந்த தீவு இருந்திருக்குமோ என்று நான் சிந்தித்து
கொண்டே பறக்கும் கம்பளத்தின் கீழே இருந்த கோபுரங்கள்,
மாளிகைகள் அனைத்தையும் ரசித்து வந்தேன். ஆனால் திடீரென்று
அந்த பறக்கும் கம்பளம் ஓர் இடத்தில் நின்று விட்டது. அந்தரத்திலிருந்து
நாங்கள் சற்றே தடுமாறி பார்வையை கீழே திசை திருப்பினோம்.

அதிர்ச்சியில் என்னை உறையச்செய்து விட்டது அங்கே நடந்த
திகில் காட்சி ! மனிதர்கள் யாவரும் வன்முறையில் ஈடுபட்டு ஒருவர்
தலையை மற்றொருவர் சர்வ சாதாரணமாக சீவிக்கொண்டிருன்தனர்.
எங்கும் இரத்த வெள்ளம். நாங்கள் உடனே அங்கிருந்து தப்பித்து விடவே
எண்ணினோம்.ஆனால் கம்பளம் அங்கிருந்து கடைசி தலை சாயும் வரை
அசையவே இல்லை.பயத்தில் பிறகு என்ன நடந்தது என்று முழித்து பார்த்தால்  - அட கனவு ;)

கனவுகள் காண்போம்,
சிவசுப்பிரமணியன் ***

ஞாயிறு, 7 அக்டோபர், 2012

கனவு 2 - நோக்கு வர்மம்

ஒரு இருட்டுச்சிறை முதலில் தெரிகிறது. அது சிறைச்சாலையா இல்லை ஏதோ மந்திரவாதியின் மாய அறையா என்று யோசனைகள் எனக்குள் மட்டும் !
பலகைகள் பல அடுக்கி வைத்திருப்பது காண முடிகிறது .

நானும் என் நண்பர்களும் ஒரு அறையிலும், வாட்டசாட்டமான இளைஞர்கள் சில அறையிலும், முதியவர்கள் சில அறையிலும் பயத்தில் குமுறுவது
செவிகளில் கேட்கிறது.

சற்று நேரம் கழித்து யாரோ நடந்து வரும் ஓசை ஒலிக்கிறது. இதயத்துடிப்பு 
அதிகரிக்க துவங்கிற்று. ஒரு கறுப்பு நிழல் உருவம் கண் முன்னே தெரிகிறது.
அதன் ராட்சத சிரிப்பு யாவரையும் பீதியில் ஆழ்த்தியது. ஆனால் எந்த பதற்றமும் நடுக்கமும் இல்லாமல் எனது அருகிலிருந்த நண்பன் ஒருவன்
தனது கண்களின் அசைவினால் மட்டும் அங்கு நிரம்பியிருந்த பலகைகள் 
ஒவ்வொன்றையும் பறக்க செய்தான். ஒவ்வொரு பலகையும் பறந்து வந்து அந்த நிழல் உருவத்தை பந்தாடியது. சற்று நேரத்தில் அறைக்குள் அடிமைகளாக அடைபட்டிருந்த அனைவரும் தனக்குள் ஏதோ சக்தி புதிதாக 
வந்து விட்டதை உணர்கின்றனர்.

நானும் என் மனதில் புது மாற்றத்தை உணர்கிறேன். எனது பார்வையால் ஒரு பலகையை மெல்ல உயர்த்த முயற்சி செய்கின்றேன்.பலகை உயருவதற்குள் கனவு முடிந்து விட்டது .... :)

பி.கு: இந்த கனவு ஏழாம் அறிவு படம் வெளியாவதற்கு முன்னாலே நான் எழுதி வைத்தது - ஆகையால் அந்த படம் பார்த்த பின்பு தான் இது எனக்கு தோன்றியிருக்கும் என்று வாசகர்கள் என்னிக்கொள்ள கூடாது. இந்த கனவின் தலைப்பு என்னவோ அதே படத்திலிருந்து சுட்டது தான் ;))

செவ்வாய், 2 அக்டோபர், 2012

கனவு 1 - நாட்டுக்குள் சிங்கம்

கவிதை மழையில் இது வரை கவிதைகள் மட்டும் துளி துளியாக பொழிந்து யாவர் மனதையும் குளிர செய்தன என்று நம்புகிறேன். எப்பொழுதும் மழை மட்டும் பொழிந்தால் சுவாரசியம் குறைந்து விடுமே என்று, நான் காணும் அபூர்வ கனவுகளையும் இந்த கவிதை மழையில் ஒரு வானவில் போல் , ஒரு மின்னல் போல் அல்லது ஒரு இடி போல் சேர்த்து கொள்ள விரும்புகிறேன்...

கனவுகளுக்காக ஒரு கனவு மழை ஆரம்பிக்கலாமே என்று நீங்கள் கேட்கலாம் :) - ஆனால் நாம் காணும் கனவுகள் யாவும் நினைவில் தங்குவிதல்லை என்பது யாவரும் அறிந்த உண்மை. அதனால் நான் ஞாபகம் வைத்து எழுதிய சில சிறந்த கனவுகள் மட்டும் இந்த கவிதை மழையில் உலா வரும் .... இந்த கனவுகளை என்னுடைய சிறு கதைகளாகவோ ஒரு பக்க கதைகளாகவோ நீங்கள் நினைத்து கொள்ளலாம் !

" ஒரு சின்ன கிராமம் - எழில் கொஞ்சும் பூஞ்சோலைகளின் நடுவில் அழகாக தென் படுகிறது. ஆனால் கிராமத்தில் வாழும் மக்கள் அனைவரும் பயத்தில் மூழ்கியிருந்தார்கள். வெகு நேரம் அழுகையும் சோகமும் - கிராமம் முழுக்க பரவியிருப்பது தெரிகிறது. இரவு நேரம் நெருங்கி விட்டது... 

கிராம மக்கள் யாவரும் வீட்டினுள் கதவை பூட்டிக்கொண்டு இன்று யார் உயிர் பலியாக போகிறதோ என்று புலம்பி கொண்டனர். ஜன்னல் வழியே நானும் என் பெற்றோர்களும் பார்க்கும் காட்சி தெரிகிறது.திடீர் என்று ஒரு உறுமல் சத்தம் ஒலிக்க துடங்கியது.அங்கு பார்த்தால் ராஜ நடை போட்டுக்கொண்டு ஒரு சிங்கம்! 

அந்த கிராமமே பீதியில் இருப்பதின் காரணம் இந்த சிங்கத்தின் வேட்டை தான் என்று எனக்கு புரிந்தது.எப்படி இந்த சிங்கத்தின் பிடியிலிருந்து ஒரு கிராமத்தையே காப்பாற்றுவது என்று யோசித்து முடிப்பதற்குள் கனவு கலைந்து விட்டது" ...... :)

மீண்டும் அடுத்த கனவில் சந்திப்போம்,
சிவசுப்பிரமணியன் ***

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

கவிதை 40 - ரசனை

வானில் சிரிக்கும் நிலவை
ரசிக்க மறந்து விட்டேன்,
அருகிலிருக்கும் நிலவை பார்த்து  ....

மலை உச்சியிலிருந்து விழும் அருவியை
ரசிக்க மறந்து விட்டேன்,
அருவியாய் கொட்டும் உன் பேச்சை கேட்டு ....

நிம்மதி தரும் இயற்கையின் மௌனத்தை
ரசிக்க மறந்து விட்டேன்,
எழில் கொஞ்சும் உன் மௌனப்புன்னகையால் ....

ஆர்பரிக்கும் நட்சத்திரங்களின் அழகை
ரசிக்க மறந்து விட்டேன்,
அழகான  ஓவியமாக நீ காட்சி தருகையில் ....

மெல்ல வருடும் தென்றலின் தீண்டலை
ரசிக்க மறந்து விட்டேன்,
அந்த மின்மினி பூச்சிகளை நீ துரத்தும் பொழுது ....

மெய் சிலிர்க்கவைக்கும் வெள்ளி மலர்களை
ரசிக்க மறந்து விட்டேன்,
சந்தோஷத்தில் உன் முகம் மலர்ந்த போது .....!

---சிவசுப்பிரமணியன் ***

புதன், 15 ஆகஸ்ட், 2012

கவிதை 39 - கற்பனை

நிலவு வரை மேகங்கள் 
ஒவ்வொன்றும் படிக்கட்டுகளாக,

நெடு நெடுவென வளர்ந்து நிற்கும்  தென்னை மரங்கள்
ஒவ்வொன்றும் கூட கோபுரங்களாக,

காற்றோடு கலந்துரையாடும் பனை மரங்கள்
ஒவ்வொன்றும் காத்தாடிகளாக,

வானத்தில் சிறகடிக்கும் வண்ண பறவைகள்
ஒவ்வொன்றும் விமானங்களாக,

ஆழ்கடலில் பதுங்கியிருக்கும் திமிங்கலங்கள்
ஒவ்வொன்றும் நீர்மூழ்கி கப்பல்களாக,

கொடுங்காட்டில் பாய்ந்தோடும் மிருகங்கள்
ஒவ்வொன்றும் ரயில் வண்டிகளாக,

எட்டாத உயரம் கொண்ட மாமலைகள்
ஒவ்வொன்றும் பளிங்கு மாளிகைகளாக,

புதியதோர் இயற்க்கை உலகம் - கனவு காணும்
பொழுதே என்ன அற்புதம் *****

-- சிவசுப்பிரமணியன்

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

கவிதை 38 - மாற்றி யோசி

புது மொழி ஒன்றை கற்றுக்கொள்,அதை
உன் பொழுதுப்போக்காக மாற்றிக்கொள் !

தினம் ஒரு திருவிழா கொண்டாடு,அது
உன் மன உளைச்சல்களை அழித்திடும் வேரோடு !

எழு மணி நேர தூக்கம் ஒரு பக்கம், அரை மணி
நேர உடற்ப்பயிற்சி மறு பக்கம் - மறந்து விடாதே !

பெற்றோர்களோடு மனம் விட்டு அரட்டையடி,
நண்பர்களோடு பகிர்ந்திடு நகைச்சுவைக்கடி !

நல் நூல்களில் கிடைக்கும் அறிவுரைகளை பின்பற்று,
தன்னம்பிக்கை தான் என்றும் உற்சாக ஊற்று !

துக்கம் வந்து சூழ்ந்து கொண்டால் மனம் விட்டு அழுது விடு,
உல்லாசம் உச்சியை அடைந்து விட்டால்,
வெட்கத்தை விட்டு ஆட்டம் போடு !

கற்பனைகளுக்கும் கனவுகளுக்கும் தடை போடாதே,
ஒரு நொடிக்குள் முடியும் விஷயத்தை தள்ளி போடாதே !

பிறர் சிறு முன்னேற்றம்மடைந்தால் கூட பொறாமை படாமல்
மென்மேலும் வளர்ச்சி பெற பாராட்டு,

அவசர உலகில் ஒய்வு எடுக்க மனம் வேண்டினால்
பாசமுள்ள அன்னை மடி தனில் தாலாட்டு !

புதன், 8 ஆகஸ்ட், 2012

கவிதை 37 -பரிசு

விளையாட்டு போட்டியில் ஏழை மாணவனுக்கு
கிடைத்தது முதல் பரிசு,
பெருமையுடன் பரிசுக்கோப்பையை எடுத்துச்,
சென்றான் வீட்டுக்கு,
உற்சாகமும் சந்தோஷமும் சில நொடிகளில்
கண்ணீர் துளிகளாக  மாறின,
பாராட்டு கிடைக்க வேண்டிய பிஞ்சு
உள்ளத்தில் சோகம் நிறைந்தது,
படிச்சு கிழிச்சதும் பதக்கம் வாங்கினதும் போதும்
என்று அதட்டினார் தகப்பன்,
மெளனமாக ஆறுதல் அளித்தாள் வறுமையின்
நிலைமையை புரிந்த அன்னை,
எத்தனை பரிசுகள் வாங்கினாலும் அத்தனையும்
அந்த ஏழை வீட்டில் தங்காமல் மார்வாடி
கடைகளில் அழகு பொருட்களாக ஜொலித்தது .....!

காத்திருந்த மணமகளுக்கு கடைசியாக
ஒரு நல்ல வரன் அமைந்தது,
எப்பாடுப்பட்டாவது கல்யாணத்தை முடித்து
விட துடித்தார்கள் பெற்றோர்,
கல்யாண மேடை வரை கச்சேரி
கலை கட்டி விட்டது,
அமர்க்களமாக வாழ்க்கையை துவங்கியிருந்த
மணமகள் அதிர்ச்சி அடைந்தாள்,
வரதட்சணை தொகை குறைந்து விட்டதென
மணமகன் குடும்பத்தினர் விடைபெற்றனர்,
இப்பொழுதும் பல குடும்பங்களில் வரதட்சணை
தான் கல்யாணப்பரிசு .....!

கஷ்டப்பட்டு படித்து முடித்து மாநிலத்தில்
முதலாவது இடத்தை பிடித்தான்,
வேலை கிடைப்பதற்க்குண்டான அனைத்து
தேர்வுகளிலும் வெற்றி பெற்றான்,
முடிவை ஆவலுடன் எதிர்பார்த்தவனுக்கு
ஏமாற்றம் தான் மிஞ்சியது,
உழைப்புக்கும் திறமைக்கும் கிடைத்த
பரிசை சிபாரிசு மறைத்து விட்டது ...!

ஒரு வேளை உணவுக்கு கையேந்தும் சிறுவர்களின்
விலாசம் ஆரம்பிக்குமிடம் குப்பைத்தொட்டி,
மாற்று உடை கூட இல்லாமல் தவிக்கும் அவர்களுக்கு
கல்விக்கூடங்கள் அலங்கார பொருட்காட்சி,
கள்ளம் கபடமில்லாத அந்த பிஞ்சு நெஞ்சங்களின்
எதிர்கால கனவுகளுக்கு யார் வழிக்காட்டி ?
ஆதரவின்றி துடிக்கும் இந்த இளம் சமுதாயதிற்கு
என்று கிடைக்கும் பிறந்த நாள் பரிசு .....!

-- சிவசுப்பிரமணியன்

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

கவிதை 36 - இயற்க்கை தமிழ்

சில்லென்று அருவி தாளம் போட,
புல்லாங்குழல் இசை மெல்ல ஒலிக்க,
ஜில்லென்று காற்று நடனம் ஆட,
பல்லாங்குழி ஓசை துணை கொடுக்க,
சில் வண்டுகள் பூக்களோடு ரீங்காரமிட,
சிட்டுக்குருவிகளின் சலசலப்பு சத்தம் கேட்க,
கயல்விழி மான்கள் துள்ளி குதிக்க,
பட்டாம்பூச்சி கூட்டம் வட்டம் போட,
தேன்மொழி தமிழில் திருவாய் மலர்ந்திடுவாய் ***

தடதடவென மேகங்கள் இடம் மாற,
படபடவென பச்சைக்கிளிகள் பறந்தோட,
மளமளவென மரங்கள் தலையாட்ட,
பளபளவென புல்வெளிகள் புதிர்போட,
விறுவிறுவென மழைத்துளிகள் மன்னைதொட,
சடுகுடுவென மலைகள் மோதி விளையாட,
கரகரவென கடல் மீன்கள் நீச்சலடிக்க,
இயற்க்கைத்தமிழை ரசித்து மகிழ்ந்திடுவாய் ***

-- சிவசுப்பிரமணியன்

சனி, 28 ஜூலை, 2012

கவிதை 35 - பக்கம் பக்கமாக

பக்கம் பக்கமாக நான் உன்னுடன் பேச நினைத்தாலும்,
உன் பக்கம் என் விழிகள் சென்ற போது முந்தியது மௌனம் ***

பக்கம் பக்கமாக நான் உனக்கு மடல் எழுத நினைத்தாலும்,
உன் பக்கம் அனுப்பும் போது வார்த்தைகள் இல்லாத கடிதம் ***

பக்கம் பக்கமாக நான் ஓவியம் வரைய நினைத்தாலும்,
உன் பக்கம் எட்டியது சுவர் இல்லாத சித்திரம் ***

பக்கம் பக்கமாக நான் சிற்பம் செதுக்க நினைத்தாலும்,
உன் பக்கம் வந்து சேர்ந்தது கண்ணுக்கு தெரியாத கலைநுட்பம் ***

பக்கம் பக்கமாக நான் பாடல் இசைக்க நினைத்தாலும்,
உன் பக்கம் வந்து வாசிக்கும் போது மௌன ராகம் ***

பக்கம் பக்கமாக நான் கவிதை படைக்க நினைத்தாலும்,
உன் பக்கம் விண்ணப்பிக்க கூட இல்லை ஒரு ஹைக்கூ ***

பக்கம் பக்கமாக நான் படங்கள் இயக்க நினைத்தாலும்,
உன் பக்கம் நானே இயக்கமில்லாத இயந்திரம் ***

பக்கம் பக்கமாக நான் கதைகள் சொல்ல நினைத்தாலும்,
உன் பக்கம் வந்து நின்ற போது ஸ்தம்பித்து விடுகிறது கதைக்களம் ***

பக்கம் பக்கமாக நான் இப்படியே வரிகளை அடுக்கி கொண்டே,
சிந்தனைகளை சங்கிலிகளால் பிணைத்து கொண்டே,
போக நினைத்தாலும் ---

உன் பக்கம் .

"உன் பக்கம்" --- என்று தட்டச்சு தப்பாமல் அடித்த அடுத்த நொடி
விழுந்தது ஒரு பெரிய முற்றுப்புள்ளி ***

இப்படிக்கு,
சிவசுப்பிரமணியன் ***

வியாழன், 26 ஜூலை, 2012

கவிதை 34 - சுனாமி காவியம்

கடல் அலைகள் சுனாமி என்ற உருவெடுத்து பிஞ்சு
உள்ளங்களின் கனவை கலைத்தன !

இயற்கையின் சீற்றத்தால் சிசுவை இழந்த தாயின்
கண்களில் கண்ணீர் கரைந்தன !

ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சுனாமி மனிதனின்
எதிர்கால நினைவுகளை சிதைத்தன !

ராட்சத அலைகளின் தோற்றத்தால் பதுங்கியிருந்த
எத்தனையோ கிராமங்கள் அழிந்தன !

கடல் தான் நமக்கு வாழ்க்கை என்று நம்பியிருந்த
மீனவர்களின் எண்ணங்கள் புதைந்தன !

சற்றும் எதிர்பாராத இந்த மின்னல் வேக அலைகள்
நொடியில் உயிர்களை பலி வாங்கின !

உலகின் அமைதியை நிமிடத்தில் சிதற வைத்த
சுனாமியால் சோகம் தான் மிஞ்சின !

ஏழைகளின் நிம்மதியை தொலைத்த ஆக்ரோஷ அலைகள்
துன்பத்தைத்தான் அள்ளித்தந்தன !

சொந்தங்களை இழந்து தவிக்கும் குடும்பங்களின் கதறல்
சத்தம் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன !

மீண்டும் சுனாமி வராமல் இருக்க ஆண்டவனை வணங்கி
கோடி இதயங்கள் பிரார்த்தனை செய்கின்றன !

முடியட்டும் இந்த சுனாமி காவியம் ;
மலரட்டும் புது உலகம்;
தொடரட்டும் புது யுகம் !!!

--சிவசுப்பிரமணியன் ***

செவ்வாய், 24 ஜூலை, 2012

கவிதை 33 - கலியுக காதல்

காயப்படுத்தும் முள்ளும் அதன் மேல் சிரிக்கும் மலரும்,
சேர்ந்த கலவை தான் காதல் ***

ஓளி கொடுக்கும் ஜோதியும் அதன் கீழ் அழுது வடியும்
மெழுகுவர்த்தியும் சேர்ந்தால் தான் காதல் ***

வானத்தில் ஜொலிக்கும் நிலவும் அதன் அருகே கண்
சிமிட்டும் நட்சத்திரங்களும் சேர்ந்தால் காதல் ***

காவியங்கள் பல உருவாக்கி வரலாற்றில் இடம்
பிடித்து விட்டது இந்த தூய்மையான காதல் ***

யுகம் யுகமாய் வித விதமாய் அவதாரங்கள் பல
எடுத்து விட்டது இந்த முரட்டு காதல் ***

வயது-வரம்பு பார்க்காமல் , நேரம்-காலம் பார்க்காமல்,
வாஸ்து-சாஸ்திரம் பார்க்காமல் , ஜாதி-சம்பிரதாயம் பார்க்காமல்,
வளர்ந்து கொண்டே போகிறது காதல் ***

இந்த மூன்றெழுத்து சொல்லுக்கு முடிவு தான் என்ன ?

விடுகதையா இல்லை தொடர்கதையா என்று மனதை
வாட்டி வதைப்பது ஏன் ?

இந்த குழப்பமான கேள்விகளுக்கு தீர்வு காண்பது எப்படி?

மனிதனை பைத்தியம் ஆக்குவதும் காதல் தான் !
தற்கொலைக்கு தூண்டுவதும் காதல் தான் !

அவரவர் பயன்படுத்தும் முறையில் தான் தற்போது,
சுழல்கிறது கலியுக காதல் *****

--- சிவசுப்பிரமணியன்

ஞாயிறு, 22 ஜூலை, 2012

கவிதை 32 - காதல் வலி

* பல்வேறு கோணங்களில் , பல்லாயிரம் ஆண்டுகளாக
   புது புது அர்த்தங்களுடன் கோடிக்கணக்கான
   இதயங்களுள் நுழைந்து விடுகிறது காதல் !

* கருணை குணமோ மகத்தான காதலுக்கு உண்டு,
   ஆனால் கல்லறை ஏன் அழுகிறது காதலர்கள்
    ஜோடி சேர்ந்தும் சேராமலும் வருவதை கண்டு ?

* காதல் தோல்வி கொடுக்கும் வலியில்,
  ஆண்கள் சிலர் தாடி வளர்ப்பதும்,
  பெண்கள் சிலர் தற்கொலை செய்து கொள்வதும்,
  வேடிக்கை அல்ல வாடிக்கை !!!

* புறாக்களை காதலுக்காக தூது அனுப்பிய
   அந்த காலம் மலையேறிவிட்ட பிறகும்,
   மின்னஞ்சல்கள் வழி இந்த காலக்காதல்,
   கல்யாணத்தில் கனிந்து விவாகரத்து வரை
   போன பிறகும், காதலுக்காக உயிரைத்தியாகம் செய்யும்
   சோகம் மட்டும் இன்னும் தொடர்கிறதே ......!

* சில காதல் துயரங்களோ சரித்திர வரலாறு ;
   பல காதல் பயணங்களோ விசித்திர தகறாறு !!!!

சனி, 21 ஜூலை, 2012

கவிதை 31 - மறந்து போனது

நாகரீக சகவாசம் அதிகரித்ததால் -
மறந்து போனது கிராமத்து வாசம் !

நெருக்கடி பயணங்கள் தொடர்ந்ததால் -
மறந்து போனது அரும்புகளின் குறும்புகள் !

நவீன கட்டிடங்கள் பல அமைந்ததால் -
மறந்து போனது இயற்க்கை அழகு !
'
ஜாதிகள் எண்ணிக்கை பெருகியதால் -
மறந்து போனது மனித ஒற்றுமை !

பழக்க வழக்கங்கள் மாறி வருவதால் -
மறந்து போனது கண்ணிய கலாச்சாரம் !

சுயநலமும் அலட்சியமும் ஆக்கிரமிப்பதால் -
மறந்து போனது சமுதாய அக்கறை !

ஊழலும் அநியாயமும் தலைதூக்கியதால்
மறந்து போனது சுதந்திர புரட்சி !

கலவரமும் தீவிரவாதமும் சகஜமானதால்
மறந்து போனது மன அமைதி !

இனிமேலாவது மறக்காமல் இருப்போம்,

******சிவசுப்பிரமணியன் *****

ஞாயிறு, 1 ஜூலை, 2012

கவிதை 30 - சிநேகிதனே

உதவி என்ற வார்த்தைக்கு கட்டுப்பட்டு,
உழைப்பு என்ற வார்த்தைக்கு அர்த்தம் கொடுத்து,
உண்மை என்ற வார்த்தையோடு ஊக்கமளிக்கும்
ஆருயிர் நண்பனே,
உன்னை உயர்ந்த மனிதன் என்றேன்,
உருவத்தில் அல்ல, உள்ளத்தில் ........!


உற்சாகமாய் உதயமாகும் சூரியன் போல,
உல்லாசமாய் உச்சத்தில் மின்னும் நட்சத்திரம் போல,
உரிமையோடு என்றும் உணர்ச்சிகளை உருவாக்கும்
என் உயிர் தோழனே,
உன்னை உயரும் சிகரம் என்றேன்,
உன்னதமான உறவிலும், உறுதியான நட்பிலும் ......!


உத்தரவு போடாமல் நீ உதிரும் புன்னகை,
உள்ளடக்கத்தோடு உருகவைக்கும் உன் உரையாடல்,
உடன்பிறப்பை போல் உலா வந்து மகிழ்ச்சி ஊட்டும்
என் பிரியமான சிநேகிதனே,
உன்னை உத்தம சாதனையாளர் என்றேன்,
உற்றாருக்கு உதாரணமாகவும், என்றும் உறுதுணையாகவும் ......!


உன் சாமர்த்திய பேச்சுக்கு கிடைக்கும் உபயோகமுள்ள உத்தியோகம்,
உன் அசாத்திய துணிச்சலுக்கு ஊகித்த தெல்லாம் கைகூடும்,
உணவை மட்டுமல்லாமல் உதிரத்தைக்கூட நன்கொடையளிக்கும்
என் உயிர் காப்பான் தோழனே,
உன்னை உலகமே போற்றபோகும் மாமேதை என்றேன்,
உச்சரிக்கும் சொல்லிலும், உஷாரான செயலிலும் .......!


உடனடி தீர்வுகள் கொடுத்தாயே என் மன உளைச்சல்களுக்கு,
உரிய ஆறுதல் அளித்தாயே என் உடைந்து போன மனதிற்கு,
உகந்த சிந்தனைகளை பிறருக்கு உற்பத்தி செய்து கொடுக்கும்
என் திறமையான நண்பனே,
உன்னை உபகாரம் செய்யும் உளவாளி என்றேன்,
ஊருக்குள் உளவு பார்பதற்க்கல்ல, நட்பை துப்பறிவதில் ........!


உள்ளுக்குள் உறுத்தலும் உதறலும் ஊற்றெடுத்தாலும்,
உடலுக்கு ஊடலில்லாமல் தெம்பூட்டுவது நம் நட்பு .....!


உண்ணாமல் உறங்காமல் உபவாசமிருந்தாலும் எதிரிகளுக்குக்கூட,
உபசாரம் செய்து கொடுக்கும் உதாரத்தன்மை தான் நம் நட்பு ......!


உஷ்ணத்தைக்கூட உறையச்செய்து விடும் நம் நட்பு ....!
உதடுகள் உளறாமல் உரத்த குரலில் உக்கிரமாக
உபந்நியாசம் செய்து காட்டுவதே நம் நட்பு ........!


உள்ளன்போடு எந்த வித உத்தேசமும் இல்லாமல் ஊடுருவ
முடியாத உருக்கமான ஈர்ப்பு சக்தி தான் நம் நட்பு ........!


ஊழியர்கள் ஊழல் செய்யும் போது ஊமையாக இல்லாமல்
சமுதாயதிற்கு எடுத்துறைக்கும் உத்திரவாதம் தான் நம் நட்பு *****


நட்பே,
உனக்காக எல்லாம் உனக்காக,
உதவும் கரங்கள் யாவும் உன்னாலே உன்னாலே *******


*********************************************************************************
நட்புடன்,
சிவசுப்பிரமணியன் *********************************************************************************

வியாழன், 28 ஜூன், 2012

கவிதை 29 - காதல் என்பது ???

காதல் என்பது - காத்திருக்கும் மோதல் :)
காதல் என்பது - காலத்தின் தூண்டுதல் :)
காதல் என்பது - காயமடைந்த மனதிற்க்கு ஆறுதல் :)


நிலவின் ஒளியை பகிர்ந்து கொள்ள தோன்றும்
அன்பு தான் காதல் ...
உலகத்தை தன் காலடியில் சரண் அடைய செய்யும்
பண்பு தான் காதல் ...
கனவுகளும் ஆசைகளும் நிறைந்த அதிசயமான
ஊர்வலம் தான் காதல் ...
இரு கண்கள் சந்திக்கும் போது உள்ளத்தில்
உருவாகும் ஏக்கம் தான் காதல் ... 
இரு கைகளைக்கொண்டு தீபச்சுடரை காக்கும்
உணர்வு தான் காதல் ...
துன்பத்தை இன்பமாக்க உதவும் பொறுமையின்
சிகரம் தான் காதல் ...
சோகத்தை சந்தோஷமாக்க உதவும் புன்னகையின்
கோபுரம் தான் காதல் ...
என்றென்றும் காலத்தால் அழிக்க முடியாத
சரித்திரமாகவும் காவியமாகவும் தொடரட்டும் இந்த காதல் *****

திங்கள், 25 ஜூன், 2012

கவிதை 28 - நண்பர்கள்

தவறான பாதையில் வாழ்க்கை பயணம் தொடரும் போது,
நண்பர்கள் அதை சுட்டி காட்டி அறிவுரை சொல்வது அற்புதம் !

வெற்றி துடிப்போடு புகழின் உச்சிக்கு செல்லும் போது,
நண்பர்கள் ஓடிவந்து மனப்பூர்வமாக உற்சாகப்படுத்துவது ஆனந்தம் !

தோல்வி தவிப்போடு வாழ்வின் வீழ்ச்சிக்கு தடம் மாறும்போது,
நண்பர்கள் தடுமாறாமல் தோள் கொடுத்து சுமையை தாங்குவது அபூர்வம் !

தொடர் துயரங்களால் குழப்பமான சூழ்நிலை நிலவும் போது,
நண்பர்கள் தந்திரங்களை தடாலடியாக கோர்த்து கொடுப்பது அட்டகாசம் !

நிம்மதி கிடைக்காமல் அழுத்தமான மனநிலை உருவாகும் போது,
நண்பர்கள் தயங்காமல் அக்கறையோடு ஆறுதலளிப்பது அமர்க்களம் !

ஆலோசனைகளை ஆரவாரத்தோடு அலசுவது அரட்டை அரங்கம்,
மறைந்து கிடக்கும் பாச புதையலை அடையாளம் காட்டுவது நட்புச்சுரங்கம் !

ஆழ்கடலில் மூழ்கியிருப்பதோ சிப்பிக்குள் முத்து,
ஆழ்மனதில் சிக்கியிருப்பதோ நட்பு எனும் சொத்து !

பல்கலைக்கழகம் கற்று தருவதோ நல்ல பழக்கம்,
ரகசியங்களை ரசனையோடு பகிர்ந்து கொள்வதோ நட்பின் வழக்கம் !

கருத்துக்களை புதுமையோடு பட்டியல் போடுவது பட்டிமன்றம்,
வாழ்நாள் முழுதும் துணை நிற்ப்பது நட்புக்கான மன்றம் !

திருவிழா கூட்டம் என்றால் பார்க்கலாம் ஊர்வலம்,
நண்பர்க்கூட்டம் என்றால் அசரவைப்பது நட்பின் பலம் !!!!

ஞாயிறு, 24 ஜூன், 2012

கவிதை 27 - சாதனை படிகள்


அமைதியின் இருப்பிடத்தை தேடி செல்வோம்,
நாம் போகும் பாதையில் முட்கள் மலரச்சேய்வோம் !!!

வெற்றியின் சிகரத்தை நோக்கி போவோம்,
நாம் சந்திக்கும் துன்பங்களை இன்பங்களாக கருதுவோம் !!!

மகிழ்ச்சியின் எல்லையை எட்டி பிடிப்போம்,
நாம் எதிர்காலத்தின் முடிவுகளை சிந்திப்போம் !!!

நட்பின் ஆழத்தை என்றும் நிலை நாட்டுவோம்,
நாம் நமது இலட்சிய குறிக்கோள்களை தீர்மானிப்போம் !!!

நேர்மையின் வழியில் என்றும் செயல் படுவோம்,
நாம் வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்வோம் !!!

அறிவின் ஆற்றலை அச்சமின்றி துணிவுடன் வளர்ப்போம்,
நாம் மண்ணுக்கு முதல் மரியாதை செலுத்துவோம் !!!

பாசத்தின் பூக்களை பண்புடனும் பணிவுடன் சேகரிப்போம்,
நாம் ஒற்றுமையுடன் என்றும் கூடி வாழ்வோம் !!!

அன்பின் மழை பொழிய பிரார்த்தனை செய்வோம்,
நாம் நம் தாய் நாட்டுக்கு தலை வணங்குவோம் !!!

மனத்தூய்மை கொண்டு பிரபஞ்சத்தை சுத்தம் செய்வோம்,
நாம் நமக்கு வஞ்சனை செய்யும் நஞ்சு நிறைந்த,
நெஞ்சங்களை அமிர்தத்தை கொடுத்து நல் உள்ளங்களாக,
மாற்றி புது வரலாறு படைப்போம் !!!

-சிவசுப்பிரமணியன்

சனி, 23 ஜூன், 2012

கவிதை 26 - இயற்க்கை காதல்

ஆழமான கடலில் நான் கண்டெடுத்த முத்து நீ,
அழகான தோட்டத்தில் நான் தேடிவந்த மலர் நீ,
நீளவான நதியில் நான் ரசித்த நிலவும் நீ,

அற்புதமான கற்களில் நான் செதுக்கி வைத்த சிலை நீ,
சுத்தமான முட்களில் நான் பதுக்கி வைத்த மொட்டு நீ,
உயரமான மாமரங்களில் நான் எட்டி பிடித்த மாங்கனியும் நீ,

இயற்கையின் மொழிதனை புரிய வைத்த நீ யாரோ?
புரியாத புதிராக ஏங்கி தவிக்கும் நான் யாரோ?

நான் எங்கு தேடியும் உன்னை காணவில்லையே,
நீ என்னுள் இருப்பதை இன்னும் உணரவில்லையே,
நான் உன்னை பார்த்தாலே கடந்தகாலம் ஞாபகமில்லையே,

நீ என்னுடன் பேசினாலே வருங்காலம் தெரிவதில்லையே,
நான் உனக்காக சேர்த்து வைத்தேன் முத்துமாலையே,
நீ ஆனால் விரும்பியதோ அந்த வானவில்லையே,

நான் உன்னை வர்ணிக்க வார்த்தைகள் வரவில்லையே,
நீ என்னை விட்டு போக மனம் இடம் தரவில்லையே,
இல்லாத ஒன்றினை கற்பனை செய்ய சொன்னது நீ தானோ?
ஏதோ இருக்கும் என நம்பி ஏமாற்றம் அடைந்தது நான் தானோ?

சனி, 9 ஜூன், 2012

மெகா கவிதை 25 - நாட்டு நடப்பு (கடைசி பாகம் 9)


உலகின் ஏதோ மூலையில் நடைபெறும் கால்பந்து,கிரிகெட் போட்டிகளை
கண்டு களிக்க தொலைக்காட்சி மூலம் நேரடி ஒளிபரப்பு;
வெகுமதி பெறுவதற்கு அரசு ஊழியர்கள் நடத்தும் வேலை
நிறுத்தத்தால் எங்கும் கடை அடைப்பு;

நவீன தொழில் நுட்பத்திற்கு கிடைத்த ஞாபக சின்னம் தான்
சின்னஞ்சிறு அலைபேசி கண்டுபிடிப்பு;
சாலை விதிமுறைகளை மற்றும் சட்ட ஒழுங்கை கடைபிடிக்க
மக்களுக்கு ஏன் இவ்வளவு களைப்பு;

ஆன்மீக சிந்தனையில் பக்தி மார்க்கம் தேடி நடக்கும் சந்நியாசிகள்
சொந்த-பந்த,சுக-போகங்களை அர்பணிப்பு;
தவழும் குழந்தைகளுக்கு மற்றும் தள்ளாடும் முதியோர்களுக்கு
தர வேண்டும் அலட்சியமில்லாத கண்காணிப்பு;
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளம் எனப்படுவது
தரம் வாய்ந்த நாணயமுள்ள பொருட்களின் தயாரிப்பு;

(1௦௦ வது வரி) - அட்டவணை போட்டு வைத்தாலும் நிர்ணயிக்கமுடியாத
சுற்றுப்புற சூழல் நிகழ்வுகளை, ஒவ்வொரு வினாடியில் தோன்றும்
முடிவுகள் இல்லாத மாபெரும் மாற்றங்களை மற்றும் மக்கள்
எதிர்பார்க்காமல் ஏற்ப்படும் எல்லைகள் இல்லாத திடுக்கிடும்
சம்பவங்களை தண்டோரா போட்டு சொல்லும்
தொடர் வண்டி தான் இந்த நாட்டு நடப்பு !!!!!!!!!!!!!!!

மெகா கவிதை நாட்டு நடப்பு - முற்றும் :)

மீண்டும் என்னோட ஐம்பதாவது கவிதை மாபெரும்
நட்சத்திர தொடர் கவிதையாக உலா வரும்,
அது வரை உங்களிடம் இருந்து விடைபெறுவது,
சிவசுப்பிரமணியன் **

வெள்ளி, 8 ஜூன், 2012

மெகா கவிதை 25 - நாட்டு நடப்பு (பாகம் 8)


உலகின் அமைதியை எப்பொழுதும் சீர்குலைக்கும் வகையில்
ஆங்காங்கே தொடர் குண்டு வெடிப்பு;
தஞ்சம் என்று நம்பி வரும் அகதிகளுக்கு அடைக்கலத்துடன்
கொடுக்க கூடியது போதுமான சுதாரிப்பு;

குடிப்பழக்கத்திற்கும் புகை பிடிப்பதற்கும் தடை விதிக்க சட்டம்
கொண்டு வரக்கோரி மனுக்கள் அனுப்பினால் நிராகரிப்பு;
பிள்ளைகளின் மனதை நோகடிக்காமல் நாட்டின் முதுகெலும்பாக
மாற்றும் வகையில் ஆசிரியர்கள் கண்டிப்பு;

உள்ளுக்குள் ஒளிந்திருக்கும் திறமையை வெளிப்படுத்தி விட்டால்
யாவர்க்கும் தங்கபதக்கம் வாங்கிய நினைப்பு;
நீர்மட்டம் அதிகரிப்பதோடு தண்ணீர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி
வைக்கும் விடை - மாபெறும் அணைகளின்திறப்பு;

காதல் வலையில் மாட்டிக்கொண்டு காதலர்கள் ஓடி விட்டால்
அவர்களை பெற்றோருக்கு இரத்தக்கொதிப்பு;
அங்கீகாரம் மற்றும் போதுமான இட வசதிகள் பெறாத கல்லூரிகள்
முன்பு மாணவர்கள் கொந்தளிப்பு;

தொடரும் ...

வியாழன், 7 ஜூன், 2012

மெகா கவிதை 25 - நாட்டு நடப்பு (பாகம் 7)

உற்சாகத்துடன் பார்க்க தோன்றும் கிரிக்கெட் வீரர்களின்
அதிரடி ரன் குவிப்பு;
சிரத்தையுடன் விடாமுயற்சி செய்தால் எந்தத்துறையிலும்
உயர் பதவி நீடிப்பு;
நாள் தோறும் போட்டி போட்டுக்கொண்டு சூடான செய்திகளை
தரும் பல பத்திரிக்கை பதிப்பு;
தோல்வியை கண்டு அஞ்சாமல் வெற்றியை உருவாக்கும்
வழிகளில் சிந்தனையை திருப்பு;
பறவை காய்ச்சல் போன்ற நோய்கள் வராமலிருக்க
கிருமி நாசனி மருந்துகள் தெளிப்பு;
வேகமாக வளர்ந்து வரும் கணினி யுகத்தில் சாதனை
படைக்க விரும்புவது இளைஞனின் எதிர்பார்ப்பு;
அஸ்திவாரம் ஆணித்தரமாக கட்டினாலும் நிலநடுக்கம்
வந்தால் காணாமல் போய் விடும் குடியிருப்பு;
காதலன் ஏமாற்றி விட்டால் நடிகைகள் தற்கொலை செய்து
கொள்வது நிஜ வாழ்க்கையோடு ஏற்பட்ட சலிப்பு;
சிந்திக்க கூடிய தத்துவங்களை சிரிப்புடன் கலந்து தருவது
நல்ல சினிமா ஏற்படுத்தும் பிரமிப்பு;
ஏய்ட்ஸ் போன்ற குணமடையாத வியாதிகள் வராமலிருக்க
மக்களுக்கு தேவைப்படும் உணர்வு விழிப்பு;
சாப்பிடும் உணவிலிருந்து கட்டின வீடு வரைக்கும் பயனுள்ள
பொருட்களுக்கு வேண்டும் பராமரிப்பு;
வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியோடு தென் பட்டால் அதற்க்கு காரணம்
பெட்ரோல் - டீஸல் விலை குறைப்பு;

தொடரும் ...

திங்கள், 4 ஜூன், 2012

மெகா கவிதை 25 - நாட்டு நடப்பு (பாகம் 6)


குடும்பத்தில் சந்தேகத்தால் சிறு சண்டை வந்தாலும்
அக்கம் - பக்கம் முனுமுனுப்பு;
மழை நீர் மட்டுமல்ல எதிர்கால திட்டங்களுக்கும் உடனடி
தேவை தான் சேமிப்பு;
சுனாமி மட்டுமல்ல மற்றவர்கள் மனதை புண்படுத்துவதும்
தான் மிகப்பெரிய பாதிப்பு;
ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கு கூட கராத்தே
போன்ற வித்தைகள் தருவது தற்காப்பு;
நேரத்தை வீணாய்ச் செலவழிக்க மனிதன் கண்டு பிடித்த
யுக்தி தான் ஒத்திவைப்பு;
கறுப்பு பணம் சேகரிக்கும் தொழில் அதிபர்களை விட்டு
வைக்காது சட்டத்தின் வரி விதிப்பு;
மேடைகளில் துணிவோடு பேச வேண்டும் என்றால்
தவிர்க்க கூடியது படபடப்பு;
ஊனமுற்றோர் என்றால் ஒதுக்கி வைக்காமல் சமூகத்தில்
தர வேண்டும் ஊக்குவிப்பு;
இயற்க்கை சீற்றங்களை மற்றும் பெயர் தெரியாத வியாதிகளை
உயிர் பிரிந்த சடலங்கள் புதைப்பு;
தேசிய கீதம் பாடும் பொது ஒவ்வொரு குடிமகனுக்கும்
சல்யூட் அடிக்கச்செய்யும் சிலிர்ப்பு;
பாலைவனத்தில் நீர் வீழ்ச்சி கண்டால் உலகம் மறக்க
செய்யும் இயற்க்கை அரவணைப்பு;
அளவில்லாத ஆனந்தம் கிடைக்க மலைக்குன்றின்
உச்சிக்கு சென்று எதிரொலி எழுப்பு;


தொடரும் ...

வெள்ளி, 1 ஜூன், 2012

மெகா கவிதை 25 - நாட்டு நடப்பு (பாகம் 5)

 மலர்களாகவும் செல்வங்களாகவும் திகழும் மழலைகள்
செய்யும் ஆர்பாட்டம் தித்திப்பு;
காதலுக்கு மரியாதை செலுத்தி பிரியமுடன் வாழ்வதே
நல்ல ஜோடி அமைப்பு;
புகழ் ஏணியின் உச்சத்துக்கு போனாலும் மறக்க கூடாது
கடந்த கால வாழ்க்கை குறிப்பு;
கண்டுபிடிக்கப்பட்ட பல புது கருவிகள் மூலம் வேகமான
உலகில் அவசர செய்திகள் அறிவிப்பு;
வாழ்வில் ஏற்படும் திருப்பங்கள் மற்றும் நிகழ்வுகள்
யாவும் யூகிக்க முடியாத கணிப்பு;
சஞ்சலம் ஏற்பட்டாலும் கலங்காமல் கண்ணீரை துடைப்பது
பெற்றத்தாயின் கவனிப்பு;
ஆசைகளும் கனவுகளும் நிறைவேறி விட்டால் யாவருக்கும்
உலகின் அதிசயங்களை பார்க்கும் திகைப்பு;
கோபத்தை தூண்டுவதும் மற்றவர்களை இழிவு படுத்தி
பேசுவதற்கும் முதல் காரணம் இறுமாப்பு;
கணவன் மனைவி உறவு பிரிவில்லாமல் இருப்பதற்கு
தேவை வலுவான பிணைப்பு;
உறவுகளின் பந்தம் நேசத்தோடு உரு துணையாக இருக்க
உதவுவது பாசத்தின் இணைப்பு;
பக்தி பரவசத்துடன் இறைவனை வணங்கச்செய்வது
கோவில் மணி அழைப்பு;
விடுமுறை கொண்டாட்டம் என்றால் குடும்பமே
உல்லாச பயணத்தில் களிப்பு;

தொடரும்...

வியாழன், 31 மே, 2012

மெகா கவிதை 25 - நாட்டு நடப்பு (பாகம் 4)

சமுதாயத்தின் நிலைமையை எப்பொழுதும் உணர்த்த
மாணவர்களுக்கு வேண்டும் தனி வகுப்பு;
அவதாரங்கள் பல ஆண்டவன் எடுத்தாலும் குறையாது
மனிதன் செய்யும் தவறுகளின் தொகுப்பு;
சொந்த உயிரைக்கூட பொருட்படுத்தாமல் தேசத்தை
காப்பாற்றும் ராணுவ வீரன் தருவது பாதுகாப்பு;
விலை உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் மக்கள் ஆசைப்பட்டு
வாங்கும் தங்கம் பளபளப்பு;
அன்னையின் முழு அன்பு கிடைத்தால் மட்டுமே சீராகும்
பிள்ளைகளின் வளர்ப்பு;
மகிழ்ச்சியுடன் கூடிய பேரானந்த துளிகள் கொண்டு
வாழ்க்கை பாத்திரத்தை நிரப்பு;
தீவிரவாதிகளை கண்டுபிடிப்பபதில் போலீஸ் முதல் சிபிஐ
அதிகாரிகள் வரை காட்டும் பரபரப்பு;
அவரவர் கடமையை ஒழுங்காக செய்தால் கொடிகட்டி
பறக்கும் நாட்டின் தலைப்பு;
கல்வியின் தீப ஒளியை ஏற்ற ஆண் பெண் இருவருக்கும்
சமமாக தேவை படிப்பு;
நட்பின் பாலம் இடிந்து விழாமல் இருக்க நண்பர்களுக்கு
வேண்டும் இறுக்கமான பிடிப்பு;
புடவைகள் பல தினுசுகளாக வந்தாலும் அழகு தருவது
மடிசார் மாமி மடிப்பு;
விருதுகள் பல கொடுத்தாலும் மக்கள் மனதில் நீங்காது
இடம் பிடிப்பதே பிரம்மாதமான நடிப்பு;

தொடரும்...

வியாழன், 24 மே, 2012

மெகா கவிதை 25 - நாட்டு நடப்பு (பாகம் 3)

ஒருவன் தனது வேலைகளை உடனடியாக செய்ய
உதவுவது உடலின் ஒவ்வொரு உறுப்பு;
வாக்குரிமை என்ற கடமை நாட்டின் எல்லா குடிமகனின்
மாபெரும் பொறுப்பு;
ஐந்தறிவு படைத்த நன்றியுள்ள மிருகங்களிடம் காட்ட
வேண்டாம் வெறுப்பு;
தேடி வந்து நல்ல நட்பு கிடைக்கும் போது சொல்ல
வேண்டாம் மறுப்பு;
தவமாய் தவமிருந்து கிடைத்த பலனிர்க்கு கடவுள்
கொடுத்த வரம் தான் பிறப்பு;
எப்படிப்பட்ட மனிதர்களாக இருந்தாலும் தடுக்க
முடியாத விஷயம் இறப்பு;
பாபம் தெரிந்தே செய்த பாவிகளுக்கு நரகத்தில் கூட
இல்லை மன்னிப்பு;
ஆபத்துகளில் சறுக்காமல் இருக்க தேவை தன்னம்பிக்கை
எனும் துடுப்பு;
நாட்டின் முன்னேற்ற பாதைக்கு இளைஞர்களுக்கு தேவை
வெறியுடன் கூடிய நெருப்பு;
பிரச்னை என்பது ஒவ்வொரு மனிதனுக்கு கிடைத்த
தங்கமான வாய்ப்பு;
அடிமை நாடு சுதந்திரம் வாங்கி வல்லரசாக மாறினால்
புருவம் உயரும் வியப்பு;
தொடரும் ...

திங்கள், 21 மே, 2012

மெகா கவிதை 25 - நாட்டு நடப்பு (பாகம் 2)


நாட்டின் சுதந்திரத்திற்க்கு பாடுபட்ட தியாகிகள் மடிந்தது
மிக பெரிய இழப்பு;
பேராசை உள்ள மனிதர்கள் லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும்
அதிகரித்து விட்ட கொழுப்பு;
தீவிரவாதம் இல்லாத நாடு கிடைக்க முதல் தேவை
வன்முறையின் அழிப்பு;
அகந்தை உள்ள மனிதர்கள் தானம் கொடுக்கும் பொழுது
கூடாது பழிப்பு;
விவசாயிகள் சிந்தும் வியர்வை துளியால் தன தானியம்
யாவும் செழிப்பு;
மாநிலத்தின் முதல் மாணவனாக பரீட்சையில் தேர்ச்சி
பெற்றால் பெற்றோர்களுக்கு பூரிப்பு;
குதூகலமாக நூறு வயது வரை வாழ வைக்கும்
மத்தாப்பு தான் சிரிப்பு;
ஒவ்வொரு மொழிகள் பேசும் போது வார்த்தைகளுக்கு தேவை
சரியான உச்சரிப்பு;
பணம் மட்டுமில்லாமல் நல்ல மனமும் இருந்தால் தான்
சமூகத்தில் மதிப்பு;
ஒழுக்கம் கற்றுக்கொள்ள தேவையானது சிகரம் தொட்ட
மனிதர்களின் சந்திப்பு;
எத்தனை நிறங்கள் வந்தாலும் மாறாமல் இருப்பது
வறுமையின் நிறம் சிவப்பு;
பத்து மாதம் சுமந்து பெற்ற அன்னையின்
கருவறை நிறம் கறுப்பு;
தொடரும்....

ஞாயிறு, 20 மே, 2012

மெகா கவிதை 25 - நாட்டு நடப்பு (பாகம் 1)

 உலகில் வாழும் உயிரினங்கள் யாவும் இறைவனின் படைப்பு;
சுறுசுறுப்புடன் வாழ்வில் வெற்றி பெற வேண்டும் உழைப்பு;
சவால் போட்டிகளில் ஜெயம் கிடைக்க தேவை துடிப்பு;
கிராமங்களில் இப்பொழுதும் மாறாமல் இருப்பது மண்வாசனையுடன் அடுப்பு;
நகரங்களில் எப்பொழுதும் மாறிக்கொண்டே இருக்கும் நாகரீக உடுப்பு;
அரசியல் தலைவர்களின் செல்வாக்கை பிரபலமாக்க அவர்களுக்கு எடுப்பு;
இன்பம் வரும் நேரத்தில் சந்தோஷத்தை வெளிபடுத்த கொடுப்பது இனிப்பு;
துன்பம் வரும் நேரத்தில் துக்கத்தை காட்டிக்கொள்ளாமல் உள்ளுக்குள் கசப்பு;
பணக்காரர்கள் தங்களது பிறந்த நாளை கூட கொண்டாடும் முறை சிறப்பு;
ஏழைகள் தங்களது வாழ் நாள் முழுவதும் கஷ்டப்பட்டு போராடுவதில் தவிப்பு;
உண்மை குற்றவாளிகளை விடுவித்து நிரபராதிகளை தண்டிப்பது தவறான தீர்ப்பு;
மதங்களும் ஜாதிகளும் இல்லாமல் இருக்க செய்யும் சக்தி ஒற்றுமை ஈர்ப்பு;
நோய்களை மட்டுமல்லாமல் எதிரிகளையும் விரட்ட வைக்கும் சக்தி எதிர்ப்பு;

தொடரும் ...

ஞாயிறு, 13 மே, 2012

கவிதை 24 -கல்லூரித்தோழன்

சிறு வேலையை கூட சுறுசுறுப்பாகவும் பரபரப்பாகவும்
செய்து முடிக்கும் நாணயமுள்ள நண்பனே;
உன் நகைச்சுவை சரவெடிகள் யாவும் யாவரையும்
சிரிக்க மட்டுமல்ல சிந்திக்க வைத்தன;
உன் திறமையான செயல்கள் எங்கேயும் எப்போதும்
சந்தோஷப்பட மட்டுமல்ல ஆச்சரியப்பட வைத்தன;

உன் உதவும் குணத்திற்கு பாராட்டு பதக்கம் கொடுக்கட்டுமா ?
உன் வேடிக்கை பேச்சுக்கு புலமை புகழாரம் சூடட்டுமா ?
முன் யோசனை தரும் உன் புத்திக்கு வெற்றிமாலை அணியட்டுமா ?

சோதனைகளை சாதனைகளாக மாற்றி நம் நட்புக்கு
முதல் மரியாதை கொடுக்கும் தோழா,
உன் தன்னம்பிக்கை உன் வாழ்வுக்கு மட்டுமல்ல
பிறர் வாழ்வுக்கும் கை கொடுக்கும் ...
உன் லட்சிய பயணத்தில் எப்பொழுதும்
சிரிப்பு என்ற பூ தளராமல் பூக்கட்டும் ....
நட்பு என்ற பூ மறவாமல் மலரட்டும் ...

நம் கல்லூரி நினைவுகள் உன்னை தாலாட்டும் போது
முதன் முதலில் ஞாபகம் வருவது நம் நட்பாக இருக்கட்டும் ...!

நட்பு வரமா தவமா?
சிவசுப்பிரமணியன்